கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.! சிவா பசுபதியிடம் விரக்தியில் கூறினார் விக்னேஸ்வரன் !

இணையங்களில் வந்த செய்தியை உறுதிப்படுத்தியது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை. முன்நாள் சட்டமா அதிபர் திரு சிவா பசுபதி அவர்களிடம், வட மாகாண சபை முதல்வர் திரு விக்னேஸ்வரன் விடுத்த வேண்டுகோளை அவர் மறுத்ததாகவும், அதனால் முதல்வர் விசனமுற்றதாகவும் வந்த செய்தி பற்றி திரு விக்னேஸ்வரனிடம் வினவியபோது, இது தமிழ் மக்கள் பேரவைக்கு எதிரானவரின் விசமத்தனமான செயல் என்றும், தான் அது பற்றி கருத்து கூறத்தேவையில்லை என கூறியுள்ளார். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதுபோல் அரசியல்வாதிகள் பலதுபட்டால் செய்தியாளர் காட்டில் மழை.

உண்மையில்லாமல் தானாக கை கால் முளைத்து அந்த செய்தி உலாவரவில்லை. அதனால் தான் புகைந்தது. அதைப்பற்றி மக்களுக்கு விளக்கவேண்டிய அவசியம், முன்னாள் சட்டமா அதிபருக்கு உரியதல்ல. ஏனெனில் அவர் ஓய்வு பெற்ற பின் அவுஸ்ரேலியா சென்றுவிட்டார். புலிகள் சார்பாக சட்டவாக்க நடவடிக்கையில் ஈடுபட்டது மட்டும் அவர் செயல். ஆனால் உயர் நீதிமன்ற நீதியரசர் ஓய்வு பெற்ற பின் அரசியலுக்கு வந்து முதல்வர் ஆகிவிட்டார். அதனால் மக்களுக்கு பதில் சொல்லும் கடமை அவருக்கு உண்டு. ஏனெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக, அதுவும் முக்கியமாக தமிழ் அரசு கட்சி தெரிவில் முதல்வர் கதிரையில் அமர மக்கள் அவருக்கு வாக்களித்தனர்.

அப்படி இருக்கையில் வாக்களித்த மக்களின் அபிப்பிராயம் அறிய முன்பே, அவர்களின் ஆதரவை இழந்தவர்களின் அழைப்பை ஏற்று, புத்திஜீவிகளின் கூட்டுக்கு தலைமை தாங்கி தமிழ் மக்கள் பேரவை உருவாக்கத்துக்கு ஊக்கம் கொடுப்பவர் முதல்வர். அதனால் அதன் நடவடிக்கைக்கு உகந்தவராக தன் சார்பில் முன்னாள் சட்டமா அதிபரை செயல்ப்பட அழைத்தாரா? இல்லையா? அந்த அழைப்பை அவர் ஏற்றாரா? இல்லையா? என்ற செய்திக்கு நேரடியாக பதில் கூற கடமைப்பட்டவர் முதல்வர். அதை விடுத்து பேரவைக்கு எதிரான விசமத்தனமான செயல், அது பற்றி கருத்து கூற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என கூறுவது, அவரின் முன்னுக்கு பின்னான முரண்பட்ட செயலாகத்தான் பார்க்கப்படும்.

எதிலும் வெளிப்படைத்தன்மை வேண்டும், மக்களுக்கு நடப்பதை பட்டவர்த்தனமாக தெரியப்படுத்த வேண்டும் என, இதுவரை நடந்த இரண்டு பேரவை அமர்விலும் முதல்வர் உறுதியாக கூறிவிட்டு இப்போது, இவ்வாறு தெளிவாற்ற பதிலை கூறி ஊகங்களுக்கு வழிவிடுவது, எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதா ஒன்றாகவே பார்க்கப்படும். உண்மையில் அவ்வாறான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தால் அதில் தவறில்லை. சட்டவாக்கத்தில் நீண்ட அனுபவம் கொண்ட ஒருவரை உள்ளடக்க முனைதல் வரவேற்கத்தக்கது. அதே வேளை அவ்வாறான அழைப்பை அவர் ஏற்க மறுத்திருந்தால், அதுபற்றி வெளிப்படையாக நான் அழைத்தேன், அவர் ஏற்கவில்லை என்ற ஒரு வரி பதில் கூட பலவிதமான வதந்திகளை வடிகட்டி இருக்கும்.

இன்று ஊகத்தில் திரு சிவா பசுபதி என்ன சொல்லி மறுத்தார் என அவரவர் விருப்பு தெரிவுக்கு ஏற்றவாறு எழுதும் நிலையை முதல்வரே ஏற்படுத்தி உள்ளார். தெளிவற்ற பேச்சு, செயல் தேவையற்ற விமர்சனங்களை, ஊகங்களை மக்கள் மனதில் மாட்டுமல்ல மூத்தவரான தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் திரு ஆனந்தசங்கரி அவர்களுக்கும் ஏற்படுத்தி உள்ளதை அவரது அறிக்கை அறியத்தருகிறது. தமிழ் மக்கள் பேரவையை ஓர் அரசியல் கட்சியாக மாற்றி செயற்பட வேண்டுமெனவும், அவ்வாறு செயற்பட்டால் அதற்கு தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்கக் தயாராக இருப்பதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் தற்போது தொடங்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஒத்தாசையாகவே செயற்படும், இதற்கு எதிர்ப்பில்லை ஆதரவாகவே செயற்படும் என தினமும் வெளிவந்து கொண்டிருக்கும் பத்திரிகை அறிக்கைகள் மக்கள் மத்தியில் குழப்பத்தை தோற்றுவித்துள்ளது. இக்கருத்து உண்மையாக இருக்குமானால் அது பிரயோசனம் எதையும் தராது என்பது மட்டுமல்ல மாற்று வழியை கையாளுவதற்கு முட்டுக்கட்டையாகவே அமையும். எனவும் ஆலோசனை வழங்கி உள்ளார்.

மொத்தத்தில் வடமாகாண முதல்வரும் தமிழ் மக்கள் பேரவை தலைவருமான திரு விக்னேஸ்வரன் அவர்களின் செயல் வெளிப்படைத் தன்மை அற்றதாகவே தொடர்கிறது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல முதல்வராக பதவி ஏற்றது முதல் தொடரும் நிகழ்வுகள் ஏறச் சொன்னால் எருதுக்கு கோபம் இறங்கச் சொன்னால் இயலாதவனுக்கு கோபம் என்பது போலவே நடைபெறுகின்றன. யார் சரி யார் பிழை என்பதற்கு அப்பால் எவரிடமும் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது மட்டும் உண்மை.

உண்மையில் நடந்தது என்ன என விசாரித்ததில் விசமத்தனமற்ற தகவல் கிடைத்தது. முன்நாள் சட்டமா அதிபர் திரு சிவா பசுபதி சில மாதங்களுக்கு முன்பே இலங்கைக்கான தனது தனிப்பட்ட பயண ஏற்பாட்டை செய்துள்ளார். அவர் வரும் தகவல் அறிந்த உள்நோக்கம் கொண்ட பயனாளிகள் அவர் முதல்வரின் அழைப்பில் வருவதுபோலவும், அவரது சார்பில் சட்டவாக்க செயல்பாட்டில் ஈடுபட போவதாகவும் செய்தியை வெளியிட்டு, திரு சிவா பசுபதியை சங்கடத்துக்கு உட்படுத்தியதால் அவர் கொழும்பில் நின்ற வேளை, பலரை சந்திப்பதை தவிர்ப்பதற்காக கையடக்க தொலைபேசியை கூட பாவிக்கவில்லை.

அதே வேளை மிக முக்கியமான தமிழ் அரசியல் பிரமுகரை தொடர்புகொண்டு தன்னை சம்மந்தபடுத்தி வந்த தகவலால் தனக்கு ஏற்பட்டுள்ள சங்கத்தை கூறி விசனப்பட்டிருக்கிறார். திரு விக்னேஸ்வரனின் செயல்பாடு காலத்துக்கு ஒவ்வாதது, தற்போது எமக்கு தேவைப்படுவது ஒற்றுமையே அன்றி பிரிவினை அல்ல, நாட்டிலும் சர்வதேசத்திலும் ஏற்பட்டிருக்கும் எமக்கு சாதகமான சூழ்நிலையை நாம் சரியாக கையாண்டு ஒரு தீர்வை நோக்கி நகரவேண்டும் என கூறி, தான் எந்த வகையிலும் விக்னேஸ்வரன் அழைப்பை ஏற்கப்போவதில்லை இது எனது தனிப்பட்ட விஜயம் எனவும் விளக்கியுள்ளார்.

திரு சிவா பசுபதியை தொடர்புகொள்ள எடுத்த விடாமுயற்சியில் வெற்றிகண்ட விக்னேஸ்வரன் யாழ்பாணத்தில்வைத்து அவருடன் தொலைபேசியில் தனது கோரிக்கையை வைத்துள்ளார். அதை ஏற்க மறுத்த திரு சிவா பசுபதி அதன் பாதகதன்மையை விளக்கி, வேண்டாம் இந்த பிரிவினை என கூறியபோதும் விக்னேஸ்வரன் விடாப்பிடியாய தமிழ் மக்கள் பேரவையின் ஆழ அகலம் பற்றியும், அது ஏன் காலத்தின் கட்டாயம் எனவும் விளக்கிய போதும், திரு சிவா பசுபதி விடாப்பிடியாக தனது முடிவில் உறுதியாக இருந்ததால் விசனம் அடைந்த முதல்வர் முன்நாள் சட்டமா அதிபரிடம் “கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என கூறி தொலைபேசியை துண்டித்துவிட்டார்.

(ராம்)