தமிழினி உட்பட உயிரிழந்த மூவரும் இயக்கத்திலேயே நோயுற்றிருந்தனர்

தமிழினிக்கோ அல்லது சிவரதிக்கோ இயக்கத்திலிருந்து வெளியில் வந்த பின்னர் புற்றுநோய் ஏற்படவில்​ைலயெனவும் அவர்கள் இயக்கத்தில் இருக்கும் போதே புற்றுநோய்க்குள்ளானதாகவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த போராளியான தமிழ்கவி தெரிவித்தார்.

வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

புனர்வாழ்வு முகாமுக்கு போனார்கள் அங்கு எதையோ கொடுத்தார்கள் அதனால் இறந்து விட்டார்கள் என சொல்கின்றார்கள். ஆனால் நாங்கள் இயக்கத்தில் சிவரதி என்ற பிள்ளைக்கு பாரிய வேலைகள் கொடுப்பதில்லை. அவருக்கு இலகுவான வேலையே கொடுக்கப்பட்டிருந்தது. ஏனெனில் அவர் இயக்கத்திலிருந்தபோதே ஏற்கனவே நோயாளியாக இருந்தார். எனக்கு தெரிய உயிரிழந்த தமிழினி, சிவரதி உட்பட மூன்று பெண் போராளிகளும் ஏற்கனவே நோயாளிகளாகவேயிருந்தனர்.

அவர்களுக்கு ஏற்கனவே புற்று நோய் இருந்தது. நான் ஒரு முன்னாள் போராளி. இறுதிக்கட்டம் வரை போராட்டத்தை சந்தித்தவள் நான். அதன் பின்னர் புனர்வாழ்வு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டேன். எமக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. கையில் ஒரு சொப்பின் பேக்குடன் வட்டுவாகல் பாலத்தின் ஊடாக வந்தோம். புனர்வாழ்வு முடிந்து வந்த போது கையை வீசிக்கிக்கொண்டே வந்தோம். ஆனால் 15 நாட்களுக்கு ஒருமுறை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் வந்து எங்களை பார்ப்பார்கள்.

உதவி செய்வோம் என்பார்கள், கூட்டம் வைப்பார்கள், அது தரவா, இது தரவா என்று கேட்பார்கள். ஆனால் ஒன்றும் தரமாட்டார்கள். இந்நிலைக்குள்தான் நாம் எதிர்நீச்சல் அடித்து வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். எதிர்காலத்தில் இவ்வாறான போர் இடம்பெறாதிருக்கத்தான் நாம் இன்று நல்லிணக்கம் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம்.

ஆனால் இந்த நல்லிணக்கம் மனங்களால் ஏற்படுத்தப்படவேண்டியதே தவிர அரசியல்வாதிகளால் அல்ல. எங்களுக்குள் மன மாற்றம் வரவேண்டும். சிங்கள மக்கள் எங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஏனெனில் நான் விடுதலைப்புலியாகவே வெளியில் வந்த பிறகு கொழும்பு ,அநுராபுரம் போன்ற பிரதேசங்களுக்கு சென்றிருக்கின்றேன். முச்சக்கரவண்டியில் சிங்கள சாரதியுடன் சென்றபோது யுத்தம் தொடர்பாக கதைத்தேன்.

அப்போது அவர் எவ்வாறு சரியாக சொல்கின்றீர்கள் என்றார். நான் விடுதலைப்புலி என்றேன். அப்போது அவர் கூறினார். நான் பாக்கியம் செய்தவன் விடுதலைப்புலி உறுப்பினரை சந்தித்துவிட்டேன் என்றார். ஏனெனில் அவர்களிடம் வேற்றுமையும் இல்லை விரோதமும் இல்லை.

நாங்கள் உரிமைக்காகத்தான் போராடினோம். அதற்காகவே உயிரைக்கொடுத்தோம். ஆனால் இந்த நாட்டில் மாத்திரமே விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக பார்க்கின்ற நிலை உள்ளது. இன்றும் கூட பயங்கரவாதம் என்ற சொல் அரசாங்கத்தின் எந்த அறிக்கையில் இருந்தும் அகற்றப்படவில்லை. அந்த பயங்கரவாதம் என்ற சொல் இருக்கும் வரை எங்களிடம் ஆறுதலை பார்க்கமுடியாது.

ஒருவர் இந்த அவையில் புனர்வாழ்வு நிலையங்களில் இருந்து பெண்களை கடத்திச்சென்று இராணுவம் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக தெரிவித்தார். அவர் அங்கு என்ன எல்லாவற்றையும் அவர் பார்த்துக்கொண்டா இருந்தார். புனர்வாழ்வு முகாமில் இருந்து 2000 பெண்களுக்கு மேல் வெளியில் வந்துள்ளோம். புனர்வாழ்வு முகாமுக்குள் ஆண்கள் வரவும் முடியாது அவ்வாறு எவர்களும் வந்ததும் இல்லை. வெளியில் கொண்டு செல்வதாக இருந்தாலும் இரண்டு பெண் பொலிஸாருடன் தான் கூட்டிச்செல்ல முடியும்.

ஆனால் போராளி என்று சொல்லாமல் எங்காவது ஒளித்திருந்து பின்னர் பக்கத்து வீட்டுக்காரரால் காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டவர்களுக்கு என்னவாவது நடந்ததா என்பது தெரியாது.

புனர்வாழ்வு முகாமில் இருந்த பெண்களுக்கு எதிராக அவதூறு பேசுபவர்களுக்கு எதிராக மானநஷ்ட வழக்கு போடுவோம்.

ஊடகங்களும் நல்லிணக்கத்திற்கு எதிராக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஊடகங்கள் சரியாக செயற்பட்டிருந்தால் நல்லிணக்கம் எப்போதோ வந்திருக்கும்.

இதேவேளை தமிழ் பிரதேசங்கள் எங்கும் சிங்கள உயர் அதிகாரிகள் நியமிக்கப்படவேண்டும். அப்போதுதான் தமிழர்கள் ஒவ்வொரு தேவைக்கும் அவர்களிடம் போகும்போதும் தமிழர்களின் பிரச்சினை அவர்களுக்கு புரியும் என தெரிவித்தார்.

(Thinakaran)