தொடரும் அடாவடித்தனங்கள், அராஜகங்கள்!

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகிலுள்ள விடுதியொன்றில் பகல்வேளை சடுதியாக உள்ளே நுழைந்த வாலிபர்கள் குழுவோன்று, அங்கே அறையொன்றில் தங்கியிருந்த வயதுக்கு வந்த ஆணையும் பெண்ணையும் மிரட்டிக் கேள்விக்கு மேல் கேள்விகள் கேட்கிறார்கள். பெண் அந்த வாலிபர்களிடம் ‘அண்ணை, அண்ணை’ என ஏதேதோ சொல்லி மன்றாடுகிறாள், கதறுகிறாள், தனது ஊரைச் சொல்கிறாள், வீடியோ எடுக்க வேண்டாமெனக் கெஞ்சுகிறாள். அப்போது வாலிபர்களில் ஒருவன் அந்தப் பெண்ணோடு நெருக்கமாக நின்று கொண்டிருக்கும் ஆணின் கன்னத்தில் அறைகிறான். அடி விழுந்த பின்னர் அவன் கன்னத்தை பொத்தியபடி நிற்கிறான். அந்தப் பெண் அடிக்க வேண்டாமென அலறுகிறாள். இவ்வளவு கொடுமைகளும் காணொளியாக Youtube இல் பார்க்கலாம்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்களுக்கு கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் நடைபெறவிருந்த மண்டபத்திற்கு வருகை தந்திருந்த சுமந்திரனையும் அவரது துணைவியாரையும் தமிழ்ப்பெடியள் கூட்டமொன்று சூழ்ந்து கொண்டு கேள்விக்கணைகளால் துளைக்கிறார்கள். ‘பிரபாகரன் படையணி மீண்டும் மண்ணில் கால் பதிக்கும்’ என அந்த மண்டபத்திலுள்ள மேடை மீதேறி ஒருவன் கத்துகிறான். சுமந்திரனை நோக்கி ‘துரோகி’ எனக் கூச்சலிட்டு, அவரை மண்டபத்தைவிட்டு வெளியேறச் சொல்லி கத்துகிறது அந்தக் கூட்டம். அத்துடன் 2009 இல் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தது இன அழிப்பல்லவென சுமந்திரன் கூறியதாக அந்தக் கூட்டம் வாதாடுகின்றது. சுமந்திரன் தான் ஒருபோதும் அப்படிக் கூறவில்லையென மறுக்கிறார். எல்லா நிகழ்வுகளையும் பலர் கைத்தொலைபேசி வாயிலாக படம் எடுக்கிறார்கள். தமிழ்க்கைதிகள் இலங்கைச் சிறையில் உண்ணாவிரதம் இருக்கையில் அவுஸ்திரேலியாவிற்கு ஏன் வந்தீர்களென, அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்தவன் ஒருவன் கேட்கிறான். இந்த காட்சிகள் அனைத்தையும் துண்டு துண்டாக Youtube இல் பார்க்கலாம்.

சென்னையிலிருந்து வெளியாகும் ‘ஹிந்து’ நாளிதழ் குழுமத்தின் ஆய்வு அமைப்பான, ‘அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஹிந்து மையம்’ என்ற அமைப்பினால் ,இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம் குறித்து சென்னையில் கருத்தரங்கு ஒன்று நடந்தது. இந்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது என்று முன்னாள் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் முன்னாள் மேற்கு வங்காள ஆளுநர், எம்.கே.நாராயணனுக்கு முற்கூட்டியே மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைப் பொருட்படுத்தாமல், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.கே.நாராயணனுக்கு, ‘நீதாண்டா எல்லாத்துக்கும் காரணம்’ என்று கூறி தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவன் செருப்பால் பலமுறை தாக்கியுள்ளான்.

கடந்த சில வாரங்களில் நடந்த இந்த 3 சம்பவங்களும் ஒரு குறுக்கு வெட்டு. இவைகள் இப்போதுள்ள இலங்கை தமிழ் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த நிலவரங்கள் எப்படிப் போகின்றது என்பதை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுவதற்கு போதுமானவை. ஒரு சில ஊடகங்களில் இவைகள் செய்திகளாக வெளிவந்த பொழுதும் நாராயணன் தாக்கப்பட்டதற்கு மாத்திரமே கண்டனங்கள் வெளிவந்தன. கடந்த சில ஆண்டுகளாக ‘இலங்கைத்தமிழர் ஆதரவு’ என்ற பெயரில் தமிழகத்தில் முடுக்கி விப்பட்டிருக்கும் தீவிரவாதத்திற்கு புலம் பெயர் தமிழர் அமைப்புகளில் சில பின்னணியில் உள்ளன என்ற சந்தேகம் பலர் மத்தியில் நிலவுகின்றது. யாழ் விடுதி மற்றும் சிட்னி காட்சிகள் ‘எங்கன்ர பெடியன்களின்’ சாகசங்களை நியாயப்படுத்தி பிரச்சாரம் நோக்கிலேயே லுழரவரடிந இல் பதிவேற்றப்பட்டுள்ளது. சுமந்திரனை மிரட்டியவர்கள் புலம்பெயர் புலி(ப்பெடியன்)களே. தமிழ் தேசியக் கூட்டமைப்போடு இவர்களுக்கு முரண்பாடு கிடையாது, ஆனால் சுமந்திரனோடு மாத்திரமே முரண்பாடு என்பது தெளிவாகத் தெரிகின்றது.

சென்னையிலும் சிட்னியிலும் நடந்தவைகள் 2009 இல் முள்ளிவாய்க்காலில் முடிந்துபோன யுத்தத்துடன் தொடர்புபட்டன. ஆனால் யாழ் விடுதியில் நடந்தது இதிலிருந்து கொஞ்சம் வேறுபட்டது. அதாவது திருமணம் செய்யாமல் ஆணும் பெண்ணும் உறவில் ஈடுபடுவது ‘சமுதாயச்சீர்கேடு’, அதனை தட்டிக்கேட்க ‘பெடியன்கள்’ ‘தன்னெழுச்சி’ கொண்டுவிட்டார்கள் என்ற செய்தியையே இது சொல்ல விழைகின்றதென எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ‘பெடியன்களின்’ இந்தக் காரியமே உண்மையில் ஒரு சமுதாயச்சீர்கேடு. தனிமையில் இருக்கும் வயதுக்கு வந்த இருவரது சுதந்திரத்தை தடைவிதிப்பதற்கான அதிகாரம் இந்தக் கட்டாக்காலிகளுக்கு கிடையாது. அத்துமீறலை ஒழுக்கநெறியாக மிரட்டி இன்பம் காணும் வக்கிரம் பிடித்தவர்களை சட்டத்தின் முன்னே நிறுத்துவது வடமாகாண சபை நிர்வாகத்தின் பொறுப்பல்லவா? இது நேரடியாக அரசியலோடு தொடர்பில்லாதது மாதிரி தெரிந்தாலும், தமிழ் தேசியவாதம் இன்று நிலையூன்றி நிற்பதற்கான அடிப்படையே இந்த மிரட்டல் அரசியலே.

(மணிக் குரல்)