பதில் சொல்லுங்கள் ஐங்கரநேசா?!

ஐங்கரநேசன் பொறுப்பு வகிக்கும் விவசாய அமைச்சின் கீழ் கூட்டுறவுத்துறை, விவசாயம், நீர்ப்பாசனம், குடிநீர் விநியோகம்இ சுற்றுச்சூழல் எனப் பல துறைகள் உள்ளடங்குகின்றன. இவை அனைத்தும் மிக முக்கியமானவை. இவற்றை வைத்துக்கொண்டு பெரும்நிதிச் செலவைச் செய்து கொண்டிருக்கிறாரே தவிர பயனாக எந்தச் செயலும் இதுவரை நடந்ததில்லை. சில மாதங்களுக்கு முன் நான் யாழ்ப்பாணம் போயிருந்தபோது அங்கேயிருந்து வெளியாகும் ஒரு பிராந்தியப் பத்திரிகையில் ‘ஐயோ ஐங்கரநேசன்’ என்ற தலைப்பில் சில பத்திகளைப் படித்தேன். வடக்குமாகாண சபையின் விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசனின் தவறுகளையும் குறைபாடுகளையும் விமர்சிக்கும் பத்தி. நெத்தியடியாக பல விசயங்கள் அதிலே எழுதப்பட்டிருந்தன.

முக்கியமாக ஊழல் சம்மந்தப்பட்டவை. அங்கே நின்ற இரண்டு வாரத்திலும் ஏறக்குறைய மேலும் நான்கு பத்திகள் ஐங்கரநேசனைப்பற்றி வந்திருந்தன. எல்லாமே கடுமையான விமர்சனங்கள். இதைப்பற்றி அங்கே என்னுடைய நண்பர்களிடம் கேட்டபோது ‘இந்த விசயங்களில் உண்மைகள் இல்லாமலில்லை. ஆனால் இதையெல்லாம் யாழ்ப்பாண மக்கள் இப்போது நம்ப மாட்டார்கள். ஏனென்றால் இந்தப் பத்திரிகை அவர்களுடைய அரசியலுக்கு எதிராக இருப்பதால் அந்த எதிர்ப்புணர்வினால்தான் அப்படி எழுதுகிறார்கள் என்று மக்கள் பார்ப்பார்கள். இதனால் இதையெல்லாம் இப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் காலம் கடந்த பிறகு எல்லாம் முழுசாக நாறினாப்பிறகுதான் எங்கட ஆக்களுக்கு ஞானக்கண் திறக்கும்’ என்றார்கள் அந்தப் பத்திரிகை தினமுரசு ஆகும்.

அந்த நண்பர்கள் சொன்னது அப்படியே இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. உண்மைகள் எத்தனைதான் பலமாக இருந்தாலும் அவை பகிரங்கமாக உணரப்படுவதற்கு அதற்கான காலம் வரவேணுமா? என்ற கேள்வி எழுகிறது. அல்லது தமிழ்ச்சமூகத்தின் அவல நிலைதான் இதற்குக் காரணமா? அதனால்தான் சுட்டபின் தெரிவதும் பட்டபின் புரிவதும் என்று தமிழர்கள் இருக்கிறார்களா? ஏனென்றால் ஒரு விடயம் பற்றிய உண்மை எது என்பதற்கு அப்பால் அதை யார் சொல்கிறார்? என்று பார்க்கின்ற வழக்கமே இன்றுள்ளது. இதனால் தவறுகள் சுட்டிக்காட்டப்படாமல் போகின்றன.

உண்மைகள் உரைக்கப்பட்டாலும் பெறுமதியற்றுப் போகிறது. இதற்கு இன்னொரு உதாரணமாக வடக்குமாகாணசபையில் விவசாய அமைச்சருக்கு எதிராக நிறைவேற்றப்பட்டிருக்கும் சம்பவமும் இந்த விசயமும் உள்ளது. கடந்த வாரம் ( 09.02.2016) வடக்கு மாகாணசபையில் அதனுடைய விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு எதிராக ஆளுங்கட்சியினரால் ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணையை முன்மொழிந்தவர் மாகாணசபை உறுப்பினர் லிங்கநாதன்.

இவர் முன்னர் வவுனியா நகரசபையின் முதல்வராக இருந்தவர். இந்தப் பிரேரணையில் பல குற்றச்சாட்டுகளை ஐங்கரநேசனுக்கு எதிராக ஆளுங்கட்சியினர் ஆதாரபுர்மாக நேரடியாகவே முன்வைத்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் மறுக்க முடியாத நிலையில் ஐங்கரநேசன் அங்கே தடுமாறினார். பதிலாக இது தனக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட ஒரு சதி என்றும் இதற்கு சபை முதல்வர் திட்டமிட்டு இடமளித்திருக்கிறார். அது தவறானது என்று மட்டும் கூறி சபை முதல்வர் சீ.வி.கே. சிவஞானத்தைக் கண்டித்தார். ஆனாலும் ஐங்கரநேசனின் பதில் பொருத்தமாக இருக்கவில்லை. அது அளிக்கப்பட வேண்டிய பதிலை விட்டு விலகி கண்ணியமற்றதாக இருந்தது.

ஐங்கரநேசனின் மீதான குற்றச்சாட்டுகள்:

1.இரணைமடு நீர்பாசன திட்டத்திம் தொடர்பிலான பொருத்தமற்ற செயற்பாடுகள்
2.பாத்தீனிய ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகளில் முறைகேடும் பொருத்தமற்ற நடவடிக்கை.
3.பளை பிரதேசத்தில் நிறுவப்பட்ட காற்றாலை தொடர்பிலான நிதிமுறைகேடு விடயம்
4.சுன்னாக நிலத்தடி நீர் தொடர்பிலான குழப்பகரமான செயற்பாடுகள்
5.மருதங்கேணி கடல்நீரை நன்னீர் ஆக்கும் சர்ச்சைக்குரிய செயற்பாடு
6.கார்த்திகை மாதமர நடுகை யின் போலித்தனம்
7.அனர்த்த நிவாரண விநியோகத்தில் காணப்படும் பாரபட்சம்
8.உழவர் திருநாள் நிகழ்ச்சி விவகாரம் – தமிழகத்தில் இருந்து கவிஞர் வைரமுத்து அழைக்கப்பட்டமையும் அதற்கான பெருந்தொகை செலவும்.
9.மலர்க்கண்காட்சி தொடர்பான குறைபாடுகள்
10.விவசாய தினம்இ மண் தினம் போன்றவை தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களுக்கு உரிய முறையில்அறிவிக்காமல் நடாத்தியமை
11.இந்த விழாவுக்கானசெலவீனங்களை வெளிப்படுத்தாமை
12.கூட்டுறவு துறையில்உள்ள முறைகேடுகளை சீராக்காமை
13.விவசாய துறையில் பலசெயற்திட்டங்களை முன்னெடுக்காமை
14.சிறு குளங்களைபுனரமைக்க மத்திய அமைச்சு அழைத்த போது அதனைநிராகரித்தமை
15.மூங்கில் மல்லிகை போன்றவற்றை வவுனியாமாவட்டத்தில் நாட்ட அனுமதிக்காமை
16.வவுனியா மன்னார் மாவட்டங்கள் தொடர்ந்து விவசாய அமைச்சினால் புறக்கணிக்கப்பட்டுவருகின்றமை
போன்ற பல்வேறு முறைகேடுகளில்வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஈடுபட்டதாகமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் பிரேரணைமாகாண சபையில் முன் மொழிந்தார். இதனையடுத்து மாகாணசபை உறுப்பினர்களான இ. ஆர்னோல்ட், எஸ் சுகிர்தன், தியாகராஜா , சயந்தன், சர்வேஸ்வரன் ஆகியோர் தமது தரப்பிலிருந்தும் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ‘விவசாய அமைச்சினால் தொடர்ந்து வவுனியா மாவட்டம்புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. மரநடுகை மாதம் என கூறிகன்றுகளை நடப்பட்டன. அவை இன்று அழிந்து போயுள்ளன. ஆடுமாடுகள் அவற்றைத் தின்னுகின்றன. மரநடுகை ஒரு சதத்திற்குகூட பயனில்லாமல் போயுள்ளது.

தென்னைம் பிள்ளை , பலா போன்ற கன்றுகளை நாட்டினார்கள்.அவை கூட இன்று பட்டு விட்டன. அதனால் எந்த பயனும்இல்லை. அவற்றை விவசாய குடும்பங்களுக்கு கொடுத்துஇருந்தால் அவர்கள் அவற்றை நாட்டி பராமரித்துப் பயனடைந்திருப்பார்கள். வவுனியா மாவட்டத்தில் ஆயிரம் குளங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றையாவது கடந்த இரண்டரை வருடத்தில்புனரமைத்தார்களா ? ஒரு குளத்தை புனரமைத்தோம் எனகூறினால் நான் எனது பதவியை இராஜினாமா செய்கிறேன். பாத்தீனியம் அழிக்கின்றோம் என கூறி பெரும் செலவுசெய்தார்கள்.

வடமாகாணத்தில் யாழில் மட்டும் தான் பாத்தீனியம்உள்ளதா ? வவுனியா முல்லைத்தீவில் இல்லையா? ஏன் அங்கேஅழிக்கவில்லை. சரி யாழில் ஆவது முற்றாக பாத்தீனியத்தைஅழித்து விட்டீர்களா? வடமாகாண சபையின் ஆட்சியில் சர்வதிகாரமகா நடக்கின்றது என மாகாண சபை உறுப்பினர் தியாகராஜா கேள்வி எழுப்பினார். மாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் தெரிவிக்கும்போது வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேசத்தில் கடல் நீரை நன்னீர் ஆக்குவதற்கான செயற் திட்டம் மாகாண சபையின்அனுமதி பெறப்படாமல் முன்னெடுக்க நடவடிக்கைமேற்கொள்ளபட்டுள்ளது.

அதற்கு மருந்தங்கேணி மற்றும் அதனை அண்மித்த கடலோர மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றார்கள். அதனை மாகாண சபை உறுப்பினர்கள் எவரும்கவனத்தில் எடுக்கவில்லை. இரணைமடு குளம் தொடர்பில் வாத பிரதிவாதங்களை நாடாத்தியபோதும் மருதங்கேணி மக்களின் பிரச்சனை தொடர்பில் நானும்(சுகிர்தன்) சிவாஜிலிங்கமும் மாத்திரமே குரல் கொடுத்துவருகின்றோம். ஏனைய உறுப்பினர்கள் மௌனமாக இருக்கின்றார்கள். இது பொருத்தமானதல்ல. யாழ்.மாவட்டத்திற்கான நன்னீர் நிலைகளை புனரமைத்து நீரினைபெற்றுக் கொள்ளலாம்.

மற்றும் தொண்டமனாற்று நன்னீர் ஏரியைகடலுடன் கலக்க விடாது அதனை சேமிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். விவசாய அமைச்சர் மீது எனக்கு நம்பிக்கையும் மதிப்பும் இருந்தது. அவர் எப்பொழுது கடல் நீரை நன்னீர் ஆக்குவதற்குஎதிராக குரல் கொடுத்த வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர்சமாசத்தை கலைத்தாரோ அன்றே அவர் மீதான நம்பிக்கை மதிப்பு எல்லாம் போய்விட்டது. அதிகளவில் கடற்தொழில் செய்து வாழும் மக்கள் உள்ளமருதங்கேணி பிரதேசத்தை ஏன் நன்னீர் திட்டம் ஆரம்பிக்க தெரிவுசெய்ய வேண்டும்.

மக்கள் வாழாத கடற்பகுதிகளைப் பார்த்துத் தெரிவு செய்திருக்கலாமே. கடல் நீரை நன்னீர் ஆக்கி 24 ஆயிரம் கன அடி நீரினை பெற்றுக்கொள்ள உள்ளனர். அதற்காக கடலில் இருந்து 80 கன அடி நீரினைஉறிஞ்சி எடுத்து மீண்டும் 50 கன அடி கழிவு நீர் கடலுக்குள் விடப்படும்.அவ்வாறு கடலுக்குள் விடப்படும் அந்த 50 கன அடி நீரும்இராசாயன பதார்த்தங்கள் கலந்ததாகவும் அதிக உப்பு செறிவுஉடைய நீராகவும் மீள கடலுக்குள் விடப்படும். அதனால் தமதுமீன் பிடி தொழில் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள்அஞ்சுகின்றார்கள். எனவே அந்த திட்டத்தை மருதங்கேணிபகுதியில் மேற்கொள்ள கூடாது என கோருகின்றேன்’ என்றார்.

அடுத்ததாக ஆர்னோல்ட் பேசும்போது ‘இரணைமடு குளத்து நீரை கொண்டுவருவது தொடர்பில் பலபிரச்சனைகளை எழுப்பி அந்த காசை திருப்பி விட்டாச்சு. யாழில்நன்னீரை தேக்கி வைப்பதற்கு பல வழிகள் உண்டு. பெரியளவிலான நன்னீர் நிலைகளில் நீரினை தேக்கி வைக்கநாவற்குழி தொண்டமனாறு மற்றும் அராலி பகுதியில் உள்ளநன்னீர் அணைக் கட்டுக்களை புனரமைப்பதன் ஊடக நீரினைசேமிக்கலாம். இரணைமடுவில் இருந்து நீரணை பெற முடியாது என கூறிபெருமளவான நீரினை கடலுக்குள் அனுப்பி விடுகின்றார்கள்.மருதங்கேணி பிரதேசத்தில் கடல் நீரை நன்னீர் ஆக்கும்செயற்த்திட்டத்தை ஆரம்பிக்க காராணம் அப்பகுதியில் கடலில்உப்பின் செறிவு குறைவு எனப்படுகின்றது.

அது ஏனெனில் ரணைமடு குளத்தில் இருந்து வெளியேறும் மேலதிக நீர்அப்பகுதியில் தான் கடலில் கலக்கின்றது. நாம் இரணைமடு குளத்து நன்னீரை கடலில் கலக்க விட்டபின்னர் இ கடலில் இருந்து நீரை பெற்று நன்னீர் ஆக்கும்செயற்திட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். மகாவலியை வடக்குக்கு திருப்புவது பற்றி கதைக்கின்றார்கள். ஆனால் இரணைமடு குளத்தில் இருந்து வெளியேறும் நீர் வீணாககடலில் கலக்கின்றது. அதனை கடலில் கலக்க விடாது திருப்பநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இதற்குப்பிறகு சயந்தன் சற்றுக்காட்டமாக தன்னுடைய நியாயங்களை முன்வைத்தார்.

‘கடந்த இரண்டரை வருடமாக கூட்டுப் பொறுப்பு என நினைத்துவாய் மூடி இருந்து விட்டேன். இனியும் அப்படி இருக்க முடியாது.விவசாய அமைச்சருக்கு ஆதரவாக ஆரம்பத்தில் செயற்பட்டேன்.ஆனால் இப்பொழுது தான் புரிகின்றது அவர் எங்களை முட்டாள்ஆக்கியுள்ளார் என்று. சுன்னாகம் நீர் பிரச்சனை தொடர்பில் நிபுணர்கள் சிலரை கடந்த சிலதினங்களாக சந்தித்து அது தொடர்பில் பல விடயங்களை அறிந்துவருகிறேன். அதன் போது ஒருவர் கூறினார் விவசாய அமைச்சர்ஒரு துறை சார் அதிகாரிக்கு பதவி லஞ்சம் கொடுக்க கூடதயாராக இருந்தார் என. வடக்கில் நன்னீர் பிரச்சனை இருக்கின்றது.

இதுவரை காலமும்வடக்கில் நீர் முகாமைத்துவம் தொடர்பில் விவசாய அமைச்சுஎன்ன நடவடிக்கை எடுத்துள்ளது. நீர் முகாமைத்துவத்தைமேம்படுத்த என்ன திட்டத்தை வைத்து இருக்கின்றது? பாத்தீனியம் செடியை அழிப்பதற்காக விவசாய அமைச்சினால் பெருமளவான நிதிசெலவழிக்கப்பட்டது. அதன் பிரதிபலன் என்ன ? வடக்கில்பாத்தீனியம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதா? அ மைச்சின் நிதிகளை செலவு செய்ய வேண்டும் என்பதற்காக புதிது புதிதாக தினங்களை அறிமுகம் செய்து பெரியளவில்விழாக்களை நடாத்தி பெரும் செலவு செய்கின்றார்கள். வடமாகாணத்தில் சில மாவட்டங்களையும் சில உறுப்பினர்களையும் விவசாய அமைச்சர் திட்டமிட்டு புறக்கணித்து வருகின்றார். அதனை அவர் கைவிட வேண்டும் என்றார்.

இதற்குப் பிறகு மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் பேசும்போது. ஐ.நா அறிவித்து உள்ளது 2020 ஆண்டு அனைவருக்கும் தூய நீர்என. இன்னமும் நான்கு வருடங்களே இருக்கின்றது. நாம் தூயநீருக்காக என்ன செய்துள்ளோம்? இலங்கையின் ஏனைய மாவட்டங்கள் 90வீதம் வரை தூய நீரைபெறுகின்றன. ஆனால் வடமாகாணம் இன்னமும் 10 வீதத்தை கூட இந்த விடயத்தில் தாண்டவில்லை. இதனால் தான் நான் பல தடவைகள் கோரி இருந்தேன் வடமாகாண நீர் பிரச்சனை தொடர்பில் உறுப்பினர்கள் தமதுகருத்துக்களை தெரிவிக்க தனியே நீர் தொடர்பில் கதைப்பதற்காக ஒரு நாளோ இரு நாள் அமர்வையோ ஏற்பாடு செய்யுமாறு.

ஆனால் இதுவரை எனது கோரிக்கைநிறைவேற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். இதற்குப் பிறகு சர்வேஸ்வரன் குறிப்பிடும்போது நீர் பிரச்சனை என்றால் அது தனியாக எடுக்கப்பட வேண்டும் அதேபோன்று மீள் குடியேற்ற பிரச்சனை என்றால் அது தனியா எடுத்துபேச வேண்டும். இன்றைய அமர்வில் இந்த பிரச்சனை தொடர்பில் பேசப்படும் எனமுன்னரே உறுப்பினர்களுக்கு அறிவித்தால் ஒவ்வொருஉறுப்பினர்களும் அந்த பிரச்சனை தொடர்பில் தமது பிரதேசம்எவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளது என்ற தகவல்கள் தரவுகளைபெற்று வந்து விவாதிக்க முடியும் என்றார்.

ஆனால் இதற்கு அப்பாலும் ஐங்கரநேசனின் மீதான குற்றச்சாட்டுகள் உண்டு. முக்கியமாக விவசாய மாவட்டங்களான கிளிநொச்சிஇ முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களை மையப்படுத்திச் செயற்பட வேண்டிய விவசாய அமைச்சு யாழ்ப்பாணத்துக்குள் சுருக்கப்பட்டுள்ளது. அதைப்போல விவசாயத்துக்கான நீர்ப்பாசனக்குளங்கள் அத்தனையும் மேற்படி நான்கு மாவட்டங்களிலேயே உள்ளன. இந்தக் குளங்களை நிர்வகிக்கின்ற மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் பணிமனை முன்னர் முல்லைத்தீவு , கிளிநொச்சி மாவட்டங்களிலேயே இயங்கியது. அதையும் ஐங்கரநேசன் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு போய் விட்டார்.
இவையெல்லாம் இரவோடு இரவாக நடந்த காரியங்கள்.

யார் இந்த ஐங்கரநேசன்?
தாவரவியல் பட்டதாரியான இவர் ரெலோ இயக்கத்தின் மென்னிலை ஆதரவாளராக இருந்தார். ரெலோ இயக்கத்தைப்புலிகள் தடைசெய்தபோது ஐங்கரன் தலைமறைவாகித்திரிந்து பின்னர் புலிகளின் ஆதரவாளர்கள் மூலமாக வெளிப்பட்டவர். பின்னர் யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் யுனிவேர்சல் என்ற தனியார் கல்வி நிலையத்தை நடத்தினார். அதில் படித்த பல இளைஞர்களும் யுவதிகளும் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து பொறுப்பான பதவிகளை வகித்தபோது அந்த அறிமுகத்தை வைத்துக் கொண்டு தன்னைப் புலிகள் இயக்கத்தில் பலப்படுத்தினார்.

அக்கால வேளையிலே அவர் யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு நங்கூரம் என்ற மாணவர் பத்திரிகை ஒன்றையும் வெளியிட்டார். ஆனால் யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்கு மக்களும் புலிகளும் போனபோது ஐங்கரநேசன் தன்னுடைய குடும்பத்துடன் தமிழ்நாட்டுக்குப் புலம்பெயர்ந்தார். அங்கே பாதுகாப்பாகக் குடும்பத்தை வைத்துக் கொண்டு தன்னுடைய பட்டப்பின்படிப்பைத் தொடர்ந்தார். இதன்போது அவருக்குக் கிடைத்த தமிழ் நாட்டுப் பிரபலங்களின் அறிமுகத்தை வைத்து புலிகள் – அரசு சமாதான காலத்தில் வசூலில் சாதனை படைத்தார். தமிழ்நாட்டிலிருந்து பிரபலங்களையும் கலைஞர்களையும் புலிகளின் பொறுப்பாளர்களுக்கு அறிமுகமாக்கிஇ அவர்களை வன்னிக்கு அழைத்து இந்த வசூலைப் பெற்றிருக்கிறார்.

இதன்போது சில பாடகர்களை வைத்து புலிகளி்ன் முக்கிய கவிஞர்களைப் பயன்படுத்தி இசைத்தட்டுகளை உருவாக்கி அவற்றைப் புலம்பெயர் நாடுகளில் வினியோகித்து மிக உச்சமான வருவாயைப் பெற்றார். இப்படியே தன்னுடைய பணிகளைத் தொடர்ந்த ஐங்கரநேசன் இறுதிப்போரில் புலிகளின் வீழ்ச்சி உறுதிப்பட்டபோது கொழும்புக்கு வந்து ஈ.பி.ஆர். எல். எவ் சுரேஸ் அணியுடன் இணைந்து கொண்டார். அப்பொழுது கொழும்பில் இருந்த ஈ.பி.ஆர். எல். எவ் சுரேஸ் அலுவலகத்தில் முக்கியமான ஒரு பிரமுகராக ஐங்கரநேசன் இருந்தார். இதனையடுத்தே அவர் ஈ.பி.ஆர். எல். எவ் சுரேஸ் அணியின் சார்பாக 2010 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

அந்தத் தேர்தலில் ஐங்கரநேசன் வெற்றியடையவில்லை. அதன்பிறகு வடக்கு மாகாணசபைத் தேர்தலில் மீண்டும் ஈ.பி.ஆர். எல். எவ் சுரேஸ் அணியின் சார்பில் போட்டியிட்டார். அதில் அவருக்கு வெற்றி கிடைத்தது. அந்த வெற்றியை அடுத்து அவர் விவசாய அமைச்சுக்கான போட்டியில் இறங்கினார். இதன்போது அவர் ஈ.பி.ஆர். எல். எவ் சுரேஸ் அணிக்குக் கல்தா காட்டிவிட்டு தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டு அமைச்சுப்பதவியைப் பெற்றுக்கொண்டார். இதனால்இ ஈ.பி.ஆர். எல். எவ் சுரேஸ் பிரேமச்சந்திரனின் சகோதரர் சர்வேஸ்வரனுக்கு அமைச்சுப் பொறுப்பு ஐங்கரநேசனுக்குக் கிடைத்தது.

குறுக்கு வழிகளின் மூலமாக பதவியைப் பெற்றுக்கொண்ட ஐங்கரநேசன் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனைத் தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். தான் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கும் விழாக்களுக்கும் கவசமாக விக்கினேஸ்வரனைப் பயன்படுத்திக் கொள்கிறார். இதனால் அவர் ஏராளம் அனுகூலங்களைப் பெற்றுக்கொண்டார். ஐங்கரநேசன் பொறுப்பு வகிக்கும் விவசாய அமைச்சின் கீழ் கூட்டுறவுத்துறை, விவசாயம், நீர்ப்பாசனம், குடிநீர் விநியோகம்இ சுற்றுச்சூழல் எனப் பல துறைகள் உள்ளடங்குகின்றன.

இவை அனைத்தும் மிக முக்கியமானவை. இவற்றை வைத்துக்கொண்டு பெரும்நிதிச் செலவைச் செய்து கொண்டிருக்கிறாரே தவிர பயனாக எந்தச் செயலும் இதுவரை நடந்ததில்லை. முக்கியமாக யாழ்ப்பாணத்துக்கான குடிநீர்ப்பிரச்சினைக்குத் தீர்வாக கிளிநொச்சியில் இருக்கும் இரணைமடுக்குளத்தின் நீரைக் கொண்டு செல்லும் திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு அதற்குப் பதிலாக வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பிரதேசத்தில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தைக் கையிலெடுத்தார் ஐங்கரநேசன். இந்தத் திட்டத்தின் மூலம் பல கோடிகள் ஐங்கரநேசனின் கைகளுக்கு மாறவுள்ளதாக இந்தத்திட்டத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் சொல்கிறார்கள்.

இதைப்போலவே சுன்னாகம் பகுதியில் காணப்படும் கழிவு ஓயில் கிணற்று நீருடன் கலந்த பிரச்சினைக்கு நிபுணர் குழு அறிக்கை என்ற தவறான ஏற்பாட்டைச்செய்து கொண்டு மின்விநியோகத்தரப்பினரிடம் லஞ்சம் பெற்றதாகவும் பொதுவாக அபிப்பிராயம் உண்டு. இதை முறையாக மறுக்கக் கூடிய நிலையில் ஐங்கரநேசனும் இல்லை. இன்னும் அங்கே உள்ள நீர் பாவனைக்குரியதுதான் என்று உறுதி கூறக்கூடிய நிலையில் யாரும் இல்லை. இவ்வாறுதான் காற்றாலைகள் மூலம் பளைப்பிரதேசத்தில் மின்சார உற்பத்தி செய்யும் நிறுவனத்திடமும் இரகசியமாக ஐங்கரநேசன் கை நீட்டி விட்டார் என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே வடக்கு மாகாணசபையில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிறுவனம் கொடுத்த பணத்தில் ஒரு தொகுதியில் நீர் பவுசர்களைக் கொள்வனவு செய்து முறையற்ற கணக்கைக்காட்டினார் என்று இன்னொரு குற்றச்சாட்டு முன்னாள் கவர்னர் ஜீ.ஏ. சந்திரசிறி காலத்தில் இருந்தது. இப்படி ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் பிரச்சினைகளின் மத்தியில் சிக்கியிருக்கும் ஐங்கரநேசன் அரசியலுக்கு வந்து இன்னும் மூன்று ஆண்டுகள் நிறைவடையவில்லை. இதற்குள் தன்னுடைய மகளின் படத்தை முன்னிலைப்படுத்தி லட்சக்கணக்கான பிரசுரங்களை மாகாண அமைச்சுச் சார்பாக அச்சிட்டுப் பிரபலம் தேடியிருக்கிறார். கோடிகளைச் சம்பாதித்திருக்கிறார் என்று பரவலாகப்பேசப்படுகிறது.

இப்பொழுது இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மையானவை. இவற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேணும் என்பதற்காகவே வடக்குமாகாணசபையில் தாம் பிரேரணையைக் கொண்டு வந்ததாகத் தெரிவிக்கின்றனர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள். ஆனால் வடக்கு மாகாணசபையில் இதைப்போல வெவ்வேறு தலைப்புகளில் பல பிரேரணைகள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அப்படி நிறைவேற்றப்படும் பிரேரணைகளின் மதிப்பு என்ன என்ற கேள்விகளும் மக்களுக்கு உள்ளன. அப்படிக்கொண்டு வரப்பட்ட பிரேரணைகள் இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரானது. படையினருடைய செயற்பாடுகளுக்கு எதிரானது. போர்க்குற்ற விசாரணைகளைப் பற்றியது. இப்படிப் பல பிரேணைகள்.

ஆனால் இது ஏனைய பிரேரணைகளில் இருந்து முற்றிலும் வேறானது. இது ஆளுந்தரப்பினால் அதே தரப்பின் அமைச்சர் ஒருவருககாகக் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மக்கள் பேரவைக்கு நெருக்கமாகத் தான் இருப்பதாலும் முதலமைச்சருக்கு ஆதரவாக இருப்பதாலும்தான் இந்த நம்பிக்கையில்லாப்பிரேரணையைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று ஒரு சப்பைக் கட்டு நியாயத்தை இப்பொழுது ஐங்கரநேசனும் அவருடைய கையாட்களும் சொல்லி வருகிறார்கள். இவர்கள் யாரும் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கான பதிலைக் காணத்தயாரில்லை.

பதிலாக அவற்றை மூடிமறைக்கவே முயற்சிக்கின்றனர். ஆனால் எல்லாவற்றையும் அம்பலப்படுத்தியது தமிழ் நாட்டிலிருந்து வன்னிக்கு அழைத்து வரப்பட்டிருந்த வைரமுத்துவின் பயணமே. பெருந்தொகை பணத்தைச் செலவழித்து எதற்காக வைரமுத்து இங்கே அழைக்கப்பட்டார்?அவருக்குப் பதிலாக அங்கிருந்து துறைசார்ந்த விவசாய ஆராய்ச்சியாளர்கள் , விவசாய விஞ்ஞானிகள், சிறந்த விவசாய முன்னோடிகள்,சுற்றுச்சூழலாளர்கள் என யாரையாவது அழைத்திருக்கலாமே. ஏன் வைரமுத்து அழைக்கப்பட்டார்?

அவருக்காக ஏன் இத்தனை லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டது? என்ற கேள்விகள்தான் எல்லாப் பிரச்சினைகளையும் முன்னரங்குக்குக் கொண்டு வந்துள்ளன. இந்தத் தடவை கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை அர்ச்சுனனின் தேரைப் பார்த்தசாரதி பதித்து தலையைக் காப்பாற்றியதைப்போல விக்கினேஸ்வரன் ஐங்கரநேசனின் தலையைக் காப்பாற்றலாம். ஆனால் மக்கள் நிச்சயமாக தண்டனையைக் கொடுத்தேதான் தீருவார்கள். அது தவிர்க்க முடியாத வரலாற்றின் விதியாகும்.

-கனக சுதர்சன்- [தேனீ இணையம் 24.02.2016]