மின்னல் ரங்காவின் யன்னல் பார்வை !

ஒரு விடயத்தை அறிவு பூர்வமாகவும் அலசலாம் விசமத்தனமாவும் அலசலாம். அந்த வகையில் கடந்த காலங்களில் குறிப்பாக பாராளுமன்ற தேர்தலில் மலையகத்திலும் வன்னியிலும் போட்டியிட்ட பிரஜைகள் முன்னணி அடைந்த படுதோல்வி அதன் தலைவர் ரங்காவிற்கு ஏற்படுத்திய பாதிப்பு அவரை மது உண்ட மந்தி போல சேட்டை செய்ய தூண்டுவதாய் அவரது மின்னல் நிகழ்ச்சி அமைகிறது.

குரங்கு சேட்டை பிறவி குணம். மது அதை மேலும் தூண்டும் குணம். வெறி வர மண் ஆசை, பெண் அசை, பொன் ஆசை மட்டுமல்ல பதவி ஆசை கூட காரணம் ஆகும். தான் வெல்வது கடினம் என்பதால் மலையகத்தில் சேலைகளின் பின் பேடி ( ஆணும் அல்ல பெண்ணும் அல்ல) போல் செயல்பட்டு அவர்களை சீவி சிங்காரித்து தேர்தல் களம் இறக்கி அந்த பஸ்ஸில் தானும் பயணிக்க பார்த்தார்.

வன்னி காடுகளை வளமான களனிகளாக மாற்றிய இந்திய வம்சாவளி உழைப்பாளிகளிடம் உங்களை உயர்நிலைக்கு கொண்டு வருவேன் என கூறி அவர்களை தேர்தலில் போட்டியிட வைத்து வென்றால் பாராளுமன்றத்தில் தன் பலம் கூடும் அதை காட்டி அமைச்சர் ஆகலாம் என தப்பு கணக்கு போட்டார். அதுவும் நடக்கவில்லை. தேசிய பட்டியல் MP பதவி கிடைக்கும் என நாக்கை தொங்கபோட்டார். வழிந்தது கடைவாய் நீர் மட்டுமே.

தேர்தல் நடைபெற முன்னரே ஒரு கட்சி தேசிய பட்டியல் விபரத்தை வழங்க வேண்டும். அந்த வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ரங்காவின் பெயரையும் இணைத்தது. இதனால் ரங்கா சற்று தெனாவெட்டாக சுற்றி திரிந்தார். நமால் மற்றும் மகிந்தவின் ஆதரவு பெற்ற ரங்காவுக்கு கட்சி ஊடாக தேசிய பட்டியலில் MP பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. தேர்தல் முடிவுக்கு பின்னர் ரங்காவுக்கு கொடுப்பதாக சொல்லப்பட்ட அந்த ஆசனத்தை யாழில் போட்டியிட்டு தோற்ற அங்கஜனுக்கு கொடுக்க உத்தரவிட்டார் மைத்திரி. அதனால் ரங்காவுக்கு MP பதவி கிடைக்கவில்லை. அதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த ரங்கா என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்கு ஆட இறுதியில் கிடைத்தது கிளி மகராஜாவின் சரணாகதி ஆசீர்வாதம்.

கஜேந்திர மோட்சம் பலருக்கு தெரியாது. ரங்காவுக்கு தெரியும். நீர் நிலையில் முதலை வாயில் அகப்பட்ட யானை தன் காலை காப்பாற்ற பெருமாளே என கதற, திருமால் அதனை முதலை வாய் மீட்டார். அதே போல் கதியற்று கிளி மகராஜாவின் கால் பற்றிய ரங்காவிற்கும் மின்னல் மூலம் மீட்சி தந்தார் கிளி என செல்ல பெயர் கொண்ட மகாராஜா நிறுவன பெரும்தகை திருவாளர் ராஜமகேந்திரன்.

அன்று முதல் தன் ஆட்டத்தை ஆரம்பித்த ரங்கா கேட்பார் இல்லா கேடு விளைவிக்கும் கேடு கெட்ட நாட்டாமை போல மின்னலை மது உண்ட மந்தி போல, குரங்கு சேட்டை மட்டும் போதாது மேலதிக ஆட்டம் ஆடினால் தான் நான் மீண்டும் பிரபலம் ஆகலாம் என்பதால், விளம்பரம் தேடி அலையும் பிரபலங்களை கூட்டி வைத்து கும்மாளம் அடிக்க அதை பார்த்து ரசிக்க ஒரு கூட்டம் காத்திருக்கிறது.

மின்னல் பேட்டிக்கு செல்பவர்கள் தம் வேட்டி உருவப்படுவதை கூட அறியாமல் தமக்கு ஒவ்வாதவர் பற்றி ரங்கா கேட்கும் கேள்விகளுக்கு அவர் எதிர் பார்க்கும் வகையிலேயே பேட்டி கொடுக்கின்றனர். சம்மந்தர் பற்றியும் சுமந்திரன் பற்றியும் ரங்கா குறை கூறினால் சுரேஸ் புளகாங்கிதம் அடைவார். அதே வேளை தேவானந்தாவிடம் கூட்டமைப்பு பற்றி கேட்டால் அவர் நீண்ட அறிக்கை கொடுப்பார்.

ஆனந்தசங்கரிக்கு நீங்கள் மட்டும் தான் புலிகளை ஏக பிரதிநிதிகள் என ஏற்காதவர் என கூறினால் போதும் கரைச்சியில் ஆரம்பித்த தன் அரசியல் தொடங்கி மாவை செய்த சதிவரை பட்டியல் போட்டு அறம் பாடுவார். சிண்டு முடியும் வேலையை செய்யும் ரங்கா தான் முற்றும் அறிந்த மூத்த அரசியல் விமர்சகர் எனும் பாணியில் தமிழ் அரசியல் சம்பவங்களை இவர்களிடம் போட்டு வாங்குவார்.

அரசியலில் மூத்தவரான ஆனந்தசங்கரி முதல் இளைஞர் பேரவை மாவை தொடங்கி ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகால போராளிகளான தேவானந்தா, சுரேஸ், சித்தார்த்தன், கருணா, என அத்தனை பேரயும் மின்னலில் வைத்து எதிர்த்தரப்பை வைது, வந்திருப்பவரை போற்றுவது போல் நடித்து பின் அடுத்த மின்னலில் முன்பு வைதவரை போற்றுதலும் முன்பு போற்றியவரை தூற்றுதலும் என தகிடுதத்த செயல் நடக்கும்.

மொத்தத்தில் மூத்த அரசியல்வாதிகள் போராளிகள் தலைவர்கள் அனைவரும் ரங்காவின் பார்வையில் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யாதவர்கள். வாய் சொல் வீரர்கள். வெட்டி நியாயம் பேசுபவர்கள் என தன் மின்னலில் காட்டி, தான் பெரிய விண்ணாதி விண்ணன் தான் கேட்கும் கேள்விகளால் இவர்களை மக்களுக்கு தோலுரித்து காட்டுவதாக ஒரு பிம்பத்தை ஏற்படுத்த, அதற்கு எம்மவரே துணை போகின்றனர்.

ரங்காவின் வயதை விட கூடியது ஆனந்தசங்கரியின் அரசியல் அனுபவம். மாவை காலத்து போராட்ட ஆபத்துக்கள் ரங்கா அறியாதவை. தேவானந்தா, சுரேஸ், கருணா, சித்தார்த்தன் போன்றவர்கள் அனுபவித்த ஆயுத போராட்ட கால துன்பதுயரங்கள் ரங்கா அனுபவிக்காதவை. இருட்டு அறையில் குருட்டுப் பயல் கறுப்பு பூனையை தேடுவதுபோல் கேள்விச் செவியன் நடத்தும் மின்னலில் கலந்து கொள்ளும் இவர்களை என்னவென்பது.

நாமலின் தோழில் கை போடவும் அலரிமாளிகையில் சல்லாபிக்கவும் முடிந்த ரங்கா அரசியல் கைதிகள் விடயத்தில் நீலிகண்ணீர் வடிக்கும் நிகழ்ச்சியில், தேவானந்தா என்ன செய்தார்? சித்தார்த்தன் என்ன செய்தார்? சுமந்திரன் என்ன செய்தார்? மனோ கணேசன் என்ன செய்தார்? செல்வம் என்ன செய்தார்? என கேட்கும் ரங்கா, நாமல் மற்றும் மகிந்தவுடன் செக்கென்ன சிவலிங்கம் என்ன என சுற்றித்திரிந்த போது என்ன செய்தார்?

தொலைக்காட்சி நிறுவன தலைமையினால் ரங்கா கதிமோட்சம் அடைந்தது எம் இனத்துக்கு எதிரான கோடரி காம்பாய் செயல்பட தானா? மலையாக மக்களின் அப்பாவி தனத்தை அரசியலாக்கி ஒரு தடவை பாராளுமன்றம் சென்றவர், இனியும் தன் சுத்துமாத்து எடுபடாது என்பதால் தான் சேலைகளின் பின் தான் மறைந்து நின்று பெண்களை பாராளுமன்றம் அனுப்பும் புரட்சியை செய்வதாக நடித்தார்.

இலங்கையில் சிங்கள தலைவர் ஒருவரால் பதியப்பட்ட கட்சி ஒன்றை பணம் கொடுத்து வாங்கி தமிழ் அரசியல் செய்ய முற்பட்ட ஒரே ஒரு நபர் ரங்காதான். இவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற மலையுடன் மோதி தன் இருப்பை இன்று வரை தக்க வைத்துள்ள தேவானந்தா பற்றி பேசுகிறார். ஆனந்தசங்கரியை போற்றுவது போல் சம்மந்தரை தூற்றுகிறார். சித்தார்த்தன் சுமந்திரன் செல்வம் மனோ கணேசன் பற்றி மின்னலில் சிண்டு முடிகிறார்.

எம்மவர் எவருமே ரங்காவை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. காரணம் சிகண்டி (பேடி) க்கு எதிராக பீஷ்மர் வில் ஏந்த மாட்டார். மார்பில் அம்புகளை ஏந்தும் ஆண்மை அவருக்கு உண்டு. கமராவுக்கு முன் வீர வசனம் பேசும் உத்தம புத்திரனாய் தன்னை காட்ட முற்படும் ரங்காவை வடக்கு கிழக்கு என்றுமே வரவேற்காது. மலையகம் ஏற்கனவே ரங்காவின் முகத்தில் காறி துப்பிவிட்டது.

வார்த்தை சிலம்பாடும் ரங்காவின் மின்னலுக்கு போகும் உங்களிடம் வினையமான வேண்டுகோள். நீண்ட லட்சிய கனவின் கதாநாயகர்களான நீங்கள் உங்களுக்குள் உள்ள முரண்பாட்டை மூலதனமாக்கி பிழைப்பு வியாபாரம் நடத்துபவரின் சேட்டைத்தனமான கேள்விகளுக்கு நீங்கள் கொடுக்கும் காட்டமான பதிலால், ரங்கா போன்ற உள்ளே இருந்து கொல்லும் வியாதிகள் உருவாகாமல் பார்த்துகொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து நின்றால் ரங்கா போன்ற கூத்தாடிகளுக்கு அதுவே வயிற்றுப் பிழைப்பு கொண்டாட்டம்.

-ராம்-