“முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கான பொறுப்பை ஒவ்வொரு தமிழனும் ஏற்க வேண்டும்”

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளி­யேற்­றப்­பட்டு முஸ்லிம் இன சுத்­தி­க­ரிப்பை மேற்­கொண்ட துர­திர்ஷ்­ட­வ­ச­மான சம்­பவம் இடம்பெற்றமைக்கான பொறுப்பை ஒவ்­வொரு தமி­ழரும் ஏற்­றுக்­கொள்ள வேண் டும். முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்டு இன்­றுடன் 25 வரு­டங்­க­ளா­கியும் அந்த விட­யங்கள் மாற்­றி­ய­மைக்­கப்­ப­டாது உள்­ளமை வருத்­த­ம­ளிக்­கி­றது என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஊட­கப்­பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.


தமிழ், முஸ்லிம் சமூ­கங்கள்நல்­லி­ணக்­கத்­துடன் முன்­செல்ல வேண்­டு­மாயின் சில கசப்­பான உண்­மை­களை அனை­வரும் தெரிந்­து­கொள்ள வேண்டும். அதேபோல் முஸ்லிம் தலை­மை விட்ட தவறை உணர்ந்து செயற்­பட வேண்டும். உண்­மை­களை மூடி மறைத்தால் ஒரு­போதும் நாம் ஒன்­றி­ணைந்து செயற்­பட முடி­யாது எனவும் அவர் குறி­பிட்டார்.வட க்கில் இருந்து முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்டு 25ஆண்­டுகள் நிறை­வ­டைந்­த­தை­யொட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த கருத்­த­ரங்கில் கலந்­து­கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்வடக்கில் இடம்­பெற்ற ஒரு சோக­மான சம்­ப­வத்தை இன்று நாம் நினைவு கூறு­கின்றோம். வடக்கில் இருந்த முஸ்லிம் மக்கள் வெளி­யேற்­றப்­பட்டு முஸ்லிம் இன சுத்­தி­க­ரிப்பை மேற்­கொண்டு இன்­றுடன் 25 வரு­டங்­க­ளா­கியும் அந்த விட­யங்கள் மாற்­றி­ய­மைக்­கப்­ப­டாது இன்றும் பழைய விட­யங்­களை நினை­வு­கூரும் நிலைமை மட்­டுமே உள்­ளது. அவ்­வா­றான ஒரு சூழ்­நி­லையில் இன்று நான் யாழ் மாவட்­டத்தை பிர­தி­நி­தித்துவ ­ ­படுத்தும் மக்கள் பிர­தி­நி­தி­யாக வெட்­கப்­ப­டு­கின்றேன். வடக்கில் நிகழ்ந்த இந்த சம்­பவம் தமிழ் முஸ்லிம் மக்­களின் உற­வோடு தொடர்­பு­பட்ட ஒன்­றாகும்.

ஆகவே இந்த விட­யங்கள் குறித்து தமிழ் மக்­க­ளி­னதும் தமிழ் அர­சியல் தலை­மை­க­ளி­னதும் நிலைப்­பாட்டை தெளி­வாக கூற­வேண்­டிய கடமை எனக்கு உள்­ளது.வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளி­யேற்­றப்­பட்ட நிலையில் முஸ்லிம் மக்கள் மீண்டும் வட­ப­கு­திக்கு திருப்பி அனுப்­பப்­படும் வரையில் தான் வடக்கில் காலடி எடுத்து வைக்­க­மாட்டேன் என தமிழர் விடு­தலை கூட்­ட­ணியின் அப்­போ­தைய தலைவர் சிவ­சி­தம்­பரம் குறிப்­பிட்டார். அந்த வாக்­கு­று­தியை அவர் இறு­தி­வரை காப்­பாற்­றினார்.

இறு­தியில் அவ­ரது உடல் மட்­டுமே யாழ்ப்­ப­ணத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. எமது அர­சியல் நிலை­மைகள் அவ்­வாறு இருந்­தாலும் தமிழ் மக்கள் ஒட்­டு­மொத்­த­மாக இந்த காரி­யத்­திற்கு எதிர்ப்பு தெரி­வித்து முஸ்­லிம்­களை காப்­பாற்ற முயற்­சித்­தி­ருந்தால் விடு­தலைப் புலி­க­ளினால் இவ்­வா­றா­ன­தொரு காரி­யத்தை செய்­தி­ருக்­க­மு­டி­யாது. ஆகவே இவ்­வா­றா­ன­தொரு துர­திஷ்­ட­வ­ச­மாக சம்­பவம் நடை­பெற்­ற­மைக்­கான பொறுப்பை ஒவ்­வொரு தமி­ழரும் ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என்­பது எனது தனிப்­பட்ட கருத்­தாகும்.

தமிழ் அர­சியல் தலை­வர்கள் பலர் இந்த சம்­ப­வத்­துக்­காக மனிப்­புக்கோ­ரி­யி­ருந்­தாலும் கூட வடக்கில் முஸ்லிம் மக்கள் மீண்டும் குடி­யேறி வாழ்­வ­தற்­கான சரி­யான பங்­க­ளிப்பை தமிழ் மக்கள் செய்­ய­வில்லை என்ற ஆதங்கம் முஸ்லிம் மக்கள் மத்­தியில் தொடர்ச்­சி­யாக உள்­ளது. அது உண்­மையுமாகும். ஆகவே தமிழ் மக்­களின் சார்­பாக சில விட­யங்­களை முஸ்­லிம்கள் மத்­தியில் எடுத்து விளக்க நான் விரும்­பு­கின்றேன். அதா­வது எங்­க­ளது மக்­களின் இனப்­ப­டு­கொலை தொடர்பில் சர்­வ­தேச தரப்பில் குர­லெ­ழுப்ப நினை­கின்றோம்.

ஆனால் அந்தக் குரல் முழு­மை­யாக சர்­வ­தேச மட்­டத்தில் செல்­லாது தடைப்­ப­டவும் இது ஒரு கார­ண­மாகும். அதா­வது எங்­க­ளது நிலத்தில் இருந்த முஸ்­லிம்­களை இன சுத்­தி­க­ரிப்பு செய்­தமை இதற்கு பிர­தான கார­ண­மென பல தட­வைகள் நான் தெரி­வித்­துள்ளேன். இவ்­வாறு நான் கூறும் சந்­தர்­பங்­களில் எமது கட்­சியின் ஒரு­சில தரப்பில் இருந்து எதிர்ப்­புகள் எழுந்­தன. அதா­வது இவ்­வா­றான கருத்­துக்­களை பரப்­பினால் எமது மக்கள் மத்­தியில் உங்­களின் பிர­தி­நி­தித்­துவம் குறை­வ­டைந்­து­விடும் என்றும் தெரி­வித்­தனர். ஆனால் நான் அதற்­காக அஞ்­ச­வில்லை.

தொடர்ந்தும் அந்த கருத்­துக்­களை எமது மக்கள் மத்­தியில் தெரி­வித்து வந்தேன். எனினும் இந்த கருத்­துக்­களை விளங்­கிக்­கொண்ட தமிழ் மக்கள் எனது கருத்­துக்­களை தெளி­வாக விளங்­கிக்­கொண்டு என்னை பாரா­ளு­மன்றம் வரையில் அனுப்­பி­யுள்­ளனர்.ஆகவே இது­வ­ரையில் எனது உரையில் தமிழ் மக்கள் செய்­தி­ருக்க வேண்டும் என்ற சில விட­யங்­களை தெரி­வித்தேன். ஆனால் இப்­போது அதை­விட ஒரு மாறு­பட்ட கருத்தை நான் தெரி­விக்க விரும்­பு­கின்றேன்.

இந்தக் கருத்­துக்­களை கேட்­ப­தற்கு சில­ருக்கு கஷ்­ட­மாக இருந்­தாலும் தமிழ் மக்­களின் குர­லாக சில­வற்றை வெளிப்­ப­டுத்­தலாம் என நினைக்­கின்றேன்.நாங்கள் நல்­லி­ணக்­கத்தை மேற்­கொள்­வ­தானால் அதற்­கான முதற்­கட்­ட­மாக எமது தவ­று­களை உணர்ந்து அவற்றை திருத்­திக்­கொள்ள வேண்டும். அபோ­துதான் நல்­லி­ணக்­கத்தின் இரண்­டா­வது படிக்கு செல்ல முடியும். ஆகவே இப்­போது வரையில் இரண்டு தரப்­பிலும் எழுந்­துள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு சில முக்­கிய கார­ணி­களும் உள்­ளன.

தமிழ் மக்­களின் எண்­ணங்­க­ளாக இவை தொடர்ந்தும் பர­வி­வ­ரு­கின்­றன. அதா­வது முஸ்லிம் மக்­களால் எமது மக்­க­ளுக்கு ஏற்­பட்ட அநீ­தி­களை முஸ்லிம் தலை­வர்கள் கவ­னத்தில் கொள்­ளா­தது ஏன் என்ற கேள்வி தமிழர் மத்­தியில் உள்­ளது. முஸ்லிம் மக்கள் ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என்று கூறும் சில விட­யங்கள் உள்­ள­போ­திலும் முஸ்லிம் தலை­மைத்­து­வத்­துக்கு எதி­ரான சில விட­யங்கள் தமிழ் மக்கள் மத்­தியில் உள்­ளன.

குறிப்­பாக இலங்­கையில் இடம்­பெற்ற தமிழர் இன அழிப்பை சுட்­டிக்­காட்டி ஐக்­கிய நாடுகள் சபையில் நாம் தெரி­வித்த சந்­தர்ப்­பத்தில் அது தொடர்பில் கடந்த 2012ஆம் ஆண்டு ஜெனி­வாவில் பேசப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் அதற்கு எதிர்ப்பு தெரி­விக்கும் அர­சாங்க பிர­தி­நி­தி­யாக அங்கு சென்று விசா­ர­ணை­களை தடுக்கும் வகையில் கருத்­துக்­களை தெரி­வித்தார். ஆனால் தம்­புள்ளை, அளுத்­கம பகு­தி­களில் முஸ்­லிம்கள் தாக்­கப்­பட்­ட­போது அந்த செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக எழுத்­து­மூல முறைப்­பாட்டை அவர் ஐக்­கிய நாடுகள் பேர­வையில் சமர்ப்­பித்­தி­ருந்தார். இந்த செயற்­பாட்டை தமி­ழர்கள் ஒரு காட்­டிக்­கொ­டுப்பு செய­லா­கவே கரு­து­கின்­றனர்.

அதேபோல் நல்­லாட்சி மலர்ந்­துள்­ளது, நல்ல மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது என தெரி­விக்­கின்­றனர். அப்­ப­டி­யென்றால் முன்­னைய அர­சாங்கம் தீயது என்­பது தெளி­வாகத் தெரி­கின்­றது. அந்த தீய அர­சாங்­கத்­திலும் முஸ்லிம் தலை­மைகள் இறு­தி­வ­ரையில் இருந்து அமைச்­சர்­க­ளாக செயற்­பட்­ட­னரே அவ்­வாறு இருக்­கையில் இப்­போது மாற்றிக் கதைக்­கின்­றனர் என்ற குழப்பம் மக்கள் மத்­தியில் உள்­ளது. ஆகவே இவை அனைத்தும் மக்கள் மத்­தியில் குழப்­பத்­தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நான் இந்த கசப்பான உண்மைகளை தெரிவிக்க முக்கிய காரணம் என்னவென்றால் நாம் இரண்டு சமூகத்தினரும் நல்லிணக்கத்துடன் முன்செல்ல வேண்டுமாயின் இந்த உண்மைகளை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். சில உண்மைகள் வெளிவரவேண்டும். அவ்வாறு இவற்றை மறைத்து ஒருபோதும் தமிழ் முஸ்லிம் சமூகம் ஒன்றினைந்து செயற்பட முடியாது.ஆகவே தமிழ் மக்கள் விட்ட தவறுகள், அவர்கள் செய்த அநீதிகள் தொடர்பிலும் நான் எப்போதும் பேசுவேன். அதேபோல் முஸ்லிம் தலைமைகளும் தமது தவறுகளை உணர்ந்து செயற்பட வேண்டும். இல்லையேல் இந்த பிரச்சினை 25 ஆண்டுகள் அல்ல தொடர்ந்தும் பல காலம் இருக்கும்.

சுமந்திரன்