யாழ் பல்கலைக் கழக தாக்குதலும் கதிர்காம கந்தனின் எதிர் ஒலியும்

(சாகரன்)

2009 மே மாத போரில் தோற்றது புலிகள் மட்டும் அல்ல நாமும்தான் என்ற உணர்வலைகளை தமிழ் மக்கள் மனங்களில் இருந்து அகற்றும் சகோரத்துவ செயற்பாடுகளை மகிந்த கூட்டமைப்போ அல்லது நல்லாட்சி மைதிரியினரோ செய்யவில்லை. இதனைச் செய்து முடிப்பதற்கான இராஜதந்திர அரசியல் செயற்பாடுகளை சம்மந்தர் கூட்டமைப்போ அல்லது விக்னேஸ்வரன் பேரவையே செய்யவில்லை. இதற்கான உடன்பாடோ திறமையோ இவர்களிடம் இல்லை. ஏன் விருப்பமும் இல்லை. மகிந்தவுடன் இணைந்து இணக்க அரசியலைச் செய்தவர்களும் இன்றும் மைத்திரியுடன் இணக்க அரசியல் செய்ய வாய்பு இருககுதா என்பதற்கு அப்பால் பரந்து பட்ட கூட்டுத்தலமையை ஏற்படுத்துவதில் வெற்றியை பெறவில்லை. ஏன் இதற்கு அதிகம் முயற்சிக்கவில்லை என்றே கூறலாம்.

ஒரு ஆசனத்தை உறுதிப்படுத்தி ஆயுள் பாராளுமன்ற உறுப்பினராக மட்டும் இருந்து பெரிதாக எதனையும் சாதிக்க முடியாது என்ற யதார்தங்களை உணர்ந்தவர்களாக அறிய முடியவில்லை . இவர்களுக்கு அப்பால் சரியான தெளிவான பார்வையுடையவர்கள் தம்மால் ஒரு மாற்றுத்தலமையை கொடுக்கமுடியும் என்ற பரந்துபட்ட ஆதரவை திரட்ட இதுவரை முடியவில்லை இவர்கள் ஆளணி வளங்களும் அற்ற பிளேன் ரீ வாழ்க்கையை இவர்கள் தொடருகின்றனர். யுத்தம் விட்டுச் சென்ற கையேந்தும் கலாச்சாரத்தால் மக்களிடம் செல்லும் போது பொதியுடன் வருபவர்கள் மாலையுடன் வரவேற்கப்படும் நிலைமைகள் இருப்பதுவும் இவர்களின் உறங்கு நிலையில் இருக்கும் ஆளணியை வேகமாக திரட்ட முடியாமைக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இவற்றிற்கு அப்பால் பத்திரிகை துறையும் பெரும்பாலான ஊடகங்களும் இரு தரப்பிலும் உள்ள தேசியம் (வெறி) பேசும் சக்திகளையே தத்தமது மீட்போராக காட்டி மக்களை ஏமாற்றும் வேலையை செய்கின்றன. எல்லா இடங்களிலும் தெளிந்த பார்வையும் சீரிய செயற்பாடுகளும் உள்ளவர்களைப் போல் ஊடகத்துறையிலும் நல்லவர்கள் இல்லாமல் இல்லை.

பத்திரிகையையும், பல்கலைக் கழகத்தையும்(யாழ்) நல்ல கருத்து, செயற்பாடுகளை கூறுவார்கள் என்று இன்னமும் எதிர்பார்க்கும் மக்களே தமிழ் மக்கள் மத்தியில் அதிகம். இந்நிலையில் பல்லின மக்களும் இணைந்து கற்கும் பல்கலைக் கழகங்களில் பொது நிகழ்வுகளை இணைந்து கலந்தாலோசித்து செயற்படும் தன்மை இருப்பதே சாலச்சிறந்தது என்றாலும் இந்நிலமைகள் யாழ்பல்கலைக் கழகத்தில் இல்லை. 1986 களில் சகல விடுதலை அமைப்புக்களும் புலிகளால் தடை செய்யப்பட்ட பின்பு எங்கும் சிறப்பாக பல்கலைக் கழகத்தில் இது முற்று முழுதாக இல்லாமல் போய்விட்ட நிலையில் கண்டிய நடனத்தையும் பல்கலைக் கழக விழாவில் இணைப்பதா அல்லது இல்லை என்பதற்கு ‘இல்லை’ என்ற பிழையான புத்திக் கூர்மையற்ற முடிவுகள் எடுக்கப்பட்டு செய்ற்படுத்தப்பட்டதும் வன்முறைகள் உருவானதும் எதிர்பார்க்க முடியாதது அல்ல. இதனை தமிழ் மக்களின் தலமைகள் என்று தம்மை கூறுபவர்கள் தேர்தல் வெற்றிக்காகவும் தமது நாற்காலிகளின் இருப்புக்களை உறுதிபடுத்தவும் மௌனத்தால் அங்கீகரிப்பது ஏற்புடையதல்ல மட்டும் அல்ல எதிர்காலத்தில் பாரிய இழப்புக்களை ஏற்படுத்துவதற்கு சுழி போட்டதாக அமையலாம் என்பது வருந்தத்தக்கது.

இதனை சிஹலய உறுமய போன்றவர்கள் தமக்கு சாதகமாக பாவிக்கவே செய்வர் கதிர்காம கந்தனை பௌத்த கந்தனாக மாற்றும் இலங்கை பௌத குடியரசும் அங்கு நடைபெற்ற தாக்குதலுக்கு வருத்தம் தெரிவிக்காது உள்ளுக்குள் மகிழும் என்பதுவும் இலங்கையில் நிலவும் பல்லின் ஐக்கியத்திற்கு எதிரான செயற்பாடாவே அமையும். எத்தரப்பிலும் இனங்களுக்கிடையேயான சகோரத்துவத்தை வளர்க்கும் செயற்பாடுகள் பலமானதாக இல்லாமல் இருப்பது இலங்கை போன்ற நாடுகளின் சாபக் கேடுகள். ஆனாலும் நாம் நம்பிக்கையுடன் செயற்பட்டே ஆகவேண்டும்.

(July 19, 2016)