30 வருடங்களின் பின் மீண்டும் துளிர்விடும் தேவானந்தா (டக்ளஸ்) வழக்கு விசாரணை?

சென்னையில் அடாது மழை பெய்தாலும் விடாது துரத்துகிறது தேவானந்தாவை சூளைமேடு திருநாவுகரசு கொலை வழக்கு. 1986ல் நடந்த சம்பவத்தின் பொலிஸ் தரப்பு சாட்சிகள் 18 பேரும் 2016 ஜனவரி 18ல் நீதிமன்றில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பும்படி கூடுதல் செசன் நீதிபதி சாந்தி உத்தரவிட்டுள்ளார். பலத்த வாத பிரதிவாதங்கள் கொண்டதே இந்த வழக்கு என்பது என் வாதம்.

நீதிமன்றத்தில் இருக்கும் விடயம் பற்றி எழுதுவது நீதிமன்ற அவமதிப்பு செயல் என கூறும், வாதிடும் எவரும் தகவல் அறியும் உரிமை பொது மக்களுக்கு உண்டு என்பதை மறுக்க முடியாது. அந்த வகையில் காலம் தாழ்த்திய நீதி கூட மறுக்கப்பட்ட நீதியாக தான் கொள்ளப்படும். இங்கு பாதிக்கப் பட்டவர் மட்டுமல்ல குற்றம் சுமத்தப்பட்டவரும் தனக்கான நீதி கிடைக்கவில்லை என கூறலாம்.

நடந்த சம்பவம் பற்றிய நினைவு, மற்றும் பதிவுகள் மாற்றத்துக்கு உட்படாத வகையில் வருடக் கணக்காக இருக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆதாரங்கள் அழிக்கப்பட்ட, புதிதாக இணைக்கப்பட்ட எத்தனையோ நிகழ்வுகள் நாம் அறிந்தவை. இலங்கையில் நடந்த ஒரு பிரபல அபின் எனும் போதை பொருள் வழக்கில் வாதாடிய வக்கீல், பிடிபட்டது பழப்புளி என வாதத்தால் நிரூபித்தார்.

பிடிபட்டது அபின். ஆனால் அதற்கு சீல் வைத்து பாதுகாத்த அதிகாரியை குழப்பியது வக்கீல். எப்படி ? மதுப் பிரியரான காவல்துறை அதிகாரிக்கு மது விருந்து வக்கீலின் கையாளால் கொடுக்கப்பட்டது. நிறை போதையில் இருந்தவரிடம் பிரபல வக்கீல் ஆஜராவதால் நீ தோற்று விடுவாய், அந்த பெட்டிக்குள் இருப்பது வெறும் பழப்புளி என புரளி கூற, தடுமாறிய அதிகாரி சீல் வைத்த பெட்டியை உடைத்தார்.

உள்ளே அபின் தான் இருந்தது. ஆனால் நீதிமன்றில் சீல் உடைக்கப்பட்டதை நிரூபித்து, காவல் துறை பழப் புளிக்கு பதிலாக அபினை வைத்து வேண்டுமென்றே தன் கட்சிக் காரருக்கு எதிராக சோடித்த வழக்கு என வக்கீல் வாதிட்டு விடுதலை பெற்று கொடுத்தார். இன்னொரு கொலை வழக்கில் பனை மரத்தில் இருந்த கள் முட்டியை தான் மாற்றும் போது எதிரி சுடுவதை பார்த்தேன் என சாட்சி கூறினார்.

சம்பவ இடத்தை பார்க்க போனபோது அங்கு பனை மரம் இருந்த அடையாளம் கூட இல்லாமல் அந்த இடம் வயலாக மாறி நன்கு உழுது நெல் விதைக்கப்பட்டிருந்தது. அயலவர்கள் அங்கு பனைமரம் இருக்கவில்லை காலா காலமாக அது விளை பூமிதான் என நீதிவானிடம் கூறினர். பணம் பாதாளம் வரை மட்டுமல்ல பனை மரம் வரை சென்றது கூட, அந்த கெட்டிக்கார வக்கீலின் புத்திசாலித்தனம்.

சூளைமேடு சம்பவத்தில் தேவானந்தா உடன் சேர்த்து 9 பேரின் மீது வழக்கு பதியப்பட்டு அவர்கள் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த சம்பவம் நடப்பதற்கு சிறிது காலம் முன்பு தான் தேவானந்தா யாழில் இருந்து சென்னை வந்திருந்தார். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினராகவும் இராணுவ தளபதியாகவும் அப்போது அவர் இருந்தார்.

ஆனால் உட்கட்சி முரண்பாடு உச்சநிலையில் இருந்ததால் அவரும் அவரது தோழர்களும் தனியான இடத்தில் தங்கி இருந்தனர். அப்போது தேவானந்தாவின் சகோதரர் நடவடிக்கை காரணமாக பொருள் கைமாற்றும் செயலில் ஏற்பட்ட, கொடுக்கல் வாங்கல் தகராறில் ஏற்பட்ட பிரச்சனை துப்பாக்கி சூடு நடத்தும் அளவிற்கு பெரிதானதால் இடையில் அகப்பட்ட திருநாவுகரசு என்பவர் பலியானார்.

இங்கு இரண்டு விடயங்கள் கவனிக்க படவேண்டியவை. ஒன்று சம்பவ இடத்திற்கு தேவானந்தா பின்பு தான் வந்தார். இரண்டாவது திருநாவுகரசை குறிவைத்து சூடு நடத்தப்படவில்லை. தம்மை பாதுகாக்க துப்பாக்கி சூடு நடத்தியிராவிட்டால் அங்கு கூடிய கூட்டம் தம்மை அடித்தே கொன்றிருக்கும் என பின்பு சரணடைந்தவர்கள் கூறினர். சென்னையில் தர்மஅடி கொடுக்க என்றே ஒரு கூட்டம் உள்ளது.

இந்த சம்பவத்தால் ஏற்பட்ட கொந்தளிப்பு ஆட்சியில் இருந்த எம் ஜி ஆர் அவர்களை நடவடிக்கை எடுக்க தூண்டியது. ஏற்கனவே அமெரிக்கரான அலன் தம்பதியினரை சி ஐ ஏ ஏஜண்டுகள் என யாழில் கடத்தி அவர்களை விடுவிக்க தமிழ் நாடு முதல்வரிடம் கோடிக்காணக்கான தங்கத்தை ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைக்க, அந்த நேரம் அமெரிக்க உயர்மட்ட விஜயம் டெல்கியில் நிகழ இருந்ததால் இந்திரா காந்தி தலையிட்டு எம் ஜி ஆர் உத்தரவில் அலன் தம்பதி விடுவிக்க பட்டனர்.

ஏற்கனவே தன்னை நோண்டிய கடுப்பில் இருந்த எம் ஜி ஆர் தம்மீது என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை ஊகித்த ஈ பி ஆர் எல் எப் தலைமை பீடம் தேவானந்தாவை இயக்கத்தில் இருந்து வெளியேற்றி விட்டதாக அறிவித்து தம்மை பாதுகாத்து கொண்டது. இயக்க உள்முரண்பாட்டுக்கு தேவானந்தாவின் தென்மராட்சி உட்பட பெருமாள் கோவில் சம்பவங்களும் காரணமாகும்.

அதையே சென்னையிலும் தொடர அது இயக்கத்தின் இருப்பு நிலைக்கு ஆபத்தாகும் என்பதனால், அவரை இயக்கத்தை விட்டு வெளியேற்றும் நிலை ஏற்ப்பட்டது. சென்னை மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த தேவானந்தா இலங்கை சிறுவன் ஒருவனை கப்பம் கேட்டு கடத்தியதாக கைது செய்யப்பட்டு மீண்டும் சென்னை மத்திய சிறையில் அடைக்கபட்டு சிறிது காலத்தில் பிணையில் வந்தார்.

1990ல் கொழும்பு திரும்பிய அவர் அதன் பின் இந்தியா சென்று திரும்பி உள்ளார். மகிந்த அரசின் மந்திரியாக அவர் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த போது தான் அவர் மீதான சூளைமேடு பூதம் புகழேந்தி என்ற வழக்கறிஞரால் மீண்டும் வெளியே வந்தது. ஜாமீனில் வந்த தேவானந்தா வழக்கு தவணைகளுக்கு ஆஜராகாததால் அவர் மீது பிடிவிறாந்து பிற ப்பிக்கபட்டது.

தேடப்படும் நபர் பாரதப் பிரதமரை எவ்வாறு சந்திக்கலாம் என்ற கேள்விக்கு அவருக்கான அமைச்சர் என்ற ராஜதந்திர பாதுகாப்பு காரணமாக காட்டப்பட்டது. ஆனால் அதன் பின் தேவானாந்தாவின் இந்திய விஜயத்துக்கு கால்கட்டு போடப்பட்டது. தேவானந்தா தான் எங்கும் ஓடி ஒளிக்கவில்லை என்றும், தன் மீது பிறப்பிக்க பட்டுள்ள பிடிவிறாந்து நீக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்பட்டது.

மேலதிகமாக தன்னுடைய தனிப்பட்ட பாதுகாப்பு காரணமாக தன்னால் சென்னை நீதிமன்றில் ஆஜராக முடியாது என்றும் கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகர் பணிமனையில் இருந்து வீடியோ கான்பிரன்சிங் மூலம் தன்னை விசாரிக்கும் படியும் அவர் வைத்த கோரிக்கை ஏற்க்கப்பட்டது. ஆனால் அவை எதுவும் இடம் பெறாமல் கால இழுத்தடிப்பு ஏற்பட்டதை காரணம் காட்டியே இன்று அது தூசு தட்டப்படுகிறது.

இங்கு கவனிக்க வேண்டியது கொலை குற்றம் சாட்டப்பட்ட தேவானந்தா ஒரு இலங்கை பிரஜை. அவர் எவ்வாறு விசாரணை காலத்தில் விமான நிலையம் ஊடாக இந்தியாவில் இருந்து இலங்கை திரும்ப முடிந்தது. இலங்கை இந்திய ஒப்பந்தப்படி இலங்கையின் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற சம்பவங்களோடு தொடர்பு பட்டவர்களுக்கு தான் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கினார்.

தென்னிலங்கையில் லலித் அத்துலத் முதலியை கடத்தும் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஈ பி ஆர் எல் எப் இயக்க தலைவர் பத்மநாபா சட்டப்படி கொழும்பு செல்ல முடியாமல் போனது அதனால் தான். ஒரே ஒரு தடவை மட்டுமே அப்போது இந்திய அமைதி படை தளபதியாக இருந்த ஜெனரல் கல்கட் தன்னுடன் திருகோணமலையில் இருந்து நாபாவை கொழும்பு கூட்டி சென்றார். எனவே பொது மன்னிப்பு தேவானந்தாவுக்கு பொருந்தாது.

அதே வேளை அவர் தலைமறை வாகவும் இல்லை. 1990 முதல் அவர் பகிரங்கமாக இலங்கையில் செயல் படுகிறார். களுத்துறை சிறையில் கூட அவருக்கு ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் சென்னையில் சர்வ சாதாராணமாக நடக்கலாம். குற்றம் சாட்டப் பட்டவரின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் சென்னை உயர் நீதி மன்றம் ஏற்கனவே கொடுத்த வீடியோ கான்பரன்சிங் மூலமான விசாரணையை தொடங்குவதே சாலச்சிறந்தது.

அன்று அவர் அமைச்சராக இருந்தவர். அதனால் பாதுகாப்பிற்காக அவ்வாறான ஒழுங்கிற்கு உத்தரவிடப்பட்டது ஆனால் இன்று அவர் பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமே எனவே அவருக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு தேவை இல்லை என வாதிட முடியாது. சென்னைக்கே உரித்தான தர்மஅடி கொடுக்கும் புண்ணியவான்களின் செயல்களில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவரை காப்பாற்றுவது சுலபமல்ல.
-ராம்-