கிண்ணத்தைத் தக்க வைக்குமா ஜேர்மனி?

(Shanmugan Murugavel)
கால்பந்தாட்ட உலகக் கிண்ணம், 21ஆவது தடவையாக ரஷ்யாவில் அடுத்த மாதம் 14ஆம் திகதி ஆரம்பிக்கின்ற நிலையில், உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றக் கூடிய அணிகளிலொன்றாக, ஜேர்மனி காணப்படுகின்றது.

ஆயினும் 2006, 2010, 2014ஆம் ஆண்டு உலகக் கிண்ணங்களில் இறுதி நான்கு அணிகளுக்குள் ஒன்றாக வந்து, நடப்புச் சம்பியன்களாக ஜேர்மனி காணப்படுகின்றபோதும், பிரேஸில் அணி 1962ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிக் கிண்ணத்தை தக்க வைத்ததன் பின்னர், முதலாவது அணியாக கிண்ணத்தைத் தக்கவைக்குமா என்பது, தொக்கி நிற்கும் கேள்வியாகவே உள்ளது.

பிரேஸிலுக்கு அடுத்ததாக அதிகபட்சமாக நான்கு தடவைகள் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ள ஜேர்மனி, எந்தவோர் உலகக் கிண்ணத்தையும் தனிநபர் நட்சத்திரத்தையும் நம்பி எதிர்கொண்டல்ல அணியல்ல. இம்முறையும் அதே நிலைமை தான் காணப்படுகிறது.

தனிநபரில் தங்கியிருக்காதபோதும், அணியின் தலைவரும் முதன்மை கோல் காப்பாளருமான மனுவல் நோயரின் உடற்றகுதி குறித்த சந்தேகங்கள், ஜேர்மனிக்குத் தலையிடியை வழங்குகின்றன.

கடந்த உலகக் கிண்ணத்தில் அபாரமான கோல் காப்பில் ஈடுபட்டிருந்த மனுவல், 27 பேர் கொண்ட ஆரம்பகட்ட அணியில் இடம்பெற்றிருக்கின்றபோதும், காயம் காரணமாக நீண்ட நாட்களாக விளையாடமல் இருக்கின்ற நிலையில், தொடரில் ஜேர்மனியின் முதலாவது போட்டியான மெக்ஸிக்கோவுக்கெதிராக அடுத்த மாதம் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள போட்டிக்கு முன்னர் உடற்றகுதியை அடைந்து விடுவாரா என்ற சந்தேகம் காணப்படுகின்றது.

இதேவேளை, அவ்வாறு உடற்றகுதியை அடைந்தாலும் நீண்ட காலம் விளையாடாமல் இருந்து, உலகக் கிண்ணம் போன்ற முக்கியமான தொடரில் நேரடியாகக் களமிறங்கும்போது அவரின் கோல் காப்பு எவ்வாறிருக்கும் என்ற சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.

இருப்பினும், அவருக்கான பிரதியீடாக பார்சிலோனாவின் கோல் காப்பாளரான மார்க் அன்ட்ரே டி ஸ்டீகன் குழாமில் காணப்படுகின்றார். எவ்வாறெனினும், நோயரைப் பிரதியீடு செய்ய முடியுமா என்பது கேள்வியே.

இது இவ்வாறிருக்க, ஜேர்மனியின் ஏனைய வீரர்கள் தத்தமது கழகங்களுக்காக அண்மைய காலங்களில் சிறப்பான திறமை வெளிப்பாடுகளை வெளிப்படுத்தி, நல்ல நிலையில் காணப்படுகின்றனர். அது, சம்பியன்ஸ் லீக்கில் சம்பியனான றியல் மட்ரிட்டின் டொனி க்றூஸிலிருந்து ஆரம்பித்து, இங்கிலாந்து பிறீமியர் லீக் சம்பியன்களாக மன்செஸ்டர் சிற்றி முடிசூட துணைபுரிந்த லெரோய் சனே, இல்கி குன்டோகன் ஆகியோரில் தொடர்ந்து, பெயார்ண் மியூனிச்சின் நம்பிக்கைக்குரிய வீரர்களாகவிருக்கும் தோமஸ் முல்லர், மற் ஹம்மெல்ஸ், ஜெரோம் போட்டாங் ஆகியோர் வரை நீள்கிறது. இதற்கு மேலதிகமாக மத்தியகளத்தில் ஜுவென்டஸின் சமி கெதீராவும் காணப்படுகின்றனர்.

ஆக, ஜேர்மனியின் அண்மைய ஆண்டுகள் முன்னேற்றத்துக்கான காரணியாய் இருக்கும் டொனி க்றூஸின் தலைமையில் மத்திய களத்தில் மேசூட் ஏஸில் ஆகியோருடன் கட்டமைக்கப்படும் அணி, கட்டமைப்பானதாக பலமானதாகவே காணப்படுகின்றது.

அதுவும், உலகக் கிண்ணத்துக்கு முன்னோடியான, கண்டங்களுக்கிடையேயான கிண்ணத் தொடரில் லியோன் கொரெட்ஸ்கா உள்ளிட்ட வீரர்களை உள்ளடக்கிய ஜேர்மனியின் இரண்டாம் தர அணியே சம்பியனாகியிருந்த நிலையில், முன்னணி வீரர்களுக்கான பிரதியீடும் பலமானதாகவே காணப்படுகின்றது.

இதேவேளை, உலகக் கிண்ணத்தில் இதுவரை 10 கோல்களைப் பெற்றுள்ள தோமஸ் முல்லர், தனது முன்னாள் சக வீரரான மிரோஸ்லவ் க்ளோஸின், உலகக் கிண்ணத்தில் அதிகூடியதாக 16 கோல்களைப் பெற்றுள்ள சாதனையை முறியடிக்கக் கூடிய வாய்ப்பும் காணப்படுகின்றது.

அந்தவகையில், அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்திலிருக்கும் ஜேர்மனி, இறுதி நான்கு அணிகளுக்குள் ஒன்றாக முன்னேறும் என்பது நிச்சயமாக இருக்கின்றபோதும் பின்னர் பிரேஸில், பிரான்ஸ், ஸ்பெய்ன், பெல்ஜியம் ஆகிய அணிகளிலொன்றுடன் தோற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.