ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை; ‘குழந்தை’களை வதைக்காதீர்

இந்த வாரம் வெளியான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் சார்ந்து, சமூகத்திலும் சமூக வலைத்தளங்களிலும் நிகழும் உரையாடல்களை, கடந்த சில நாள்களாக அவதானிக்கக் கிடைத்தது. சில நாள்களுக்கு முன்னர், இம்முறை பரீட்சை எழுதிய ஒரு மாணவனின் பெற்றோரோடு பேசக் கிடைத்தது. அம்மாணவன், கொழும்பில் ‘சிறந்த’ பாடசாலையில் கல்வி கற்கிறான். இம்முறை பரீட்சையில் 154 புள்ளிகளைப் பெற்றுள்ளான். அந்த மாணவனின் பெற்றோருடன் நடந்த உரையாடல் இதோ

கே: பரீட்சையில் சித்தியடைந்திருந்தால், உங்கள் பிள்ளையை வேறு பாடசாலைக்கு மாற்ற நினைத்திருந்தீர்களா?

பெற்றோர்: இல்லை.

கே: பிறகேன் உங்கள் பிள்ளையைப் பரீட்சைக்கு அனுப்பினீர்கள்?

பெற்றோர்: வகுப்பில் உள்ள மற்றெல்லோரும் பரீட்சை எழுதுகிறார்கள்.

கே: உங்கள் பிள்ளை, சராசரியாக 75க்கு மேல் எடுத்துள்ளதே, மகிழ்ச்சி தானே?

பெற்றோர்: இல்லை. பரீட்சையில் தோல்வி தானே!

கே: அதனால் என்ன, பிள்ளை நன்றாகத்தானே படித்துள்ளது?

பெற்றோர்: ஆனால், வகுப்பில் உள்ள மற்றப் பிள்ளைகள் நல்ல புள்ளிகளை எடுத்துள்ளனரே!

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, குழந்தைகளுக்கான பரீட்சையாகவன்றி, ஒருவகையில் பெற்றோருக்கான பரீட்சை போல் ஆகிவிட்டது. பரீட்சையில் தோற்றும் மாணவர்களை விட, பெற்றோருக்கே அதன் மீதான அக்கறையும் அது குறித்த கவலையும் அதிகம். ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சை ‘தரமான’ பாடசாலைகளுக்குள் நுழைவதற்கான வாய்ப்பு என்ற ரீதியில் அதிக கவனம் பெறுகின்றன. இதன் ஆபத்துகளை நாம் விரிவாகப் பேச வேண்டியுள்ளது.

இலங்கையில் எப்பகுதியில் வசித்தாலும், மாணவர்கள் தரமான கல்விக்கு உரித்துடையவர்கள்; இலவசக் கல்வியின் முக்கியமான நோக்கு அதுவே. ஆனால், இன்று ‘தரமான பாடசாலைகள்’, ‘சிறப்புப் பாடசாலைகள்’ போன்ற தரப்பிரிப்பு, நடைமுறையில் உள்ளது. இது, மறைமுகமாக ஏனைய பாடசாலைகளைத் ‘தரமற்றவையாக’வும் ‘சாதாரணமானவை’யாகவும் அடையாளப்படுத்துகின்றன.

மாணவர்களின் அடிப்படை அறிவு விருத்தியில் பெரும் பங்காற்றிய பாடசாலைகள், ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பின்னர், தங்கள் மாணவர்களைத் ‘தரமான பாடசாலை’களிடம் இழந்துவிடுகின்றன.

இந்தப் பரீட்சை முறையும் புலமைப் பரிசில் முறையும், அரசாங்கம் கல்வியையும் பாடசாலைகளையும் மேம்படுத்தும் கடமையில் இருந்து, தொடர்ந்து தவறுவதற்கு வாய்ப்பாகின்றன. இன்றும் பெரிய பாடசாலைகளுக்கும் சிறிய பாடசாலைகளுக்கும் இடையிலான வேறுபாடு, தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக, கடந்து இரண்டு தசாப்தங்களில், கிராமப்புறப் பாடசாலைகள் மோசமாகப் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளன. இலங்கையின் பாடசாலைக் கல்விமுறையில், இந்த வேறுபாடுகள், பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன.

பாடசாலைகளுக்கு இடையில், பாரிய ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, இதை நியாயப்படுத்துவதோடு, இதற்கெதிரான பரந்துபட்ட கோரிக்கையை வலுவிழக்கச் செய்துள்ளது. மக்கள், அனைத்துப் பாடசாலைகளும் ஒரே தரத்தில் அமைய வேண்டும் என்று கோராமல், புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று, தரமான பாடசாலைக்குச் செல்லும் வழியையே தேடுகிறார்கள்.

அதற்கான விலையை, அப்பாவிக் குழந்தைகளே கொடுக்க நேர்கின்றது. இன்னொருபுறம், ‘தரமான’ பாடசாலைக்கான போட்டியின் காரணமாக, சில பாடசாலைகளில் அளவு மீறிய மாணவர்களின் சேர்க்கையும், அதன் பயனான ஊழல்களும் மாணவர்களின் கல்வியின் மீதான பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பது நாம் அறிந்ததே!

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகளில் உருவாகியுள்ள போட்டியின் பயனாக, தனியார் கல்வி நிலையங்கள் அபாரமாக வளர்ச்சி அடைந்துள்ளன. இது இன்னொருபுறம் இலாபமீட்டும் வணிகமாக உருவெடுத்துள்ளது. இதனுடைய மோசமான வடிவங்களை, க.பொ.த (சா/த), க.பொ.த (உ/த) தனியார் கற்பித்தலில் காணவியலும்.

ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில், போட்டியை முதன்மைப்படுத்துவதன் பயனாக விளையாட்டு, கலை-இலக்கியத் துறைகள், சமூக உறவாடல்கள் போன்ற உளவள முன்னேற்றச் செயற்பாடுகளில், மாணவர்கள் ஈடுபடுவதில்லை. அவ்வாறு ஈடுபடுவதற்கு, பாடசாலையோ பெற்றோரோ ஊக்கமளிப்பதில்லை. பல சமயங்களில், தடை விதிக்கப்படுகிறது.

ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் எதிர்நோக்கும் இரண்டு முக்கியமான சவால்கள், கவனிப்புக்கு உள்ளாகாமலே போகின்றன. முதலாவது, மாணவர்களுக்குப் போதிய ஓய்வு நேரம் இன்மை. பாடசாலை, பின்னர் டியூசன், பின்னர் வீட்டில் படிப்பு என்ற வட்டத்துக்கு உள்ளேயே, பிள்ளைகள் இயங்குகிறார்கள். அவர்கள், விளையாடவும் விரும்புவதைச் செய்யவும் நேரம் வழங்கப்படுவதில்லை. இது, முதன்மையான பிரச்சினையாகும். சின்னஞ்சிறு வயதிலேயே, மாணவர்கள் உளவியல் ரீதியான சவால்களை எதிர்நோக்குகிறார்கள்.

இரண்டாவது, பரீட்சைகளே முதன்மையானவையாக மாறிவிட்ட நிலையில், மாணவர்களின் கற்றல் முறையானது மிகப் பாரிய சீரழிவைக் கண்டுள்ளது. இன்றைய கற்பித்தல் முறைகள், விடயங்களை விளங்கி அறியவும் தர்க்கரீதியாக ஆராய்ந்து முடிவுகளுக்கு வருவதற்குமான ஆற்றல்களைப் புறக்கணித்து, ஏராளமான தகவல்களையும் இயந்திரப் பாங்கான முறையில் பிரச்சினைகளைத் தீர்ப்பதையும் ஊக்குவிக்கும் போக்கின் வழியிலேயே காணப்படுகின்றன. இன்று பாடசாலைகள், தேவையான அடிப்படை அறிவாற்றலை வழங்கத் தவறுகின்றன. எனவே, பரீட்சையில் உயர் சித்தி வேண்டி, தனியார் வகுப்புகளை மாணவர்கள் நாடுகின்றனர்.

அங்கே, பாடசாலையில் தவறவிடப்பட்ட அடிப்படை ஆற்றல்களை எவரும் வழங்குவதில்லை. மாணவர்கள், பரீட்சையில் உயர் சித்தி பெறுவதற்காகப் பயிற்றுவிக்கப்படுகின்றனர். பரீட்சையில் தேறுவதற்காகப் பாடமாக்கவும் வரக்கூடிய வினாக்களை ஊகித்து, அவற்றுக்கு விடையெழுதவும் வழங்கப்படும் பயிற்சிகள், மாணவர்களின் சுதந்திரமான சிந்தனையாற்றலை மழுங்கடிக்கின்றன.

எந்தவொரு கேள்விக்கும் ‘சரியான’ விடையை அறிவது போதுமானதாகவும் எதையும் காரண காரிய முறையில் ஆராய்ந்து விடைதேடுவது பயனற்றதாயும் மாணவர்கள் பயிற்றப்படுகின்றனர். இது, அவர்களுடைய உயர்கல்வியின் போதும், பிற்கால வாழ்விலும் அவர்களுடைய திறமைகளை முடக்குகின்றது. அதிலும் முக்கியமாக, தாம் வாழும் சமூகத்தின் பயனுள்ள சமூக உணர்வுள்ள குடிமக்களாகக் செயற்பட இயலாதவர்களாக, அவர்கள் இருப்பதற்கும் பங்களிக்கிறது.

இலங்கையின் கல்விமுறையின் சீரழிவின் தொடக்கம், அரை நூற்றாண்டுக்கு முன்னர் தொடங்கியது. குறிப்பாக, 1971ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘தரப்படுத்தல் முறை’ செய்த கேடுகளில் முதன்மையானது, பாடசாலைகளில் விஞ்ஞானச் செய்முறைக் கல்வி புறக்கணிக்கப்பட்டமை ஆகும்.

இன்று, முறையான ஆய்வு கூடங்கள் இல்லாமலே, பாடசாலைகளில் விஞ்ஞானக் கல்வி போதிக்கப்படுகின்றது. அதைவிட, நாட்டின் தொழில் விருத்தியையும் தேவையையும் கணிப்பில் எடுக்காமலேயே, பாடசாலைக் கல்வியில் கணித விஞ்ஞான ஆற்றல்கள் மாணவர்களைச் சேர்கின்றன. பாடசாலைக் கல்விக்குப் பின்னர், தேவையானதும் அடிப்படையானதுமான செயன்முறைக் கல்வி, இலங்கைக் கல்வித்திட்டத்தில் இல்லை. அதை வசதிப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளத் தவறியுள்ளது. கல்விக்கான அரசின் முதலீடுகள், தொடர்ச்சியாகக் குறைவடைந்து வந்துள்ளன.

நாம் கவனிக்கத் தவறியுள்ள இன்னோர் அம்சம், கடந்த 30 ஆண்டுகளில், மாணவர்களின் மொழியாற்றல் பெரும் சரிவைக் கண்டுள்ளது. எனினும், இப்பலவீனத்தை வெறுமனே, ஆங்கில அறிவின்மை என்று அடையாளப்படுத்தி, ஆங்கில மூலம் கற்பிக்கும் முயற்சிகள் பாடசாலைகள் பலவற்றில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்று ‘ஆங்கில வழிக்கற்றல்’ பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

அதனால் தாய்மொழிக் கல்வியின் அவசியமும் தேவையும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன.தாய் மொழிக் கல்வி என்பது, தாய்மொழியில் அடிப்படையான மொழியாற்றலையும் தாய்மொழி மூலம் கல்வி புகட்டலையும் குறிப்பது. தாய் மொழியில் கற்பதால், மாணவர்களின் கிரகிப்பு ஆற்றல் வலுவடைவது ஒருபுறமிருக்க, முறையாகத் தாய் மொழிக் கல்வி கற்ற எவருக்கும், இன்னொரு மொழியைக் கற்பது கடினமல்ல.

இன்றைய நமது குறைபாடு, ஆங்கில மொழியறிவுப் போதாமையை விடப் பன்மடங்கு முக்கியமானதாக விஞ்ஞான, சமூக விஞ்ஞான, தொழில்நுட்பத் தகவல்களையும் பாடங்களையும் தமிழிலோ சிங்களத்திலோ, மாணவர்கள் கற்றறிவதற்கு ஏற்ற நூல்களின் போதாமையும் வாசிப்புப் பழக்கப் போதாமையும் ஆகும். இவ்விரண்டு காரணங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையன.

குழந்தைகளின் மாணவப் பருவ உலகம் அழகானது; அவர்களை அவர்களாகவே வாழவிடுங்கள்; அவர்களின் குறும்புகளை இரசியுங்கள்; அவர்களின் குழந்தைத்தனத்தை அனுமதியுங்கள். பரீட்சைகள் எதையும் தீர்மானிப்பதில்லை என்ற உண்மையை, இனியாவது உணர்ந்து கொள்ளுங்கள். பரீட்சையில் வெற்றி பெற்றவர்கள், வாழ்கையில் வெற்றி பெறுவார்கள் என்ற உத்தரவாதத்தை, உங்களுக்கு யாராலும் தரமுடியாது.

இன்னொருபுறம், மாணவர்கள் தோல்விக்கும் பழக வேண்டும். அதுவே அவர்களைச் செதுக்கும். வெற்றி, தோல்விகள் ஒருபுறம் இருக்கட்டும். முதலில் அவர்கள், நல்ல மனிதர்களாக வளரட்டும்.