கடலின் நடுவே கண்ணீர்த் தீவு சென் கெலீனா (St Helena )

121 சதுர கிலோ மீற்றர் பரப்பளவு கொண்ட இத்தீவு சுமார் 7மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை செயற்பாடுகளால் உருவானதாக கருதப்படுகின்றது.

மனித நடமாட்டம் அற்ற இத்தீவை1502 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயர் கண்டுபிடித்தனர் . அதன் பின் ஐரோப்பியர்கள் ஆபிரிக்க , ஆசிய, ஓசானிய நாடுகளுக்கு கடல் வழிப் பயணங்களில் இளைப்பாறும் இடமாக இத்தீவைப் பயன்படுத்தினர். 1657 ஆம் ஆண்டில் பிரித்தானியரின் காலனித்துவ பகுதியாக இத்தீவு கொண்டு வரப்பட்டது .இன்று வரை பிரித்தானியாவின் கடல் கடந்த நிர்வாகப் பகுதியாக இருந்து வருகிறது.

இத்தீவில் தற்போது சுமார் 6000 மக்கள் வரை வாழ்ந்து வருகிறார்கள். பெரும்பான்மை இனமாக வெள்ளையர்களும் கணிசமான அளவில் ஆபிரிக்க இனத்தவர்களும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை விட தமிழர்களின் முகம் மற்றும் உடல் அமைப்பைக் கொண்ட மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பற்றிய ஆய்வும் தேடலும் அவசியமாகிறது.

இந்தியா காலணித்துவ ஆட்சியின் பிடியில் இருந்த போது பெரும்பாலான தமிழர்கள் தமிழகத்தில் இருந்து ஒப் பந்தக்கூலிகளாக சென்னை , காரைக்கால் , தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து கடல் வழியாக தென்னாபிரிக்கா துறைமுகத்துக்கும் பின்னர் கரிபியன் தீவுகள் ( குவாதலூப், மர்த்தினிக் , டுபாக்கோ ,) மற்றும் தென்னமரிக்காவின் கயானா , சூரி நாம் போன்ற தேசங்களுக்கும் கொண்டு செல்லப் பட்டனர்.

இவ்வாறான கடற்பயணங்கள் ஏறக்குறைய 120 நாட்களைக் கடந்தும் தண்ணீரில் பயணிக்க வேண்டியதாயிற்று .இந்தப் பயணங்களில் பல தமிழர்கள் ஒவ்வாமை நோய்களால் மடிந்தனர். இறந்தவர்கள் கடலில் வீசப்பட்டனர். இளம்பெண்கள் கப்பலின் வெள்ளையின ஊழியர்களால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டனர் . வாந்தி , மயக்கம் , காய்சல் போன்ற நிலமைகளால் மேலும் மோசமாகப் பாதிக்கப்பட்டனர் . பசி , தாகம், களைப்பு அவர்களை வாட்டியது.

இவ்வாறான கொடுமையான கடல்வழிப் பயணங்களில் சற்று இளைப்பாற இந்தக் கப்பல்கள் சென் கெ லீனாத் தீவில் நிறுத்தப்பட்டன. தரையிறங்கிய தமிழர்கள் மீதித் தூரத்தை கடல் வழியாகப் பயணிக்க விரும்பவில்லை. தங்களை இந்தத் தீவில் வாழ விடும்படி அழுது தொழுது வேண்டினர். மன்றாடினர். வெள்ளைக்காதுகளுக்கு அவை எவையும் கேட்கவில்லை .மறுபடியும் கடற்பயணம் .அமரிக்காவின் வாசல் வரை தமிழர்களின் தண்ணீர்ப் பயணம் கண்ணீருடன் தொடர்ந்தது .

சென் கெலீனாத்தீவில் வாழும் மக்களில் தமிழர்கள் போல உடல் அமைப்பைக் கொண்டவர்கள் இப்போது வாழ்கின்றவர்கள் எப்படி இங்கு வந்தார்கள். ? இவர்கள் இன்றும் பாற் பொங்கல் உணவை உண்கிறார்கள். கோப்பித் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள். சிறிய உணவுக் கடைகள் நடாத்துகின்றனர். அங்கு பாற் பொங்கல் உணவாகக் கிடைக்கிறது .இவற்றை விட தமிழர்கள் என்பதை நிருபிப்பதற்கான தடயங்கள் ஏதும் இல்லை. இவர்கள் கடற்பயணங்களில் சிறு தொழில் களுக்காக விட்டுச் செல்லப் பட்ட தமிழர்களாக இருக்கலாம் .ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இத்தீவின் முக்கிய விளை பயிராக கோப்பியும் மற்றும் மீன்பிடி ,சுற்றுலாக்கைத் தொழிலும் சிறப்பாக நடைபெறுகின்றது .பிரான்சிய நெப்போலிய மன்னன் கைது செய்யப்பட்டு இத்தீவிலே சிறை வைக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார். அவருக்கான சமாதி இத்தீவில் அமைக்கப்பட்டுள்ளது.

வரலாறு என்பது கண்ணீரால் எழுதப்படுகிறது .அதனைக் காணாமல் போவது இனத்தின் காயங்கள் மறைந்து கரைந்து போக துணை போகிறது .
(அருந்தவராஜா.க)