தந்தையரும், மகளும்…. கோபி பிறையன்ர்(Kobe Bryant) உம் அவர் மகளும்(Gianna)….

இந்த குதூகலிப்பு அண்மையில் உலங்கு வானூர்த்தி விபத்தில் மரணித்த கோபி பிறையன்ர் இற்கு இருந்திருக்கும். அவரின் அதிஷ்ட்டங்கள் நான்கும் பெண் குழந்தை அவருக்கு வரிசையாக.

தன்னைப் போலவே தனது மகளும் சிறந்த கூடைப் பந்தாட்ட வீரராக வரவேண்டும் என்ற முயற்சியில் அதிக சிரத்தை காட்டிய தந்தை. ஆண் பிள்ளை இருந்திருந்தாலும் இந்த பெண் பிள்ளையிற்கான கவனிப்பு இருந்திருக்கும் என்று ஈர்ப்புள்ள புகைப் படங்கள் கூறும் சாட்சியங்கள்.

எல்லா தந்தையர் போலவே நானும் அவ்வாறு குதூகலித்திருந்தேன் ஆனால் எனக்கு இரண்டாவதாக பிறந்தவளே என் தேவதை. அவள் நாம் அஞ்சலி என்று நாமகரணம் சூட்டினாலும் எனக்கு…. எங்களுக்கு என்றும் ‘கண்ணம்மா” தான் அவள்.

அவ்வாறு முதலில் அழைத்தது நான் தான். பாரதியாரிடம் இருந்த ஈர்ப்பா அல்லது எனது கண்ணுக்கு கண்ணான கண்மணியாக இருப்பதாலா…? அல்லது காந்த கண்ணழகியாக இருப்பதாலா..? அல்லது இவை எல்லாம் சேர்ந்து இருப்பதாலா…? நான் எப்படி கூற முடியும் எம்மைத் தெரிந்தவர்கள் கூற வேண்டிய விடயம் அது.

கோபி பிறையன்ர் இற்கும் இவ்வாறு நான்கு காந்தக் கண்ணழகிகள். மூத்தவள் 13 வயது நிரம்பியவள். அழகிதான். பௌதிக அழகி என்பதற்கு அப்பால் அவள் அழகிதான்…. எமது அம்மாவின் அழகு போல்.

எல்லா தந்தையர்கள் போல் அவளுக்கும் தனது தகப்பனிடம் அவ்வளவு ஈர்ப்பு. உலகின் முதல் தர கூடைப் பந்தாட்ட வீரராக இருந்தாலும் தன் தோள் மீது அவளை சுமப்பதில் கோபி பிறையன்ர் ஒரு தந்தையாகவே இருந்தார்.

பந்துகளை கூடைக்குள் போடுவதற்கு தோள் மேல் தூக்கி போடுவதை விட தன் மகளை தோள் மேல் சுமக்கும் அழகு அழகுதான். அப்படியொரு பாசப்பிணைப்பு. பந்து எதிராளியிடம் கிடைக்காமல் பாதுகாப்பாக வைத்திருக்கும் இலாகவத்தை விட தன் மகளை அணைப்பதில் மகிழ்ந்திருப்பதை புகைப்படங்கள் பறை சாற்றுகின்றனர். இவை கொலிவூட் திரைப்பட ஸ்டில்லாக எடுக்கப்பட்டவை அல்ல.

உலங்கு வானூர்த்தியில் பயணம் செய்யும் அளவிற்கு வசதிகள்… வாய்ப்புகள்….உள்ள தகப்பன் மகள் உறவுகள். புதிய காப்ரேட் உலகில் விளையாட்டும், விளையாட்டு வீரர்களும், வியாபாரமும், பண்டமும் என ஆக்கப்பட்ட நிலையில் வந்த வசதிகளும், வாய்ப்புக்களும் என்னைப் போல் பலரையும் விளையாட்டு பார்ப்பதில் இருந்து விலத்தி வைக்க காரணமாக இருக்கின்றது.

வியாபாரங்கள் இது கால் பந்தில் இருந்து கூடைப்பந்து, கிரிகெட் என்று எங்கும் வியாபித்து இருந்தாலும் மேற்கத்திய உலகின் புதிய வியாபாரங்களுக்குள் கட்டுண்டு போனது 40 வருடங்களுக்கு முன்பு தான். நாட்டிற்கான விளையாட்டு வீரர் என்பதை விட கம்பனி ஒன்றிற்கான விளையாட்டு வீரர் என்றும்… வாங்கப்பட்டும்… விற்கப்பட்டும் இருக்கும் நிலமைகள்.

விளையாட்டு என்பது சகோதரத்துவத்தையும், நட்பையும், பழகுதலையும் ஊக்கிவித்து உடற்(பயிற்சி) செயற்பாடுகளை அதிகரித்து நல்ல வகையில் பொழுதை கழிக்க உதவும் ஒரு பயிற்சி முறை.

இது தற்போது வீரர்கள் பண்டங்களாகவும், விளையாட்டு வியாபாரமாகவும், இதனை நடத்துபவர்கள் பெரும் பணங்களை தன்னகத்தே கொண்ட நிறுவனங்கள் அல்லது தனி நபர்களாகும் காணும் நிலை தற்போது உருவாகியிருக்கின்றது.

இந் நிலையில் வீரர்கள் ஒரு சமூகத்தின் பிரதிநிதிகள் என்ற நிலை மாறி ஒரு கம்பனியின் சொத்தாக மாற்றபட்டுள்ள நிலைக்கு தள்ளியிருக்கின்றது. விளையாட்டுகள் ஒரு சமூகத்தின் கலாச்சார அடையாளம் என்ற நிலையில் இருந்து மாறி இலத்திரனியல் சூதாட்டமாக மாறி இருக்கின்றது.

இதில் எம்மில் பலருக்கு உடன்பாடு இல்லையாகினும் வறுமை நிலையில் உள்ள கறுப்பின மக்கள் தமது இளமைக் காலத்தில் அதிக பணம் கொடுத்த பயிற்சியில் ஈடுபடும் விளையாட்டுக்களில் திறமையானவர்களாக வருவதை விட அதிக பணச்செலவு செய்யாத விளையாட்டுக்களில் ‘சாதிப்பவர்கள்’ ஆக உள்ள அரசியலை நாம் புரிந்தவர்களாக இருக்கின்றோம்.

விபத்து என்று தெரிந்த அந்தக்கணத்தில் தன் தந்தையை காப்பாற்ற மகளும், மகளைக் காப்பாற்ற தந்தையுமாக பதறிய அந்த நிமிடங்களை நாம் எல்லோரும் எம் வாழ்வுடனும் இணைத்துப் பார்ப்பது இயல்பானதே.

எமது தாயகத்து யுத்த சூழலில் தந்தையர் தங்கள் மகளை காப்பாற்ற எடுத்த துடிப்புக்களும், பட்ட துன்பங்களும், அவமரியாதைகளும் அது இரு தரப்பினரிடம் இருந்தும் நான் கதைகளாக கேட்டிருக்கின்றேன்.

வீட்டிற்கு ஒருவர்…., இறுதியில் எல்லோரும் படையில் இணைய வேண்டும் என்ற வேண்டுகோளும்… ‘லபக்’ உம்… இச் செயற்பாட்டுச் செய்தி எதிரியிடமும் செல்ல எல்லோரும் பயிற்சி பெற்றவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் என்று சிறை பிடிப்பும், துயிலுரிகையும், பாலியல் வல்லுறவுகளும், கொலைகளும் தந்தையர் தனது மகளை காபபாற்ற முடியாமல் பதறிய தருணங்கள் கோபி பிறையனர் இன் இறுதிக் கணத்திலும் நிச்சயம் ஏற்பட்டிருக்கும்.

இத்தனைக்கும் இவ்வளவு வசதிகளும், வாய்புகளும் இருந்தும் தனது மகளை காப்பாற்ற முடியாத தந்தையின் மரணம் எனக்கு வலிகளை ஏற்படுத்தயே இருக்கின்றது. கோபி பிறையன்ர் இன் மகளின் இழப்பு எமது மகளை இழந்த வலியை போல் ஏற்படுத்துகின்றது.

அம்மா, என்னவள்… என் வாழ்கைத் துணை, இவர்களுக்கு அப்பால் தன் பிள்ளைக்கு எமது கலாச்சார மரபுப் பழக்க வழங்கங்களுக்குள் சங்கோஜம் இன்றி தந்தைக்கு முன்னால்…. எனக்கு முன்னால் தன் குழந்தைக்கு பாலூட்டும் உரிமம் தாய் என்ற வடிவில் மகளினால் கிடைக்கும் உறவு அது. இதுதானோ இதற்குள் இருக்கும் உறவுதானோ இந்த தகப்பன் மகள் உறவுக்குள் சிறப்பாக உணரப்படுகின்றதோ என்று நான் அடிக்கடி எண்ணுவதுண்டு.

இந்த உணர்வலைகளை தன் மகள் விடயத்தில் அது மேற்குலகக் கலாச்சாரப் பாரம்பரியமாக இருந்தாலும் அனுபவிக்க முடியாமல் வாழ்க்கையின் இடைப்பாதையில் மரணத்தை தழுவிய கோபி பிறையன்ர் அவளின் மகளுக்கு(Gianna) அஞ்சலி செலுத்தி நிற்கின்றேன்.

இந்த விபத்தில் மரணித்த அனைவருக்கும் எமது ஆத்மார்த்த அஞ்சலிகள். இழப்புகள் யாராக இருந்தாலும் அவற்றின் வலி பொதுவானதே.