துறைமுகப் பட்டினமொன்றின் கதை.


காங்கேசன்துறை எனவும், K.K.S எனவும் அழைக்கப்பட்ட துறைமுக நகரின் தரிசனமாக இன்றைய நாள் மலருகின்றது.
தூங்காத நகரமாக காங்கேசன்துறை இருந்த காலத்தையும் பதிவு செய்யுங்கள் என்ற வாசக உள்ளங்களின் வேண்டுதல் இன்று நிறைவு பெறுகின்றது.
வேரறுந்த பூமியில் நூலறாத நினைவுகளாக இன்றைய தரிசனம் அமைகின்றது.
பண்டைக் காலத்தில் கயாத்துறை என அழைக்கப்பட்ட இவ்விடம் பின்னாளிலேயே பெயர் மாற்றம் பெற்றது. மாருதப்புரவீகவல்லி குதிரை முகம் நீங்கித் தென்னிந்தியாவிலிருந்து கடல் வழியாகக் காங்கேசன் என்ற பெயருடைய ஒருவர் முருகப் பெருமானின் சிலைகளைக் கொண்டு வந்தார்.
காங்கேசன் முருகனின் சிலைகளை இறக்கிய இடம் தான் பின்னாளில் காங்கேசன்துறை என வந்தது.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தின் முதன்மையைப் பறைசாற்றுவதாக காங்கேசன்துறைப் பிரதேசம் திகழ்ந்தது.
காங்கேசன்துறை நகரம் சார் பிரதேசம்,துறைமுகம்,சீமெந்துத் தொழிற்சாலை ,புகையிரத நிலையம், மாவிட்டபுரம் கந்தசாமி கோயில், கீரிமலை நகுலேஸ்வரம்,கீரிமலை புனித தீர்த்தக்கேணி,மயிலிட்டி மார்புநோய் சிகிச்சை நிலையம் என்பவற்றைப் பிரதானமாகக் கொண்டிருந்தது.
பேச்சு வழக்கில் கே.கே.எஸ் எனத் தான் இப் பிரதேசத்தை அழைப்பார்கள்.இங்கு உற்பத்தியான சீமெந்திற்கு நாடு முழுவதும் உயர் மதிப்பு இருந்தது. 1948 இல் ஜி.ஜி.பொன்னம்பலம் கைத்தொழில் அமைச்சராக இருந்த போது இத் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 1950 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது.
இப் பிரதேசத்தில் கிடைத்த சுண்ணாம்புக் கல் 98 வீதம் கல்சியம் காபனேற்
( CaCo3) உடையதாக இருந்தது. தொழிற்சாலை அமைவிடத்திற்குப் பிரதான காரணம் சீமெந்து உற்பத்திக்குத் தேவையான கிளே எனப்பட்ட ஒரு வகை மண்ணை மன்னார் முருங்கனில் இருந்து எடுத்து வர கிளே ரெயின் ஓடியது.
யுத்த காலத்தில் 1990 ஆம் ஆண்டுக்கு முன்னதாக கிளே வராத போது கைதடி அரச முதியோர் இல்லத்திற்கு முன்பாக இருந்த காணிகளின் மண் பதிலீடாகப் பாவிக்கப்பட்டது.
காங்கேசன் சீமெந்துத் தொழிற்சாலையில் 4 வேலை முறைகள் வைத்து 24 மணி நேரமும் தொழிற்சாலை இயங்கியது. காலை 6 மணி,8 மணி,பிற்பகல் 2 மணி, இரவு 10 மணி எனத் தொழிற்சாலை வேலை முறைகள் இருந்தன. வேலை ஆயத்தம் முடிவிற்குப் பெரிய சத்தத்துடன் சங்கு ஊதப்படும்.
அதே போல புகையிரத நிலையமும் துறைமுகமும் 24 மணி நேரமும் படு சுறுசுறுப்பாக இயங்கியது. தொழிற்சாலை அலுவலகம் காலை 8 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையும் இயங்கியது. நாளுக்கு 5 முறை சங்கு ஊதப்பட்டது. இதனால் காங்கேசன்துறை நகரம் மூடாத கடைகளுடன் தூங்காத நகரமாக இருந்தது.சீமெந்து ஏற்றும் லொறிகள் எந்த நேரமும் பயணித்துக் கொண்டிருக்கும்.
சீமெந்துத் தொழிற்சாலையின் புகை போக்கி வானுயர இருக்கும். எந்த நேரமும் புகையைக் கக்கிக் கொண்டிருக்கும்.
சிரித்திரன் என்ற நகைச்சுவை வாரஇதழ் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த போது அதன் ஆசிரியர் சுந்தர் ( சிவஞானசுந்தரம் ) கேலிச் சித்திரமொன்றை வரைந்தார்.
புகைப் போக்கியைப் பார்த்து ”இது என்ன ? பட்டாளத்துக்குப் புட்டவிக்கிறாங்கள்” என வரைந்தது இன்றளவிலும் நினைவு கூரப்படுகின்றது.
துறைமுகம் அமைந்திருந்த இடத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரம் தள்ளி புதிய துறைமுகம் அமைப்பதற்காக 1966 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் டட்லி சேனநாயக்கா அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. 1977 ஆம் ஆண்டில் புதிய துறைமுகம் திறந்து வைக்கப்பட்டது.
நாட்டின் நாலா பாகங்களிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பொருள்கள் கப்பலில் வந்தன. இலங்கைச் சுங்கத் திணைக்கள அலுவலகமும் இயங்கியது.
கப்பலில் வரும் பொருள்களைப் பரிசோதிப்பது,கள்ளக் கடத்தல், கள்ளக் குடியேற்றம் தடுப்பது என்பவை சுங்க அதிகாரிகளின் கடமையாக இருந்தது.
பழைய துறைமுகம் இருந்த காலத்தில் தோல்பொருள்,பேர்ஸ் ஆகியவற்றைச் சுமந்து வந்த கப்பலைப் பெட்டிக் கப்பல் என்றார்கள்.அரிசி,மா,சீனி, உரம் போன்ற பொருள்களும் கொண்டு வரப்பட்டன.
இங்கிருந்து கே.கே.எஸ் சீமெந்து,ஆனையிறவு உப்பு,பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை உற்பத்திகளும் உரிய இடங்களில் வைத்து ஏற்றப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன.
கப்பலில் இறக்கப்பட்ட பொருள்கள் ஆரம்பத்தில் கடற்கரையிலிருந்த கிட்டங்கி என அழைக்கப்பட்ட களஞ்சியத்தில் வைக்கப்பட்டன. பின்னாளில் கிட்டங்கிகள் உள்புறங்களிலும் கோண்டாவில்,நாவற்குழி,சுன்னாகம், பருத்தித்துறை போன்ற இடங்களிலும் அமைக்கப்பட்டன.
துறைமுகவாசல் ரேவடி என அழைக்கப்பட்டது.
கப்பலில் இறக்கப்பட்ட பொருள்கள் ஐந்தாறு வத்தைகளில் ஏற்றப்படும். இவ் வத்தைகளை ஒரு இயந்திரப்படகு கரைக்கு இழுத்து வரும்.வத்தை என்பது மரப் பலகையால் செய்யப்பட்ட வள்ளம் போல இருக்கும். வத்தைகள் கரைக்கு வந்ததும் கங்காணி ஒருவரின் தலைமையில் தொழிலாளர்கள் பொருள்களை இறக்குவார்கள்.
பொருள்களை இறக்கும் தொழிலாளரை வகுப்புத் தொழிலாளர்கள் என அழைப்பார்கள்.இவ்வாறு இறக்கப்படும் பொருள்களின் விபரங்களைப் பதியும் இரு எழுதுநர்களை லாண்டிங் கிளார்க் (Landing Clerk ) என அழைத்தார்கள். பின்பு பொருள்களை லொறிகளில் ஏற்றும் போது பதியும் வேலைகளை இருவர் செய்தார்கள். அவர்கள் டெலிவரி கிளார்க் ( Delivery Clerk ) என அழைக்கப்பட்டார்கள்.
வத்தைகளில் பொருள்கள் ஏதும் மறைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய பரிசோதிக்க இருவர் இருந்தார்கள். இவர்கள் நமீச்சிங் கிளார்க் என அழைக்கப்பட்டார்கள்.
இவ்வளவு நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்யவென சுங்க அதிகாரிகளும் உடன் இருப்பார்கள்.
பின்னாளில் துறைமுகம் விரிவடைந்த போதும் இந்த நிர்வாகக் கட்டமைப்பு இருந்தது. கப்பல் கரை சேர்ந்தவுடன் கப்பல் கப்டனுடன் வரும் உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் தங்கவென ஓய்வு விடுதி ( றெஸ்ற் ஹவுஸ் – Rest House ) இருந்தது.
இதனால் உல்லாசப் பயணிகள் விரும்பும் இடமாக காங்கேசன்துறை அந்த நாள்களில் பிரபலமாக இருந்தது.
இயற்கை வனப்பு மிகு கடற்கரை,கீரிமலை, புனித தீர்த்தக்கேணி, யாழ் குடாநாட்டின் மிகப்பெரிய வெளிச்ச வீடு ( கலங்கரை விளக்கு Light House ) என்பவை சுற்றுலா செல்வோரைக் கவர்ந்து இழுத்தன.
காங்கேசன்துறை புகையிரத நிலையம் எந்த நேரமும் சுறுசுறுப்பாக இயங்கியது. காலை 6 மணிக்கு உத்தரதேவி,மதியம் 2 மணிக்கு கடுகதி ( Express) மாலை 6.10 மணிக்கு நகர்சேர் கடுகதி( இன்ரசிற்றி – Intercity ) என்பவை நாளாந்தம் கொழும்பு நோக்கி ஓடியது.
இன்ரசிற்றி புகையிரதம் கே.கே.எஸ்சில் புறப்பட்டால் யாழ்ப்பாணம்,அநுராதபுரம்,பொல்காவெல ஆகிய இடங்களில் மட்டும் நின்று கொழும்பைச் சென்றடையும். இதனை விட உணவு இதர பொருள்களை எடுத்து வரும் குட்ஸ்ரெயின் ( Goods Train ) முன்னர் சொன்ன கிளே ரெயின்,ஒயில் ரெயின்,சன்டிங் ரெயின் ஆகியவையும் ஓடின. கொழும்பு செல்வோர் ரெயினில் சீற் பிடிக்கவெனக் காங்கேசன்துறைக்கு பஸ்சில் செல்வார்கள்.
கமலா ராக்கீஸ்,இந்திரா ராக்கீஸ் ஆகிய பெயர்களில் கூடாரம் அடித்த சினிமாத் தியேட்டர்கள் முன்னாளில் இயங்கின. காலப் போக்கில் இவை மூடப்பட்டன. பின்னாளில் ராஜநாயகி,யாழ் என இரு தியேட்டர்கள் இயங்கின.
அக்கால சினிமாத் தியேட்டர்களில் காலை 10.30 மணிக் காட்சியை மோனிங் சோ ( Morning Show ) ,பிற்பகல் 2.30 மணிக் காட்சியை மெட்னி சோ,மாலை 6.30 மணிக் காட்சியை பெஸ்ற் சோ ( First Show ) ,இரவு 9.30 மணிக் காட்சியை செக்கன்ட் சோ ( Second Show ) எனவும் அழைத்தார்கள்.
யாழ் நகரில் மாலை 6.30 மணிப் படக்காட்சி முடிவடைந்த பின்னர் இரவு 10 மணிக்கு யாழ் நகரிலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் புறப்படும் 769,764 வழித் தடங்களை படபஸ் என அழைத்தார்கள். அது தான் அன்றைய கடைசி பஸ்சாக இருந்த போதும் படபஸ் என்பதே அதற்குப் பெயராக இருந்தது. சினிமாவுடன் மக்களுக்கு இருந்த வசீகரம் அப்படியிருந்தது.
படபஸ்,சீமெந்துத் தொழிற்சாலைக் கப்பல்கள்,புகையிரதங்கள் காரணமாகக் காங்கேசன்துறை நகரம் இரவு 10,11 மணி வரையும் சனநடமாட்டம் மிகுந்ததாக இருந்தது.
கடைசி பஸ்சாகப் புறப்பட்ட படபஸ்கள் அதிகாலை 4 மணிக்குக் காங்கேசன்துறையிலிருந்து யாழ் நகரம் நோக்கிச் செல்லும் முதல் பஸ்சாகப் புறப்படும்.
மாவிட்டபுரம்,கருகம்பனை, கொல்லன்கலட்டி,பன்னாலை ஆகிய கிராமங்கள் வெற்றிலை முந்திரிகைப் பயிர்ச் செய்கைக்குப் பிரபலமாக இருந்தன.
தையிட்டி,போயிட்டி கிராமங்களும் விவசாயச் செய்கையில் பெயர் பெற்றவை. மயிலிட்டிப் பிரதேசத்தில் விளைந்த வெங்காயத்திற்குக் கொழும்புச் சந்தையில் தனி மதிப்பு இருந்தது. அத்துடன் மயிலிட்டியில் குரக்கன்,சாமை, மரவள்ளி போன்றவையும் பயிரிடப்பட்டன.
மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் மீன்பிடியில் முதன்மை பெற்றிருந்தது. மயிலிட்டி கடல் மீன்களின் தனிச்சுவையை யாழ்ப்பாணம் எங்கும் வாயூற இன்றும் நினைவு கூருகின்றனர்.
ஒல்லாந்தர் கட்டிய கோட்டை மயிலிட்டியில் இருக்கிறது. துறைமுகத்திற்கும் ஒல்லாந்தர் கோட்டைக்கும் இடையே இருந்த இடம் காவற்கடவை எனப்பட்டது.இது பின்னாளில் காட்டுக்கடவை என மருவி உச்சரிக்கப்பட்டது.
மயிலிட்டிக் கடல்காற்று மருத்துவத் தன்மை மிகுந்ததாக இருந்ததைக் கண்ட பிரித்தானிய ஆட்சியாளர்கள் கடற்கரையோரமாக மார்புநோய் ( காசநோய் – T.B) வைத்தியசாலை அமைத்தனர். அது இன்று அழிந்து விட்டது.
காங்கேசன்துறை நகரப் பிரதேசத்தின் நிர்வாகத்திற்கென பட்டினசபை ( Town Council ) இயங்கியது. பின்னாளில் காங்கேசன்துறைக்கும் திருகோணமலைக்கும் இடையே பயணிகள் கப்பல் சேவை நடைபெற்ற போது பயணிகள் இப் பட்டினசபை வளாகத்தில் தான் இறக்கப்பட்டார்கள்.
ஏற்றப்பட்டார்கள்.அப்போது இம் மண்ணில் பிறந்து வாழ்ந்தோர் தம் கடந்த கால நினைவுகளை ஏக்கத்துடன் அசை போட்டதை பல முறை நேரில் கண்டுள்ளேன்.
காலச் சக்கரம் மெல்லச் சுழன்றது.போர் மேகம் சூழ்ந்தது. 1980 களில் போர் நடைபெற்ற போதும் பொதுமக்களின் வாழ்விட இருப்பு பெருமளவில் குலையவில்லை.
1990 யூன் 15 ஆம் நாள் ஹாபர்வியூ ஹோட்டலின் முன்பாக இரண்டாம் ஈழப்போர் ஆரம்பமாகியது. அது துறைமுகப்பட்டினத்தினதும் சூழவுள்ள கிராமங்களதும் வலிகாமம் வடக்கினதும் மக்களின் வாழ்விட இருப்புக் குலைந்தது.
பரம்பரையாக வேரூன்றிய தம் மண்ணிலிருந்து இடம் பெயர்ந்து குடாநாடெங்கும் நாட்டின் நாலா பிரதேசங்களுக்கும் உலகின் நாலா திசைக்கும் இடம் பெயர்ந்தார்கள்.புலம் பெயர்ந்தார்கள். காலச் சுழற்சியில் போரின் நிறைவின் பின்பாக மெல்ல மெல்ல மீளக் குடியேறும் நிலையை உருவாக்கியது.ஆனாலும் சில பிரதேசங்கள் இன்னமும் மீளக் குடியமர்வுக்கு உட்பட வேண்டியுள்ளது. தம் தாய் மண்ணின் வாசனை நுகராமலேயே ஒரு தலைமுறையும் தோன்றி விட்டது.
ஊர் கூடித் தேர் இழுக்கும் கூட்டுறவு வாழ்வை மீண்டும் ஏற்படுத்தும் முனைப்புகள் நடக்கிறது.
இழந்து போன வசந்த காலங்கள் மீளவும் கிடைக்காதா என நடுத்தர வயதை,முதுமையை அடைந்த தலைமுறை ஏங்குகிறது.
ஓமந்தை முதல் காங்கேசன்துறை வரை புகையிரதப் பாதைகள் அமைக்கும் பணி நடக்கிறது. கீரிமலை புனித தலத்திலும் பக்தர் கூட்டம் அலைமோதுகிறது. வலிகாமம் வடக்கின் மீள் எழுச்சிக் காலம் வேகமாக நகருகின்றது.
ஈழத்து இசைநாடகத்தின் தந்தையெனப் போற்றப்படும் நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்களும் காங்கேசன்துறை மண்ணைச் சேர்ந்தவர் தான்.இவரது இசை நாடகத்திறமை நாடெங்கும் பெரும் புகழாகக் கூறப்படுகின்றது.
பல கலைஞர்கள், அரசியல் தலைவர்களைத் தந்த பெருமை துறைமுகப் பட்டினத்திற்குரியது.
இப் பத்தி துறைமுகப் பட்டினத்தின் உன்னத காலங்களை அறியாதவர்கள் அறிய வேண்டுமென ஆவணப்படுத்தும் நோக்குடன் நிறைவு பெறுகின்றது.
வேதநாயகம் தபேந்திரன்
நன்றி – தினக்குரல் வாரமலர் 2012 நவெம்பர் 18.
இந்த ஆக்கம் யாழ்ப்பாண நினைவுகள் பாகம் 1 நூலில் இடம் பெற்றுள்ளது.