தெகிவளையில் ஒரு சாப்பாடு கடை

வழமையாக சாப்பாடு கடைக்கு போனால் வாங்க என்ன சாப்பிடுறீங்களென்ற கேள்விக்கு எதிர்மாறு இந்த கடை. ‌.
ஏன் உங்களுக்கு வேறு கடையே இல்லையா? எனது கடைதான் கிடைத்ததா என்றே அந்த அம்மா கேட்பார். இந்த கேள்வியும் எல்லோரிடமும் இல்லை. என் போன்ற ஒரு சிலரிடம் மட்டுமேதான்.

மீனவர்களுக்கும்,கட்டிட தொழிலாளர்களுக்குமென்றே அந்த அம்மா இந்த கடையை நடாத்துகிறாராம். சாப்பாடு விலை மிக மலிவு. நாங்கள் போய் சாப்பிடுவதால் பசியோடு வரும் தொழிலாளிகள் சாப்பாடின்றி திரும்ப நேரிடும் என்பதற்காகவே எங்களை கலைக்கும் மனிசி.

அதாவது.. எங்களுக்கு ஒரு பாண் தராவிடின் அந்த பாண் மிஞ்சி போனாலும் பரவாயில்லை. எங்களுக்கு ஒரு பாண் தருவதால் இன்னொரு தொழிலாளிக்கு சாப்பாடு இல்லாமல் போய்விடக்கூடாதாம் .

விசயம் தெரியாமல் முதல் நாள் போய் மகன்களிடம் காசை கொடுத்துவிட்டு காலை சாப்பாட்டுக்காக காத்திருந்த போதில்தான் உள்ளிருந்து அந்த அம்மாவின் குரல் அசரீரியாக வெளிவந்தது.

” ஏனாம் அவங்களுக்கு வேற கடையே இல்லையாமா? நீயேன் காசை வாங்கினாய் ?

தரமான ஆர்ட் பிலீமொன்றின் கதாபாத்திரத்தின் குரல்போல வெளிவந்த அந்த பேச்சை கேட்டு அதிர்ந்து விட்டேன்.

தாய்க்கு பயந்தபடியே சாப்பாட்டை கொண்டு வந்து மகன் வைத்து விட்டு போன சிறிது நேரத்தில் மீண்டும் அதே குரல்.

” என்ன வேண்டுமென கேட்டு விரும்பியதை கொடு. சாப்பிட இருந்தவையள அரை வகுத்தோடு அனுப்ப கூடாது. இந்தா இந்த சொதிய கொண்டு போய் கொடு. வேறு ஏதாவது வேணுமாமா கேள் “

அந்த அம்மாவை புரிந்து கொள்ள முடியாத ஆச்சரியம் எனக்கு.

நான் விரும்பினால் எந்த கடைக்கும் போய் சாப்பிடலாம். இருந்தும் தெகிவளையில் நிற்கும் நாட்களிலெல்லாம் என்தன்மானம், சுய மரியாதை அனைத்தையும் இழந்து ஒவ்வொரு காலையிலும் அந்த கடைக்கே போய் சாப்பிடுகிறேன் . காரணம்…

அந்த அம்மாகே பருப்பு கறி Very very றசாய் & அந்த அம்மாவின் தொழிலாளர் மேலுள்ள பாசமும் கஸ்டமர்கள் மேலுள்ள பரிவான வார்த்தைகளுமே .