பணம் என்றால் பிணம் தின்னும் சன் குழுமம்! உடன்பிறப்புகள் கொந்தளிப்பு!

சன் தொலைகாட்சி தான் தமிழக மக்கள் அதிகமாக பார்க்கும் தொலைகாட்சி!
பூமாலை என்ற வீடியோ மேகசீனை நடத்தி மிகுந்த நட்டப்பட்டிருந்த தன் பிள்ளைகளை கரைசேர்க்க முரசொலிமாறன் தவித்தார்.அப்போது, மேக்னம் டாட்டியா என்ற இந்திய தொழில் அதிபரிடம் ரஷ்ய சேட்டிலைட் ஒன்றின் காரிஜாண்டர் டிரான்ஸ்பார்மர் இருந்தது! அதை திமுகவின் எம்.பி என்ற செல்வாக்கைப் பயன்படுத்தி வாங்கித் தந்தார் முரசொலிமாறன்.
சேனல் ஆரம்பிக்க கருணாநிதியிடம் மாறன் கடன் கேட்ட பொழுது, கருணாநிதி திமுகவின் ஆயிரமாயிரம் உடன்பிறப்புகள் திரட்டி தந்த நிதியில் இருந்து எடுத்து – மந்தைவெளியில் உள்ள கும்பகோணம் சிட்டி வங்கியில் போட்டு – பெரியதொரு நிதியை வங்கியில் இருந்து பெற்றுத் தந்தார்!
ஆரம்பத்தில் முரசொலி அலுவலக வளாகத்தில் சன் டிவிக்கு ஸ்டுடியோவும் இருந்தது! சன் டிவி தொடங்கப்பட்டதே திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தான்! 1993 முதல் 2007 வரை அங்கு தான் செயல்பட்டது. இன்றோ மிக பிரம்மாண்ட சொந்த கட்டிடத்தில் செயல்படுகிறது!
சன் டிவி ஆரம்பித்த பொழுது, தயாளு அம்மாள் அதன் இயக்குனர்களில் ஒருவர்! ஸ்டாலின் அதன் பங்குதாரர்களில் ஒருவர்! ( இப்போது இல்லை) அப்போதும் கூட முதல் ஒரிரு ஆண்டுகள் விளம்பர வருமானமின்றி தவித்தனர் மாறன் சகோதர்கள்!
1996 ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், ஆட்சி செல்வாக்கை பயன்படுத்தி, சென்னையில் கேபிள் நெட்வொர்க்கை சிறப்பாக செய்து கொண்டிருந்த ஹாத்வே கேபிள்வயர்களை அறுத்துபோட்டு, அவர்கள் தொழில் செய்யவிடாமல் மிகபெரிய நஷ்டத்தை உருவாக்கி,அவர்களை கேபிள் நெட்வொர்க் தொழிலில் இருந்து விரட்டி அடித்தனர்! அதே போல தமிழகம் முழுக்க அன்று இருந்த போட்டியாளர்களை களத்தில் இருந்து விரட்டி அடித்தனர்!
2000 ஆம் ஆண்டு ’சுமங்கலி கேபிள் விஷன்’ என்ற கேபிள் நெட்வொர்க்கை ஆரம்பித்தனர். அன்று சிறிய அளவில் எம்.எஸ்.ஒக்களாக இருந்தவர்களை மிரட்டியும், அழித்தும் எஸ்.சி.வியை ஸ்தாபித்தனர்! இவையாவும் திமுக என்ற அரசியல் இயக்க பின்புலத்தால் அவர்கள் சாதித்த அநீதியான வெற்றிகளாகும்.
ஆனால், திமுகவில் ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் சிண்டு முடியும் விதமாக அழகிரியை கேவலப்படுத்தும் விதமாக ஒரு கருத்துக் கணிப்பு வெளியிட்டனர். இதன் விளைவாக மதுரை தினகரன் அலுவலகம் தீக்கிரையானது! இதில் மூவர் பலியாயினர்! இதனால், மன வேதனையடைந்த கருணாநிதி வளர்த்த கடா மார்பில் முட்டியதாக உணர்ந்தார்!
இதன் விளைவாக மே-2007 கருணாநிதிக்கும், மாறன் சகோதர்களுக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டது!
இதன் விளைவாக கலைஞர் தொலைகாட்சி அதே வருடம் செப்டம்பரில் உதயமானது! அரசு கேபிள் அக்டோபரில் உதயமானது! இதை நான் என்னுடைய ’சன் குழுமச் சதிகளும், திமுகவின் திசை மாற்றமும்’ என்ற நூலில் எழுதி உள்ளேன்!
இந்த நூல் அன்று பரபரப்பாக விற்பனையானது. அந்த நூல் குறித்து பேராசிரியர் நாகநாதனிடம் விசாரித்து அறிந்து கொண்ட கலைஞர், என் வீட்டிற்கு தன் உதவியாளரை அனுப்பி அந்த நூலை வாங்கி, படித்துவிட்டு, ‘’எழுதப்பட்டவை அனைத்தும் உண்மை தான்’’ என்றும் கூறியுள்ளார்!
மாறன் பிரதர்ஸ் செய்த அடாவடித்தனத்தால் தான் அரசுகேபிள் நெட்வொர்க் உதயனானது. அது தற்போது அதிமுக அரசால் காட்சி ஊடகங்களை சுதந்திரமில்லாமல் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் அதிகாரமாகிவிட்டது. இதையும் நான் எனது , ‘’கேபிள் தொழிலும், அரசியல் சதிகளும்’’ என்ற நூலில் எழுதியுள்ளேன்!
இதையெல்லாம் இப்போது ஏன் கூறுகிறேன் என்றால், இன்றைக்கு சன் குழுமத்திற்கு பல மொழிகளில் 33 சேனல்கள், 42 எப்.எம்.வானொலிகள், 4 பருவ இதழ்கள், இரண்டு நாளிதழ்கள் யாவற்றுக்கும் அடித்தளம் திமுக என்ற மாபெரும் இயக்கம் என்பதை யாருமே மறுக்க முடியாது!
திமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட காலத்தில் மாறன் சகோதர்கள் அன்றைய முதல்வர் ஜெயலலிதா செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்ததையும், தேர்தல் நேரங்களில் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா நடித்த திரைப்படங்களை ஒலிபரப்பியதையும் உடன்பிறப்புகள் மறக்கமாட்டார்கள்!
தமிழகத்தில் பகுத்தறிவுக்கு புறம்பான மூட நம்பிக்கைகளை விதைக்கும் தொலைகாட்சி சீரியல்களை முதன்முதலில் ஒளிபரப்பி தமிழ் சமூகத்தை விழிப்புணர்வற்றவர்களாகவே வைத்திருக்க இன்று வரை செயல்பட்டு வருபவர்கள் மாறன் பிரதர்ஸ் தான்!
இப்போதும் கூட தயாநிதி மாறன் திமுக எம்.பியாக உள்ளார்! எனினும் கூட, அதிமுக அரசின் மிகைப்படுத்தப்பட்ட பொய்பிம்பங்களை கட்டமைக்கும் அந்த வீஷீவல் விளம்பரத்தை சன் ஒலிபரப்புகிறது!
முதலாவதாக மக்கள் வரிப்பணத்தை தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஊடகங்களை குளிர்விக்கும் விதமாக அள்ளி இரைக்கும் அதிமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தை சன் மாதியான எதிர்கட்சி ஊடகங்கள் கண்டித்திருக்க வேண்டும்.மாறாக அந்த அதிகார துஷ்பிரயோகத்தில் தானும் ஆதாயம் அடைவது ஊடக அறத்திற்கே எதிரானதாகும்! அதுவும் திமுக வெற்றியை பாதிக்கும் ஒரு அநீதிக்கு பணம் பெற்றுக் கொண்டு துணை போவது கட்சி விரோத நடவடிக்கையாகும்!
இதை திமுகவின் தர்மபுரி எம்.பி செந்தில்குமார் தன் முக நூலில் கூறியிருப்பதாவது;
சேற்றில் ஒரு கால் , ஆற்றில் ஒரு கால்
சன் டிவி பெரிய வணிகசாம்ராஜ்யமாக இருக்கலாம்
ஆனால் கலைஞரின் உடன்பிறப்புகள் மற்றும் நம் தளபதியின் லட்சக்கணக்கான அடிமட்ட தொண்டன் இவற்றை லேசாக எடுத்துக் கொள்வதில்லை
அதிமுக விளம்பரங்களைச் சுமந்து பணம் சம்பாதியுங்கள் அல்லது
திமுக தொண்டனுக்கு விசுவாசமாக இருங்கள்.
Proverb
You can’t have the cake and eat it too.
Sun TV U might be a big business empire.
But Kalaingar’s foot soldiers and lakhs of cadres who owe their loyalty to Our leader Thalapathy don’t take these things lightly.
Either make money carrying Ads or
Be loyal to DMK cadres
என தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்!
இது திமுக தொண்டர்கள் மத்தியில் வைரலாகி, சன் டிவியை, மாறன் சகோதர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்!
தற்போது ஏராளமான உடன்பிறப்புகள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து எழுதியுள்ளனர்!
கழகத்தில் சன் குழுமத்தையும் ,குடும்பத்தையும் புறக்கணிக்க வேண்டும்- லியோ பிரபு.
கொள்கை கோட்பாடு எதுவுமின்றி பணம் பணம் என அலையும் சன் குழுமத்தை சார்ந்தவர்களை திமுக ஒதுக்கித்தள்ள வேண்டும்.- நம்பியப்பன்
அண்ணா இதற்கும் நாம் முட்டுக் கொடுக்க வேண்டி உள்ளது … இந்த கும்பல் தலைவர் கலைஞரயே… ஏமாற்றிய கும்பல் அண்ணா- தாமு திமுக அண்ணா கிராமம்
திராவிட இயக்கங்களின் கொள்கைக்கு முரணாக புராணக் குப்பைகளை ஒளிபரப்பி மக்களை முட்டாளா மாற்றும் இவர்கள் ஒழிந்தாலே தமிழகத்திற்கு விடிவுகாலம் – அசோக்குமார்
சேற்றுல வச்சா பரவா இல்ல நரகல வச்சிருக்கானுக 2019 தேர்தல்லயும் பீசேப்பிக்கு அதிகம் விளம்பரம் பன்னுனது இவனுக தான் கேவலமா இருக்குண்ணே – ஏ.கே.எஸ்.மணி
இந்த கட்டுரையின் தலைப்பே, ஓரு திமுக தொண்டரிடம் பேசிய பொழுது அவர் வெளிப்படுத்திய வாசகம் தான்!
ஆசிய பணக்காரர்கள் வரிசையில் முன்னணியில் இருக்கும் அளவுக்கு செல்வம் சேர்த்த பிறகும் மாறன் சகோகதர்கள் ’மாரல்வேல்யூ’ இல்லாதவர்களாகவே தொடர்ந்து தங்கள் இயல்பு மாறாமல் உள்ளனர் என்பதே இந்த சம்பவம் உணர்த்தும் செய்தியாகும்!
https://aramonline.in/…/suntv-maranbrothers…/
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்