புத்தகம்…..

இந்த ஏடு தொடக்குதல் சம்பிரதாயங்களுக்கு மறுதினம் எனது தகப்பனார் ஏற்கனவே நன்கு மென் வெயில் காய வைத்து பச்சை நிறம் அழகான பழுப்பு கலராக்கி கருக்கை சீவியெறிந்த பனை மட்டையில் இதே மாதிரியான அரிச்சுவடியை நீண்ட காலம் தொலையாது, பழுதடையாது பாவிக்கக் கூடிய வகையில் செய்து எனக்கு அன்பாக…. அரவணைந்து தந்த அரிச்சுவடியே என்னை இன்று ஆசானாக்கி ‘தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்” என்பதை உண்மையாக்கிய பொக்கிஷ புத்தகம்.

வீட்டு முற்றத்தில் தரையில் அமர்ந்து தரையில் பரப்பிய வெண் மணலில் என் சுட்டு விரல் பிடித்து அ…ஆ… இ என்று திரும்பத் திரும்ப சொல்லிய வண்ணம் எழுத்துப் பழக்கிய அந்த முற்றத்து மண்ணே எனது அடுத்த புத்தகத்தின் பக்கங்கள். இவை இல்லாவிடின நாம் வெறும் கை நாட்டாகவே இருந்திருப்போம் என்று பழைய காணி உறுதிகளில் காணும் கைநாட்டுக்களை என் நினைவலையிற்குள் தற்போதும் கொண்டு வந்திருக்கின்றது என்னமோ உண்மைதான். ஒரு மாநிலத்தில் ஆளுமை மிக்க பெண் முதல் அமைச்சர் கூட நோய்வாய்பட்டிருக்கையில் அரசியலுக்காக கை நாட்டு வைத்ததும் இங்கு நினைவில் வந்து போகின்றது.

பலரைப் போலவே பாலபோதியுடன் ஆரம்பமான அரிவரி பாலர்பாடம் வரை முதல் வகும்புவரை தொடர்ந்தது. அந்த புதுப் புத்தகத்தின் வாசனை புதிதாக ஆய்த மரக்கறிகளில் வரும் வாசனை… புதுப் பூக்களின் வாசனை…. முதல் காதலின் ரம்மியம்கள்… இவை எல்லாவற்றையும் கடந்து வந்த புத்தக நினைவுகள் இவை.

என்னை மனதில் அதிகம் ஆக்கிரகித்துக் கொண்டிருப்பது நான் காதல் வயப்பட்டு… அது பழக்கமோ….நட்போ…. காதலோ….என்று தவித்து ஏற்பாளோ, ஏசுவாளோ, வெறுப்பாளோ என்று எதும் அறியாமல் வரைந்த அந்தக் கடிதங்கள் இன்று இருந்திருந்தால் அவற்றின் தொகுப்பே என் உணர்வுகளின் புத்தகமாக….. பொக்கிஷமாக.. இருந்திருக்கும்.

அது பின்பு காதலாகியதும் குதூகலித்து தினமும் வரையும் கடிதங்கள் பதிலை எதிர்பார்த்திருக்கையில் படலையில் அடிக்கும் எல்லா சயிக்கிளின் மணியும் எனக்கான கடிதத்தின்… காதல் கடிதத்தின்… தபால்காரனின் மணியாக கேட்டதும் உண்மைதான். இதன் தொகுப்புகள் முழுமையாக எழுத்து வடிவில் இல்லாவிட்டாலும் எண்ணங்களின் வடிவில் இன்றும் ஆழ்மனதில் இடும் ரீங்காரங்கள் அச்சிடப்பட்டால் அவையும் எனது புத்தக அலுமாரியை நிச்சயம் நிரம்பும். நான் விரும்பி விரும்பி மீண்டும் படிக்கும் புத்தகமாக இருந்திருக்கும்.

அப்போதெல்லாம் எனது மிகவும் விருப்பமான நபர் என் என்னவளை விட இந்த தபால்காரன்தான். காத்திருந்து பெறும் கடிதம் கணணியில் சொடுக்கியவுடன் கிடைக்கும் ‘மெசேஜ்” ஐ விட இனிமையானது அழகானது. இங்கு காத்திருப்பு…. கற்பனை கனவுடன் கூடிய காத்திருப்பு…. இவற்றுடன் கூடிய என்னவளின் அந்த முத்து முத்தான கையெழுத்து என்று எல்லாம் உணர்வில் கலந்த காலங்கள். புத்தக வடிவம் பெறத் தகுதியுள்ள காவியங்கள்.

இப் புத்தகம் அச்சு பிரதியாவை விட என்னவளின் கரங்களால் எழுதிய அந்த தாள்களை இணைத்து புத்தகமாக ஆக்கியிருந்தால் அதுவும் என் புத்தக அலுமாரிக்கு நிச்சயம் உயிரூட்டி இருக்கும். நேரு தன் மகளுக்கு சிறையில் இருக்கும் காலத்தில் எழுதிய கடிதங்கள் தான் இந்தியாவிற்கு ஒரு ஆழுமை மிக்க தலைவரை உருவாக்கியது. இந்த கடிதங்களின் தொகுப்பு புத்தகமாகி இன்று பலரின் புத்தக அலுமாரியை அலங்கரிகின்றது.

நாஸிகளின் கொடும் சிறையில் மரணத்தின் கணங்களை எண்ணிக் கொண்டிருந்த காலத்தில் மனிதாபிமானமுள்ளள ஒரு சிறைக் காவலரின் உதவியினால் பெற்ற தாள்களில் யூலிஸ் பூசிக்; தனது மனைவிக்கு எழுதிய கடிதங்கள் மிகவும் இறுக்கமான சூழலில் கூட வெளியே கொண்டு வரபட்டு யூலிஸ் பூசிக்கின் தூக்கிலிடப்பட்ட மரணத்திற்கு பின்பு அவரின் மனைவின் விட்டுக் கொடுக்காத தேடலின் பின்பு சேகரிக்கப்பட்டு புத்தகமாக தொகுக்கப்பட்ட அந்த ‘தூக்கு மேடைக் குறிப்புகள்” என்ற புத்தகத்தை யாவரும் தமது புத்தக அலுமாரியில் வைத்திருக்க விருப்படையவரகளாகவே இருப்பர். வாசித்தவர்கள் யாரும் வெறுத்ததாக வரலாறும் இல்லை. வாசிக்காதவர்கள் வாசியுங்கள்.

என்னை புரட்டிப் புடம் போட்ட சிறை அனுபவங்கள் ஜுலிஸ் பூசிக் உடன் ஒப்படும் போது சிறியளவினதே. என்னை மிகவும் பாதித்த புத்தகங்களில் இலக்கியங்களில் இது முதன்மையானது. என் வாழ்வின் தடங்களும் இதனை ஒத்ததாக இருப்பதினாலேயோ என்னவோ ‘மரணத்தினுள் வாழ்ந்தோம்…” என்ற போர்கால நினைவாக இருக்கலாம். தற்போது ‘மரணத்தினுள் வாழ்கின்றோம்….” என்ற தொற்று நோய் காலத்தில் எழுதிய எனது கொரனா பற்றிய விழிப்புணர்வு கட்டுரைகளை தொகுத்து புத்தம் ஆக்கினல் சிலரது புத்தக அலுமாரியை நிரப்பும் என்று நம்புகின்றேன்.

என்னை சுற்றி சுழலும் இந்த புத்தகம் பற்றி பதிவு பலரையும் சுற்றி சுழலும் புத்தகத்தின் பிரதிபலிப்பாக இருக்கும் என்பதினாலேயே குழந்தை பருவம், பதின்ம வயதுக் காதல், ஈழவிடுதலைக் கால யுத்த வாழ்வு, தற்போதைய தொற்று நோய் பேரிடர் என்பவற்றை இங்கு தொகுத்தேன். இந்த விடயங்கள் எனக்கானது மட்டும் அல்ல, எமக்கானது. பலரின் குரலாக நான் இதனை ஒலிக்கச் செய்ய முயல்கின்றேன் அவ்வளவே.

ராகுல் சாங்கிருத்யாயன் (ராகுல்ஜி) இன் எழுத்துகள் எனக்குள் பல தெளிவுகளையும், சிந்தனையையும் தூண்டியவை. மனித குல வரலாற்றை ஒரு கதை ஓட்டத்துடன் ஒரு ‘இளகு” நிலையில் எடுத்துக் கூறிய ‘வால்காவிலிருந்து கங்கை வரை” நூல் விடுதலைப் போராட்டங்களில் தேசிய முதலாளித்து சக்திகள் எவ்வாறு மக்கள் எழுச்சியை தமக்கு சாதமாக்கி சமதர்ம எழுச்சிகளை நிர்மூலம் செய்தனர் என்பதை மிக அழகாக எடுத்தியம்பிய புத்தகம். ஒரு முறைதான் வாசித்துப் பாருங்களேன். மகாத்மா காந்தி பற்றிய வேறு ஒரு கோணப் பார்வை இங்கு புலப்படுவதை அவதானிப்பீர்கள்

அட்சர கணிதம், கேத்திர கணிதம், சூழல், சுகாதரம்;, இரசாயனம், பௌதிகம் நுண்கணிதம் என்று புத்தகங்களையும் அவற்றை எழுதிய தேவகி தில்லையம்பலம், சந்திரசேகரம், குணராசா, கருணாகரன், ஆறுமுகசாமி, பிரான்சிஸ் என்று கடந்து வந்தவர்கள் நாங்கள்.

இவற்றை நான் கடந்து வந்தாலும் புது வகுப்பிற்கு போக முன்பு மார்கழி மாதம் எனது தகப்பனாரிடம் புதிய வகுப்பிற்கான புத்தக அட்டவணை, ஏனைய உபகரணங்கள் பென்சில் பேனா என்பனவற்றை கொடுத்தால் அவர் யாழ்ப்பாணம் சென்று கே.கே.எஸ் வீதியில் வண்ணை வைதீஸ்வரன் கோவிலுக்கு அண்மையில் அமைந்த சிறீலங்கா புத்தகக் கடையில் மொத்தமாக வாங்கி வருவார் அவற்றை.

வீட்டிற்கு வந்ததும் இந்த புத்த கட்டை பிரித்து எமக்கானவற்றை எடுப்பதில் உள்ள மகிழ்ச்சி சொல்லி மாளாது. கூடவே மாட்டுத்தாள் பேப்பரில் அழகாக உறை போட்டுப் பாதுகாத்த பக்குவம் ஆகட்டும், பெயர் பொறித்து எழுதியதாகட்டும் அது ஒரு தனிக்கலை. புத்தகத்தை பாதுகாத்தல், புத்தகத்தின் பெறுமதியை உணர்த்துவது என்பதே இந்த புத்தகத்திற்கான உறையாகும். தற்போதெல்லாம் யாரும் புத்தகத்திற்கு உறை போடுகின்றார்களா…? என்றால் இல்லை என்பதாகவே பதில் வரும்.

புத்தகத்தின் வலிமைகளும், பெறுமதியும் எவ்வாறு கால ஓட்டத்தில் மாற்றம் அடைந்து விட்டன என்பதை எடுத்துக்காட்டும் ஒரு செயற்பாடாக இதனைப் பார்க்கலாம். தற்போது எல்லாம் யாரும் புத்தகங்களுக்கு உறையும் பொடுவதும் இல்லை சந்தனமும் பூசுவதும் இலலை. ஒரு வேளை அரசாங்கங்கள் இலவசமாக கொடுப்பிதினாலேயோ….? இது நடைபெறுகின்றது என்றால் மழுமையாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பல பாடப் புத்தகங்கள் கதைப் புத்தகங்கள் போல் தலைமுறை தாண்டியும் பாவிக்கப்படுதுண்டு. ஆங்கிலப் புத்தகமாக நெல்கன் பாக்கரின் பௌதிகம் என்ற புத்தகம், கேத்திரகணிதம், இரசாயனவியல் போனற்வற்றை இங்கு உதாரணங்களாக குறிப்பிடலாம்.

இந்த புத்தகங்கள் பஞ்சாங்கங்கள் அல்ல ஒரு ஆண்டுடன் காலாவதி ஆகி விட. புத்தகங்கள் பொக்கிஷங்கள். காதல் கடிதங்களும்தான் ஆனால் அவை காவியங்கள். பல எழுதுருவடையாத எண்ணக் காவியங்கள்.

அதுவும் கடை குட்டியென்றால் வாழ்நாள் முழுவதும பழைய புத்தகத்தையே காவும் பெரும் பாக்கியம் பெற்றவராக இருப்பார். அந்த புத்தகங்களின் பின்னால் பல அறிஞர்களும்…, அறிவாந்தவர்களும்… படிப்பில் கள்ளம் செய்தவர்களும்.. என்று வரலாறும் இணைக்கப்பட்டிருக்கும்.

இதில் அதிகம் மோசமானவர்கள் நாவல் பழத்திற்காக பாடசாலை வாசலில் இருக்கும் ஆச்சியிற்கு படிக்கும் புத்தகத்தையே விற்று விட்டு தொலைந்துவிட்டது என்று வீட்டில் ‘பொய்’ கூறும் ‘உத்தமர்கள்” சிலரும் இல்லாமல் இல்லை.
ஆச்சியும் வறுமையில் இந்த புத்தகத்தின் பக்கங்கள் ஒன்றாக கிழித்து குழல் செய்து நாவல் பழம் நிரப்பி விற்பார். பழத்தை உண்பதுடன் படிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த கடதாசியில் இருப்பதை வாசிப்பதையும் காணலாம்.

நூலகம் என்னை வாசிப்பதற்கு ஊக்கப்படுத்திய நூலகம் இடைக்காடு சனசமூக நிலையம். எனது அக்காமார் ஒழித்து ஒழித்து வாசித்த கதைப் புத்தகங்கள். காதல் என்ற சொல்லையே அறிந்திடக் கூடாது என்பதற்கான அம்மாவின் கட்டுப்பாடு அது…? அதில் வரும் கதாபாத்திரங்கள், எழுத்தாளர்களின் பெயர்கள் என்று அவர்கள் சொல்வதைக கேட்டு வாசிக சாலையை நோக்கி ஓடிய காலங்கள். பல கிராமங்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்த இந்த சனசமூகநிலைய புத்தக தொகுதிகளுக்குள் என்னை ஆழ்த்திக் கொண்டேன்.

முற்போக்கான கதைகளா என்றால் அது எல்லாம் அப்போது புரியாத வயது. தேவையில்லாத வயது. சுவாரிசமான புத்தகங்கள் அவ்வளவே எனக்கு தேவை அன்று. சினிமா மாத இதழ் ‘பொம்மை”யின் நடுப்பக்கங்களை இரகசியமாக ரசித்த வயது. மணியன், ரசு நல்ல பெருமாள், அகிலன், சாண்டில்லியன், பார்த்சாரதி, கல்கி என்று விரிந்த காலங்கள்.

அடுத்து யாழ் பொது நூலகம் முதலில் ‘காண்பதற்காக” செல்லத் தொடங்கிய நான் காத்திருக்கும் நேரங்களில் கற்தலுக்குரியதாக மாறிய தருணங்கள். மறக்க முடியாத பெண்களின் காணல்களும்…. கற்றல்களும்… எரிந்து போது அழுதே விட்டேன். யாழ் பல்கலைக் கழக நூலகத்தையாவது காப்பாற்ற வேண்டும் என்று குண்டுகளுடன் கட்டி முடிக்காத கட்டத்தின் பாகங்களில் ஒழித்திருந்த இரவுகள் தாக்குதலுக்கு ஆயத்த நிலையில் ‘பனி விழும் மலர் வனத்திற்குள்” பல்கலைக கழக மாணவகைள் சிலரில் நானும் ஒருவன். மத்திதர மாணவ குணாம்சத்தின் வெளிப்பாடுகள் இவை.

நான் கனடாவிற்கு வந்த புதுசில் ஒரு நாள் மாலை நேர வேலைக்காக நான் தங்கியிருக்கும் கட்டத்தின் பின்புறம் உள்ள குப்பைத் தொட்டி அருகாக போகும் போது ஒரு மொத்தமான சற்று ஊத்தையும் ஈரமும் பிடித்த புத்தகம் இருப்பதைக் கண்டேன் முகப்பில் ஏதோ கணிதம் என்றிருக்க ஆர்வத்தால் அக்கம்பக்கம் பாரத்துவிட்டு தூக்கினால் கணிதம் மேதைகள் பற்றிதும் அவர்களின் கண்டுபிடிப்பு பற்றி அரிய புத்தகம். இதில் முதல் வகுப்பில் இருந்து பல்கலைக் கழகம் வரை வற்ற அத்தனை கணித விடயங்களும் தொகுத்து இருந்தன. இதனை இன்றுவரை பாதுகாப்பாக படிப்பதற்காக என் நூலகத்pல் வைதிருக்கின்றேன். இதுவும் என் வாழ்வில் கடந்து சென்ற அரும் பெரும் புத்தகம்தான்.

இலத்திரனியல் ஊடகங்கள் வந்த பின்பு பிரதி பண்ணிய புத்தகங்களுக்கான கேள்விகள் குறைந்திருந்தாலும் தாளில் படிக்கும் போது உள்ள திருப்தி திரையில் படிக்கும் போது இல்லை. இதனை மனேதத்துவ நிபுணர்களும் ஏற்றுத்தான் இருக்கின்றனர். இந்த திரைப் புத்தகம் வெறும் புத்தகமாக இல்லாமல் ஈபுத்தகமாக அழைகப்படுவதும் இங்கு கவனிக்கத்தக்கது.

எம்மில் பலருக்கு வாத்தியார் தந்த பாடக் குறிப்புகள் தான் புத்தகமாகிற்று. இந்த குறிப்புகள் தொலைந்ததினால் வாழ்வே இழந்ததாக நாம் தவித்த குறிப்புப் புத்தகங்கள் இவை. இவற்றின் ஆசிரியர்கள் பெயர் அச்சில் இல்லை… ஆனால் ஆழ்மனத்தில் பலரின் இதயங்களிலும் இன்றும் உள்ளனர். போர்காலத்து எரிப்புக்களும், குண்டு வீச்சுகளும் பலரின் பல்கலைக் கழக கனவுகளை வெறும் கனவாக்கிய வரலாறும் உண்டு. யுத்த காலத்திலும் புத்தகங்களை எரிக்கக் கூடாது என்ற ஹிட்லரையும் தாண்டிய மிக மோசமான செயல்பாடுகள் இவை.

இடதுசாரி சிந்தனையில் ஏற்பட்ட ஈடுபாடு பதின்ம வயது என்னை மக்கள் பிரசுலாயத்திற்கும், யாழ் புத்தக நிலையத்திற்கும் இழுத்துச் சென்று சோவியத் நாடு, சீன மகசீன் என்று வாங்க வைத்த கோலங்கள். வாசிக்க வைத்த கோலங்கள். அது தமிழ் நாட்டின் அண்ணாசாலை நியூ சென்சரி புத்தக நிலையத்திற்கு இழுத்துச் சென்று பெட்டி பெட்டிகளாக லெனின் கார்ல் மாக்ஸ், ஏங்கல் என்ற சமூக விஞ்ஞான மாமேதைகளின் புத்தகத் தொகுதிகளை வாங்கி மூலதனத்தில் ஆரம்பித்து குடும்பம், அரசு, தனிச் சொத்து வரை வரிக்கு வரி படித்து என்னை சமூக விஞ்ஞானக் கண்ணோட்டதிற்குள் இழுத்து வந்து ஒரு சம உடமையாளனாக மாற்றிது என்னவோ உண்மைதான்.

இதன் தொடர்ச்சியா மார்சிம் கோரக்;கியின் ‘தாய்” மறக்க முடியாத நாவலாகவும் நீர்வை பொன்னையனின் எழுத்துகள் என்னை அதிகம் கவர்ந்தவையாக மாறியதும் உண்மைதான்.

ஜெயகாந்தன் முன்னுரை அவரின் கதைகளை விட சிறந்தவையாக இருக்கும். சமரசம் செய்யாத கருத்துக்களையுடைய ஜெயகாந்தனின் புத்தகங்கள் ஒன்றையும் தவறவிடவில்லை ஒவ்வொரு புத்தகத்திலும் அவர் எழுதும் முன்னுரை அந்த புத்தகத்தின் கதைகளை விட சிறப்பாக இருக்கும். புட்டுச் சாப்பிடும் போது புட்டை விட முட்டைப் பொரியல் மேலோங்கி அம்மாவின் பக்குவ புட்டைத் தூக்கிச் சாப்பிடுவது போல்… இருக்கும். அவரினி;ன் ‘சிறைகள் பூட்டப்படுபவன மட்டும் அல்ல அவை திறக்கப்பட வேண்டும் அன்றேல் தகற்கப்படும்…” என்பது என் திமிறிய இளமைக் காலத்தில் சிறைகளை உடைக்க புடைக்க வைத்த முன்னுரைகள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

புறநாநூறு, இதிகாசம் என்றும் உயர் வகுப்பிலும் ஒளவைப்பாட்டி என்றும் பட்டினத்தார் என்றும் சிறுவயதில் கேள்விப்பட்டாலும் இந்த மரபு சார்ந்த இலக்கியம் என்னை கவர்ந்ததை விட மக்கள் சார்ந்த இலக்கியங்களிலேயே அதிக ஈடுபாடு ஏற்பட்டது. மக்களே எனக்கு கற்றுக் கொடுத்து மக்களுக்கான படைப்புகளை ஏற்படுத்த உதவினர்.

இது வரை என் ஆசைப் படி உயர்தர மாணவர்களுக்கான பௌதிக புத்தகத்தை எழுதி முடிக்கவும் இல்லை. என் வாழ்க்கை பயண அனுபவங்களை எழுதி புத்தகம் ஆக்கவும் முடியவில்லை. ஏன் நாம் ரொம்பவும் மதிக்கும் நம்பும் ஈழவிடுதலைத் போராளித் தலைவர் பற்றிய விடயங்களை எழுதுவதற்கு தொடங்கவும் முடியவில்லை. இவைகள் எழுதி புத்தகமாக்கப்பட்டிருந்தால் பலரின் புத்தக அலுமாரியில் இவை அலங்கரித்திருக்கும்.

ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்று பலரின் அனுபவங்களின் பதிவுகளும் எமக்கான பாடங்களாக கொள்வதை விருப்புடையவனாக இருப்பதினால் எனக்குள் பல பெயரிடாத புத்தகங்கள் உள்ளே இருந்து கொண்டுதான் இருக்கின்றது. அவற்றை என் எழுதப்படாத புத்தகங்களுக்கு அவ்வப் போது உசாத்துணையாக கொள்வதை நான் தவறுவதில்லை.

இறுதியாக என் தகப்பனார் 3ம் வகுப்புவரை படித்தவர் ஆனாலும் பகவற் கீதை வரை படித்து உரக்க பாடும் பழக்கம் உள்ளவர். ஒவ்வொரு நாளும் சில பக்கங்கள் மதியத்திற்கு பின்னரான ஓய்வு நேரத்திலும், இரவு நித்திரைக்கு முன்னரான நேரத்திலும் வாசிக்கும் பழக்கம் உள்ளவர். எனக்கும் இது பற்றிய விளக்கமும் கூறுவார். அவரிடம் இருந்து வந்த பழக்கங்கள் என்னை வாசிப்பதில் ஆர்வத்தை தூண்டியுள்ளதே என் புத்தக வாசிபிற்குள் மூழ்கிக் கிடப்பதன் இரகசியமோ..?

அவரின் சம்மந்தி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பண்ணடிதர். வாழ் நாள் முழுவதும் அண்ணாமலை பல்கலைக கழகத்திற்கு சென்றாலும் செங்கம்பள வரவேற்பை பெறும் பண்டிதப் பட்டதாரி. முதல் தர மாணவர்.

பட்டம் எடுத்த பண்டிதர் இராமசாமியும் பட்டறிவுப் பட்டதாரியான முருகப்பிள்ளையும் சம்மந்தியாகி பின்பு புத்தகங்களை பரிமாறி ‘….மச்சான் நான் தந்த அந்த புத்தகம் எப்படி …வாசிச்சியா….? அந்த மயான காண்டம்….. துரொணரின் புதிக் கூர்மை…” என்று விவாதிக்கும் அளவளாவும் அந்த வயோதிப நட்பு…. உறவு….அவர்களிடேயானது. இந்த புத்தகம் பற்றி வாசிப்பு பற்றி இலக்கியம் பற்றிய கருத்துப் பரிமாற்றம் என்னை பிரமிக்க வைத்தன. இருவரும் பரிமாறிக் கொண்டவை நான் வாசிக்க தவறிய ‘பண்டித” இலக்கியங்கள்.

என் தகப்பனாரின் மரபணுவால் என் உடம்பிலும் இந்த இலக்கியங்கள் பாய்ந்திருக்கின்றனவோ என்று எண்ணும் அந்தப் புத்தகங்களும் என் விருப்படையனவே.

ஏன் எனில் என் முதல் ஆசான் என் தந்தையே. என் முதல் புத்தகம் என் தகப்பனாரே.