பெருந்தொற்றுக்குப் பிறகான உலகம் எப்படி இருக்கும்?

(நோம் சோம்ஸ்கி)

நம் உலகத்தில் புதிய தாராளவாதச் சூழலில் அதீதமாக்கப்பட்ட ஏற்றத்தாழ்வை இந்த கரோனா பெருந்தொற்று கூர்மையாக அம்பலப்படுத்தியுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில். அமெரிக்க நாட்டின் இனவாதக் குணத்தையும் வெளிக்கொணர்ந்துள்ளது. புதிய தாராளவாதக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு 40 வருடங்களுக்குப் பிறகான ஒட்டுமொத்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால், நாட்டின் ஒட்டுமொத்த வளத்தில் 20% வளத்தை 0.1 பங்கு ஜனத்தொகையினர் சேர்த்துள்ளனர். ஜனத்தொகையில் பாதிப் பேர், மைனஸ் மதிப்பில் உள்ளனர். 70% மக்கள், அரசின் நிதி உதவியை நம்பி வாழும் நிலை உள்ளது. பெரும்பாலான மக்கள், அன்றன்று வேலைக்கு எஜமானர் அழைப்பதை எதிர்பார்த்து வாழும் அபாயகரமான சூழலில் உள்ளனர். கறுப்பின மக்களின் நிலை இதைவிட மோசமானது. 400 ஆண்டு காலமாக நிலவும் கொடுமையின் எச்சங்கள் வெட்டவெளிச்சமாகியுள்ளது.