வாழைப்பழத்திலும் விதைகள் உண்டு!

கலாநிதி காசிநாதனுடன் நான் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவேன். அவருடன் பேசுவது உவப்பானது. பல விஷயங்களை அவரிடமிருந்து அறிந்துகொள்ளலாம். சமீபத்தில் அவருடன் பேசியபோது, தனது பின் வளவில் செழிப்பாக வளர்ந்த வாழையொன்று ஐந்து சீப்பில் குலை தள்ளியிருப்பதாகச் சொன்னார்.

அப்படியா? என நான் ஆச்சரியப்பட்டேன். ஐந்து சீப்பில் வாழை குலை தள்ளுவது ஒன்றும் புதினமில்லை. ஆனால் அவர் வாழும் மெல்பனில் அது ஆச்சரியம்தான்.

அவுஸ்திரேலியா ஒரு நாடு மட்டுமல்ல, கண்டமும்கூட! இங்கு வெப்ப வலயம், உபவெப்ப வலயம், குளிர் வலயம் என மூன்று மண்டலங்களும் உண்டு. பூமத்தியரேகைக்கு கீழே, பூமிப்பந்தின் தென் முனைப் பக்கமாக அவுஸ்திரேலியா அமைந்திருக்கிறது. இதனால் பூமத்தியரேகைக்கு மேலே இருக்கும் நாடுகளுக்கு, அவற்றின் குளிர் காலங்களில் விவசாய உற்பத்திகளைப் பெருமளவு ஏற்றுமதி செய்யமுடியும். இதுவே இந்த நாட்டுப் பொருளாதார வெற்றியின் சூக்குமம் எனச் சொல்வார்கள்.

இந்தவகையில் பலதும் பத்தும் பேசிய காசிநாதன் சுழன்றடித்து மீண்டும் வாழைக்குலை விஷயத்துக்குவந்து, ‘வாழைப்பழம் நிறைய பெரியபெரிய கொட்டைகள் இருக்குதடாப்பா’ எனச் சொல்லிச் சிரித்தார்.

காலாதிகாலமாக, எமக்குத் தெரிந்த வாழைப்பழத்தில் விதைகள் இல்லை. அன்னாசியிலும் இல்லை. பிற்காலங்களில் இனவிருத்தி செய்யபட்ட திராட்சை, தர்பூசணி, பப்பாளியிலும் விதைகள் இல்லை. இதுபற்றிய விபரம் அறியவே காசிநாதன் என்னைத் தொடர்பு கொண்டார் என்பதைப் புரிந்துகொண்டேன். அவர் தனது துறை சார்ந்த நூல்கள், மட்டுமல்ல அதற்கு வெளியேயும் நியை வாசிப்பவர். அதனால் அறிவியல் ரீதியாக அவருக்கு விளக்கம் சொன்னேன்.

‘இருமடிய’ (Diploid) தாவரங்களில் விதைகள் இருக்குமென்றும் ‘மும்மடிய’ (Triploid) தாவரங்கள் விதைகளற்ற பழங்களைக் கொடுக்குமென்றும், அவரது வாழை ‘இருமடிய’ வாழை என்றும் சொன்னதும் அவர் சட்டெனப் புரிந்துகொண்டார்.

சமையல் அறையில் மொந்தன் வாழைக்காயைப் பொரிக்கவென தோல் சீவிக்கொண்டிருந்த என்னுடைய மனவிக்கு, எமது தொலைபேசி உரையாடல் கேட்டிருக்கவேண்டும். வாழைக்காயும் கத்தியுமாக என்முன் வந்தமர்ந்து, இதைக் கொஞ்சம் விபரமாகச் சொல்லுங்கோ என்றார்.

ஒரு உயிரினம் எப்படி அமையவேண்டும் என்ற தகவல்கள் எல்லாம் கலத்தினுள்ளே (Cell) நூல் போன்ற அமைப்புடைய குரோமசோம்களில் (நிறமூர்த்தம்) பதியப்பட்டிருக்கும். இவை பெரும்பாலும் சோடிசோடியாக இருக்கும். இவற்றை இருமடிய தாவரங்கள் என்போம். உலகில் பெரும்பாலானவை இந்த வகையே. இதேவேளை மூன்று நிறமூர்த்தங்கள் சேர்ந்திருந்தால் அவை மும்மடியம்.

இரண்டடுக்கு குரோமசோம் கொண்ட இருமடிய தாவரங்களில் விதைகள் இருக்கும். அற்றை மூன்றடுக்கு குரோமசோம்கள் கொண்ட தாவரங்களாக மாற்றிவிட்டால், அவைகள் விதைகளற்ற காய் கனிகளைக் கொடுக்கும், அப்படித்தானே? என, எனது விளக்கத்தை இலகுவாக்கினாள் மனைவி. அவளும் அடிப்படை விஞ்ஞானம் படித்தவள்.

உண்மைதான். ஆதிகாலத்தில் எல்லா வாழைப்பழத்துக்கும் விதைகள் இருந்தன. அவை இன்றும் காடுகளிலும் மலைகளிலும் வளர்கின்றன. அதிலொன்றுதான் காசிநாதன் வீட்டு பின்வளவில் குலைபோட்ட வாழை.

ஓஹோ…!

கால ஓட்டத்தில் விதைகொண்ட வாழைகள் இன விருத்தியடைந்து விதைகளற்றவை ஆகின.

எப்படி? இயற்கையாகவா செயற்கையாகவா?

அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் அல்லது இடி, மின்னல், வெப்பம் காரணமாக மிகமிக நீண்ட காலங்களுடாக, மூன்றடுக்கு குரோமசோம்கள் கொண்ட, விதைகளற்ற வாழைகள் இயற்கையாக விருத்தியடைந்தன.

மற்றத் தாவரங்களில்?

அவை செயற்கை முறையில் குறுகிய காலத்துக்குள் மாற்றப்படடவை. தர்பூசனி, பப்பாளி போன்றவை இதற்கு நல்ல உதாரணங்கள்.

அப்போ, விதைகளற்ற தாவரங்களின் இனப் பெருக்கம்?

‘பதிய’முறைகளின் மூலம்தான்! ஆனால் பப்பாளி, தர்பூசனி ஆகியனவற்றின் (மும்மடிய) விதைகளை வியாபார நிலையங்களில் வாங்கலாம். அவற்றிலிருந்து வளரும் தாவரங்கள், காய்கனிகளைக் கொடுக்கும். ஆனால் அவற்றில் விதைகள் இருக்காது.

என்ன அதிசயமாய் இருக்கு! அவங்கள் விதை விக்கிறாங்கள். ஆனால் அற்றிலிருந்து வளர்பவை விதைகளைக் கொடுக்காது? இது கொஞ்சமும் லொஜிக்காக இல்லையே!

உண்மைதான். உதாரணத்துக்கு தர்பூசனியை எடுப்போம். இதன் விதைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம், நாலடுக்கு (Tetraploid) குரோமசோம்கள் கொண்ட தர்பூசனித் தாவரம் இருக்கிறது. பெரும் பணம் செலவு செய்து, அதை ஆராச்சி முலம் விருத்தி செய்திருப்பார்கள். இது அவர்களின் பணம்காய்க்கும் மரம். இதை அவர்கள் வெளியில் விடமாட்டார்கள். இதனுடன் இரண்டடுக்கு குரோமசோம்கள் (இருமடியம்) கொண்ட சாதாரண தர்பூசனியை, மகரந்தச் சேர்கை முலம் கலப்பார்கள்.

ஓ…!

இக்கலப்பின் மூலம் உருவாகும் தாவரம், விதைகளை உற்பத்தி செய்யும். இந்த விதைகளைத்தான் விவசாயிகளுக்கு விற்பார்கள்.

இந்த விதைகளை விதைத்தால்?

அவை முளைத்து, வளர்ந்து பழம் கொடுக்கும். ஆனால் அதில் விதைகள் இருக்காது. இதுதான் நாமெல்லோரும் விரும்பும் சீட்லெஸ் தர்பூசனி! இது ஒருவகையில் பன்னாட்டு நிறுவனங்கள், உலக விவசாயத்தியில் செலுத்தும் ஆதிக்கம் என்றும் சொல்லலாம்.

எனது இந்த விளக்கம் மனைவிக்குப் புரியவில்லை என்பது அவளது முகத்தில் தெரிந்தது. இதிலும் இலகுவாக என்னால் இந்த விஷயத்தைச் சொல்ல முடியவில்லை.

உலகம் அழியப்போகுது. வேறொன்றுமில்லை, என்றபடி மனைவி வாழைக்காய் பொரிக்க, மீண்டும் சமையலறைக்குள் நுழைந்தாள்.

ஆசி கந்தராஜா
ஞானம் சஞ்சிகை ஜனவரி 2020