வீடு என்பது வெறும் இடம் மட்டுமல்ல!- ஓவியர் மருது பேட்டி

ஊரடங்கு தொடங்கியதிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் வீடு திரும்புவதற்காகப் படும் அல்லல்களைப் பார்த்துப் பார்த்து எதிர்வினையாக ஓவியர் மருது தனது ஸ்கெட்ச் புத்தகத்தில் படங்களை வரைந்துகொண்டிருக்கிறார். ‘எனது கையறு நிலையில் இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?’ என்று கண்ணீரோடு தனது சித்திரங்களைப் பகிர்கிறார். அந்தச் சித்திரங்கள் குறித்து அவரது இல்லத்தில் மேற்கொண்ட நேர்காணல் இது…

உங்களது இந்த சித்திரங்களில் மரணம் ஒரு துர்தேவனைப் போல புலம்பெயர் தொழிலாளர்களைத் தொடர்கிறதே?

ஈழ விடுதலைப் போரின்போது குதிரை மீது உட்கார்ந்திருக்கும் மரணத்தை வரைந்தேன். அவன்தான் இந்தப் புலம்பெயர் தொழிலாளர்களையும் எனது சித்திரத்தில் துரத்திக்கொண்டிருக்கிறான். ஊடகங்களில் வந்த புகைப்படங்களும் வீடியோக்களும் என்னைப் பதைபதைக்க வைத்தன. ஒரு பெண், இறந்துபோகும் தறுவாயில் இருக்கும் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு, இன்னொரு குழந்தையைத் தோளில் போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கும் காட்சியைப் பார்த்தபோது தாங்கவே முடியவில்லை. குழந்தையை இழக்கப்போகும் அந்த அம்மாவின் பிலாக்கணம் மனத்திலிருந்து போகவே இல்லை. அவை சித்திரங்களாக மாறிவிட்டன.

நாஜி விஷவாயுக் கிடங்கில் அடைப்பதும் இத்தனை தூரம் புலம்பெயர் தொழிலாளர்களை நடக்கவிட்டதும் ஒன்றுதான் என்று ஒரு ஓவியத்திலேயே எதிர்வினையாற்றியுள்ளீர்கள்?

இந்த நிலைக்கும் மேல் மனிதர்களை எப்படித் தள்ள முடியும்? அரசாங்கத்துக்கு மனம் இல்லாமல் போய்விட்டது. உரிய காலத்தில், உரிய முடிவுகளை எடுப்பதற்கான சக்தி இல்லாமல் போய்விட்டது. இனி, அவர்களுக்கு வாழ்க்கையில் என்ன உத்தரவாதம் கொடுக்க முடியும்? அப்படிப்பட்ட நிலைக்கு அவர்களைத் தள்ளிவிட்டோம். ஒரு வாரம் அவர்களுக்கு அவகாசம் கொடுத்து, அவரவர் பாதுகாப்பாக வீடு திரும்பும் நிலையைத் திட்டமிட்டிருந்தால் இதைத் தவிர்த்திருக்கலாம்.

அடைத்து வைக்கப்பட்டதை மீறி வெளியே வந்து, ஊர் திரும்ப வேண்டும் என்று போராடியவர்களை போலீஸ் லத்தியால் அடிக்கிறார்கள். விலங்குகளைப் போல அவர்கள் மீது கிருமிநாசினி கலந்த நீரைத் தூவுகிறார்கள். அதுபோக, அத்தனை சிரமங்களுக்குப் பிறகு ஊர் திரும்புவதற்கான ரயிலுக்குக் காசு கேட்டனர். காசு கொடுக்க முடியாதவன்தானே சாலையில் நடக்க இறங்குகிறான்.

சென்னையில் வீடு இல்லாமல், உடம்பு சரியில்லாமல், சகோதரி வீட்டுக்குப் போன கூலித் தொழிலாளி ரவியை அண்டை வீட்டுக்காரர்கள் கரோனா நோயாளி என்று பயந்து விரட்டிவிட்டார்கள். அவருக்கு கரோனா இல்லை. தெருவுக்கு வந்தவர் அங்கேயே இருந்து அடுத்த நாள் இறந்துவிட்டார். சக மனிதர்கள் தொடர்பான அணுகுமுறையையும் இந்த ஊரடங்கு மாற்றிவிட்டது.

எவ்வளவு சித்திரங்கள் வரைந்திருப்பீர்கள்?

முப்பதுக்கும் மேல் இருக்கும்.

இந்தியாவின் எல்லா மூலைகளிலிருந்தும் நடந்தும் சைக்கிளிலும் கிடைக்கும் வாகனங்களிலும் போகும் காட்சிகள் எதை உணர்த்துகின்றன?

செத்தாலும் ஊருக்குப் போய்ச் சாவோம் என்ற தீர்மானத்துடன் அவர்கள் நடந்துபோகின்றனர். வீடு என்பது வெறும் இடம் மட்டுமல்ல. வீடு என்பது உணர்வு என்பது எப்போதைக்குமான உண்மை என்று புரிகிறது.

  • ஷங்கர்ராமசுப்ரமணியன்,