எல்லோரும் சமமென்று இயற்றிடுக சட்டமொன்று!

(எஸ். ஹமீத்)
ஆங்கிலேயர் கருணை கூர்ந்து
அன்றொருநாள் சுதந்திரம் ஈந்து
ஆண்டுகள் அறுபத்தொன்பதும்
ஆகிற்று; ஆனாலும்…
ஓய்ந்ததுவோ வன் கொடுமை?
ஓங்கியதோ நம் நிலைமை?

பெரிதாகச் சண்டையிட்டுப்
பெறவில்லை சுதந்திரத்தை…
சிறிதேனும் இம்மண்ணில்
சிந்தவில்லை இரத்தத்தை!
போராடிப் பெற்றிருந்தால்
சீராகக் காத்திருப்பார்;
இலவசமாய்க் கிடைத்ததினால்
அதை விஷமாய் ஆக்கிவிட்டார்!
மதமென்றும் மொழியென்றும்
மதம் கொண்டார் பல காலம்;
இனமென்றும் குலமென்றும்
ரணம் தந்தார் எந்நாளும்!
பள்ளிகளை இடிப்பதையும்
கோயில்களை உடைப்பதையும்
சுதந்திரமாய்ச் செய்வோர்க்குச்
சுதந்திரமாம் இந்நாட்டில்!
சோனகரை அழிப்பதற்கும்
தமிழர்களை ஒழிப்பதற்கும்
சதிசெய்து வாழ்வோர்க்குச்
சுதந்திரமாம் இந்நாட்டில்!
பெரும்பான்மை  சிறுபான்மைப்
பேதங்கள் பார்ப்போர்க்குச்
சுதந்திரமாம் இந்நாட்டில்!
எவ்வினமும் சமனென்று
எண்ணாது தம்மினமே
இங்குரிமை பெறுவதற்கு
ஏற்றதெனச் சொல்வோர்கள்
கொண்டாடும் சுதந்திரத்தில்
திண்டாடித் தவிக்கின்றோம்!
எப்போதும் எல்லோரும்
இங்கு சமம் என்று சொல்லி
இயற்றிடுக சட்டமொன்று…
அப்போது நாங்களெல்லாம்
அணிவகுத்துச் சுதந்திர நாள்
அனுபவிப்போம்; ஆதரிப்போம்!