சம்பந்தப் பெருமானும், அடியாரும் வாழ்க!

தன்மானத் தமிழன் என்பார்
தானைத் தலைவன் என்பார்
தாய்மானம் காக்க
புறப்பட்ட தனயன் என்பார்
என்மானம் இவருக்கு
உண்டோ? யாம் அறியோம்

மன்னாதி மன்னவர் போல்
தென்னாட்டில் கொலு இருப்பார்
தேர்தல் காலத்தில்
நம்நாட்டில் படை எடுப்பார்
தன்மானம், சுயாட்சி,
தமிழ் அரசு, தனி நாடு
பன்னாட்டு விசாரணை…
என்றெல்லாம் கதை அளப்பார்

பன்னாடை என்றாலும்
வீட்டில் வருபவரை
பொன்னாடை போர்த்தி
பல்லக்கில் ஏற்றுகின்ற
கன்ம வினைப் பயனால்
கட்டுண்டு நம் மக்கள்
என்ன செய்வதென
தெரியாமல் வாக்களிக்க
பொன், பொருள், பதவி இவற்றோடு
பென்ஸ் கார், வீடு, பார் லைசன்ஸ், சின்ன வீடு…
இன்னும் எத்தனையோ இன்பங்கள் இவர் பெறுவார்

தன்வீடு, தன்மனைவி, தன்மக்கள், சுற்றம்
நன்மை பெற வேண்டுமென
நன்றாக சிந்தித்து
தென்னிலங்கை அரசோடு
பின்கதவால் பேசி
வன்ஸ் மோர், வன்ஸ் மோர் என்று
வரம் வாங்கும் தந்திரத்தால்
தன்னைத்தான் காதலன் ஆகிடுக
என்று முன்னைப் புலவன் வள்ளுவன் சொன்ன மொழி
உண்மையிலும் உண்மை என்று வழி சமைத்தார்.

பென்னம் பெரிய பேரவையில் மட்டும்
என்பு முறுக்கேற வன்மம் ஊட்டி
ஜென்மப் பகை கூட்டி
வாய் வீரம் காட்டுவதில்
சண்டாளர்களுக்குள் சரியான போட்டி
ஆனாலும்
இரகசியமாய் பின்னால் ஓடி
மன்னிப்புக் கோருவார்
தென்னாடுடைய தலைவா போற்றி…
எம்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
என்று தேவாரம் பாடுவார்

வாழ்க இவர் கொற்றம்

வளர்க இவர் சுற்றம்

சம்பந்தப் பெருமானும், அடியாரும் வாழி

(கல்கிசையான்)