‘அச்சுவேலியில் ஏற்பட்டது நிலஅதிர்வு எனக்கூறமுடியாது’

அச்சுவேலி நவக்கிரி பகுதியில் நிலத்தில் ஏற்பட்ட விரிசலானது, பாறைகளில் ஏற்பட்ட அதிர்வுகள் மற்றும் விரிசல்கள் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர். ஏஸ்.ரீ.வீ. இராஜேஸ்வரன், தமிழ்மிரருக்கு ஞாயிற்றுக்கிழமை (24) தெரிவித்தார். அச்சுவேலி, நவக்கிரியில் தருமசிறி என்பவரின் வீட்டுச் சுவரில் சனிக்கிழமை (23) அதிகாலை பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், வீட்டிலிருந்து தோட்டத்தரவைகள் வரையில் நிலத்திலும் விரிசல்கள் ஏற்பட்டன.

இது நிலஅதிர்வாக இருக்கலாம் என பேசப்பட்ட நிலையில், அது எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே பேராசிரியர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து கூறுகையில், யாழ்ப்பாணத்தின் நில அமைப்பு சுண்ணாம்பு பாறைகளைக் கொண்டதாக காணப்படுகிறது. இதனால் நிலத்துக்கு கீழுள்ள சுண்ணாம்புப் பாறைகள், மற்றும் குகைகளில் ஏற்பட்ட அசைவு காரணமாக இவ்வாறான விரிசல் இடம்பெற்றிருக்கலாம் என நம்பலாம்.

சுண்ணாம்புப் பாறைகளின் கீழ் காணப்படும் சிறு படைகளால் இப்படியான மாற்றங்கள் ஏற்படுவது வழமை. நிலத்தின் கீழ் ஏற்பட்ட மாற்றமே விரிசலுக்கு காரணம். மாறாக இது நில அதிர்வு என கூற முடியாது. மேலும் இது தொடர்பில் புவிச்சரிதவியல் அளவை சுரங்க பணியகம் ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் மேலும் கூறினார்.