அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதே அரசின் இலக்கு

அதிகாரங்களைப் பற்றிக்கொள்ளாது அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதே தமது நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சர்வதேச ரீதியில் அரசியல் நிபுணர்கள் மற்றும் அரசியல் யாப்புக்கள் மூலம் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது பற்றியே பேசப்படுகிறது. இது போன்று தானும் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கவே பதவிக்கு வந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

மாகாண முதலமைச்சர்களின் மாநாடு நேற்று (21) ஹிக்கடுவையில் நடைபெற்ற போது மாகாண முதலமைச்சர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி மாகாண சபைகளில் நிலவும் அதிகாரங்கள் வளங்கள் படிப்படியாகப் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மாகாண சபைகளில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில்

அமைச்சரவைக் கூட்டத்தில் மாகாண முதல்வர்களையும் பங்கேற்கச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு சகல மாகாண முதலமைச்சர்களுக்கும் ஜனாதிபதி நேற்று அழைப்பு விடுத்தார். மாகாண முதலமைச்சர்களின் 3வது மாநாடு நேற்று ஹிக்கடுவை ‘ஹிக்காட்சான்ஸ்’ ஹோட்டலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஆரம்பமானது.

வட மாகாண முதலமைச்சர் தவிர்ந்த ஏனைய எட்டு மாகாண முதலமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள் அமைச்சுக்களின் செயலாளர்கள் பங்கேற்ற இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

மாகாண முதலமைச்சர்களால் தமது மாகாணங்களில் நிலவும் பிரச்சினைகள் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டன. சில பிரச்சினைகளின் தீ்ர்வுக்கான ஆலோசனைகளை ஜனாதிபதி இம்மாநாட்டில் முன் வைத்ததுடன் மத்திய அரசாங்கமும் இதில் சம்பந்தப்படுவதால் அமைச்சரவையில் இது தொடர்பில் ஆராய்ந்து தீர்வு பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

நாட்டில் முன்னொரு போதும் இல்லாத மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரதான இரு கட்சிகளும் இணைந்துள்ள நிலையில் ஜனாதிபதி ஒரு கட்சியிலும் பிரதமர் ஒரு கட்சியிலும் அங்கம் வகித்துக் கொண்டு இரண்டு கட்சிகளையும் சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் வித்தியாசமான அரசாங்கம் இது.

அதேபோன்று மாகாண சபைகளின் அதிகாரங்களில் வட மாகாணத்தை ஒரு அரசியல் கட்சி நிர்வகிக்கிறது. கிழக்கு மாகாணத்தில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து நல்லிணக்க ஆட்சி இடம்பெறுகிறது.

இத்தகைய மூன்று காரணங்களுடன் நாம் எமது பொறுப்புகளை நிறைவேற்றிக் கொண்டு எதிர்காலத்தில் செயற்படுவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த சூழ்நிலையை தெளிவுபடுத்திக் கொள்வது அவசியமாகும்.

இதற்கு முன்னர் இந்த நாட்டில் இத்தகைய ஒரு முறைமை நடைமுறையில் இல்லாததால் சிலர் இது முடியாத காரியம் என்றும் கடினமான விடயம் என்றும் கூறி வருகின்றனர். இதற்கு முன்னர் இவ்வாறு ஒருமுறை இல்லாததாலேயே அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.

இதற்கான அர்ப்பணிப்பு இல்லாமையும் இதற்கு மற்றுமொரு காரணமாகும்.

நாட்டு மக்களுக்காக பொது நோக்கத்துடன் செயற்படுவது என்ற அர்ப்பணிப்புடன் இருந்தால் இலக்கை வெற்றி கொள்ள முடியும்.

நான் அண்மையில் ஐரோப்பிய விஜயம் ஒன்றை மேற்கொண்ட போது ஜேர்மனியில் இத்தகைய தேசிய அரசாங்கத்தையும் அதன் முன்னேற்றத்தையும் நேரில் காணக்கிடைத்தது. ஐரோப்பாவில் பெரும் பிளவுகள் நிலவுகின்ற போதும் அதன் பிரதான நாடான ஜேர்மனியில் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்துள்ளன. இதனால்தான் ஜேர்மனில் எவ்வித பிரச்சினையுமில்லாமல் ஆட்சி நடக்கிறது.

உலகில் முன்னணி நாடுகளோடு எம்மை நாம் ஒப்பிடும் போது அவற்றை முன்னுதாரணமாகக் கொண்டு செயற்படுவது முக்கியமாகிறது.

மாகாண அரசுகள் தொடர்பில் நாம் தெளிவு பெறுவது முக்கியம். சந்திரிக்கா குமாரதுங்கவின் காலத்தில் மாகாண சபைகளில் நிலவிய குறைபாடுகளைக் களைந்து மாகாண சபைகளைப் பலப்படுத்தும் பரிந்துரையொன்றை முன்வைத்தேன். அது செயற்படுத்தப்படவில்லை.

மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற் குழுவுக்கூடாக இந்த யோசனைத் திட்டத்தை முன்வைத்தேன். அதற்கு முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமசிங்கவின் தலைமையில் குழுவொன்று இதற்காக நியமிக்கப்பட்டது அதுவும் செயற்படவில்லை.

ஐக்கிய இலங்கையில் நாம் எவ்வாறு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வது, சமூகங்களிடையே நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பது எவ்வாறு என்பதை நல்ல சிந்தனையுடன் சிந்தித்து அதற்கான செயற்திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டியது முக்கியமாகும். இதில் எமது மனச்சாட்சியும் நேர்மையும் மிக முக்கியமாகும். பதவிகளில் உள்ளவர்கள் தமது காலத்தில் அரசியலமைப்புக்கு ஏற்ப செயற்படுகின்றனர்.