அதிகாரப் பரவலாக்கம் அவசியம்’

“நாடு பிளவுபடாமல் இருப்பதற்கு, அதிகாரப் பரவலாக்கம் மிக முக்கியமானது” என, பிரபல ஊடகவியலாளரும் விரிவுரையாளருமான காமினி வியன்கொட தெரிவித்தார். கண்டி டெவோன் ரெஸ்ட்டில் நேற்று (24) மாலை இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்புத் திட்டத்தை கொண்டு வந்த ஐக்கிய தேசியக் கட்சி, 17 வருடங்களில் அதனை அமுல்படுத்தியது. அன்று, அதனை எதிர்த்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அந்த அரசியல் அமைப்பை 23 வருடங்கள் அமுல்படுத்தியது. இன்னும் அதனையே அமுல்படுத்த சிலர் கேட்கின்றனர். அவர்கள், இவ்வாறு இந்த அரசியல் அமைப்பையே அமுல்படுத்துவதற்கு கேட்கும் காரணங்கள் இரண்டு உள்ளன. ஒன்று, இந்த அரசியல் அமைப்பின் மூலம் கிடைக்கும் அதிகார ருசி. மற்றது, இன வாதம்.

“1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பில், இன வாதம் இருப்பத்தாக, மேலோட்டப் பார்வையில் தெரிவதில்லை. இருந்தபோதும், கடும் போக்குடைய சில சிங்கள அரசியல்வாதிகள், பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் எப்போதும் சிங்களவர் ஒருவரே ஜனாதிபதியாக வரமுடியும் என்று சிந்திக்கின்றார்கள்.

“உலகில் அதிகாரத்தை பகிர்ந்துகொண்ட நாடுகள், பிரிவைத் தடுத்துக் கொணடுள்ளதுடன், அதிகாரத்தைச் சேரத்துக்கொண்ட நாடுகள், பிரிந்துச் சென்றுள்ளதை காணமுடிகிறது. எனவே, எமது நாட்டில் புதிதாக அமையும் அரசியல் யாப்பு, 30 வருட கசப்பான கடந்த காலத்தை மீண்டும் உருவாக்காத ஒன்றாக இருக்கவேண்டும். அதற்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்ப வழங்கவேண்டும்” என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த, புதிய அரசமைப்பு தொடர்பாக மக்கள் கருத்தரியும் குழுவின் தலைவர் சட்டத்தரனி லால் விஜேநாயக்க கூறியதாவது, “இலங்கையில் இதுவரையும் உருவாகியுள்ள எந்த ஓர் அரசியல் அமைப்புக்கும் மக்கள் யோசனைகளைக் கருத்தில் கொள்ளவில்லை. இருந்தபோதும், முதல் முதலாக புதிய அரசியல் யாப்புக்கு பரந்த அளவில் மக்கள் யோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டன. எனது தலைமைத்துவத்தில் இயங்கும் குழு, நாடு முழுதும் சென்று மக்கள் கருத்துகளை கேட்டபோது 2,516 பேர் நேராக கருத்துத் தெரிவித்ததுடன், எழுத்து மூலம் 3,000க்கும் மேற்பட்டவர்களும் இயக்கங்களும் தமது கருத்துகளை தெரிவித்தனர். ஆகவே, அனைத்து மக்களுக்கும் பொருந்தக் கூடிய, நீண்ட காலத்துக்கு பொருத்தமான ஒரு யாப்பை உருவாக்குவதே நோக்கமாகும்” எனத் தெரிவித்தார்.