‘அபிவிருத்திகளைத் திணிப்பதால் ஐக்கியத்தை ஏற்படுத்திவிடமுடியாது’ – சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு, கிழக்கின் பொருளாதார விருத்தி நாட்டின் ஐக்கியத்தை உறுதி செய்யும் என்ற உங்கள் எதிர்பார்ப்பு இடந்தவறியதாகவே எனக்குப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அரசியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்கள் மீது பொருளாதார அபிவிருத்திகளைத் திணிப்பதன் மூலம் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்திவிடமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுதிய கடிதத்திலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு, கிழக்கு மாகாண முன்னேற்றப் பணிகள் பற்றி ஆராய, அண்மையில் நியமிக்கப்பட்ட 48 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியில் வடமாகாண முதலமைச்சர் இடம்பெற்றிருந்ததை வாசகர்கள் அறிவார்கள்.

14.06.2018 அன்று நியமித்த ஜனாதிபதியின் நியமனக் கடிதம், 05.07.2018 லேயே இருபத்தியொரு நாள்களின் பின்னர் முதலமைச்சரின் கைகளுக்குக் கிடைத்தது.

அந்தத் தாமதத்தையும் சுட்டிக்காட்டி, நீண்தொரு கடிதத்தை, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

அவரின் கடிதத்தின் சாராம்சம் பின்வருமாறு,

தங்களால் தலைமை தாங்கப்படவிருக்கும் செயலணி பிரதமர், மத்திய அமைச்சர்கள் 15 பேர், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்கள், வடமாகாண முதலமைச்சராகிய என்னையும், தற்போது வெற்றிடமாகவுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சரையும், இராஜாங்க அமைச்சர் ஒருவர், முன் கூறிய பிரதமர் அடங்கிய மத்திய அமைச்சர்கள் அனைவரதும் அமைச்சுகளின் செயலாளர்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பிரதம செயலாளர்கள், இராணுவம், கடற்படை, ஆகாயப்படை ஆகியவற்றின் கட்டளைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், யாழ் பாதுகாப்புப் படையின் தளபதி, கிழக்குப் பாதுகாப்புப் படைகளின் தளபதி மேலும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரை உள்ளடக்கியுள்ளது.

என்னையும் எமது பிரதமசெயலாளரையும் தவிர வட மாகாணத்தை அங்கத்துவம் வகிக்க வேறெவரும் அதில் இல்லை. செயலணியின் செயலாளர் சிவஞான சோதி, வடமாகாணத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் மத்திய அரசின் அலுவலர் ஆவார்.

செயலணியின் வடக்கு, கிழக்கு பற்றிய முன்னேற்றச் செயற்பாடுகள், நாட்டின் ஐக்கியத்தையும் ஒன்றிணைவையும் ஏற்படுத்தி, சமமான சமூகப் பொருளாதார வளர்ச்சியையும் வருமான வளர்ச்சியையும் ஏற்படுத்தும் என்று குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படும் செயற்றிட்டங்களின் மீளாய்வு உள்ளடங்கிய பல விதப் பணிகள் குறித்த செயலணிக்கு அடையாளப்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கில் நடைபெற்றுவரும் முன்னேற்றப் பணிகள் அனைத்தையும் நடத்துவிக்கும், ஒருங்கிணைக்கும், மேற்பார்வை பார்க்கும் பணி ஜனாதிபதி செயலணியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

என்னையும் எமது பிரதம செயலாளரையும் இந்தச் செயலணியினுள் உள்நுழைத்தமைக்காக நான் உங்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பல மத்திய அமைச்சர்களும் அவர்களின் அமைச்சுச் செயலாளர்களும் இந்தச் செயலணியில் சேர்க்கப்பட்டிருப்பினும் எமது வடமாகாண அமைச்சர்கள் இதில் விடுபட்டுள்ளார்கள். எமது அமைச்சர்களின் மற்றைய செயலாளர்களும் விடுபட்டுள்ளார்கள். உங்கள் தேர்வில் இது ஒரு பாரிய தவறாக எனக்குப்படுகின்றது.

அடுத்து வடக்கு, கிழக்கின் பொருளாதார விருத்தி நாட்டின் ஐக்கியத்தை உறுதி செய்யும் என்ற உங்கள் எதிர்பார்ப்பு இடந்தவறியதாகவே எனக்குப்படுகின்றது. அரசியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்கள் மீது பொருளாதார அபிவிருத்திகளைத் திணிப்பதன் மூலம் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்திவிடமுடியாது. எமது வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் தீர்வானது முதலில் ஏற்படுத்தப்பட்ட பின்னரே அபிவிருத்திப் பணிகள் செயற்படுத்தப்பட வேண்டும். தென்னாபிரிக்காவில் அரசியல் தீர்வு பெற்ற பின்னரே உண்மைக்கும் சமரசத்துக்குமான ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

தெற்கானது வடக்கு, கிழக்குக்கு இவ்வாறான அபிவிருத்திப் பணிகளை செய்திருப்பதாக ஜெனிவாவிலோ வேறெங்குமோ உலக சமுதாயத்துக்கு நாம் எடுத்துக் காட்டினாலும் போர் முடிந்து ஒன்பது வருடங்களுக்கு மேலாக வடகிழக்கு மக்களின் அடிப்படை அரசியல்ப் பிரச்சனைகளைத் தொடர்ந்து வந்துள்ள மத்திய அரசாங்கங்கள் தீர்க்கவில்லை என்ற விடயத்தை நாம் மூடி மறைக்கமுடியாதிருக்கும்.

உங்களால் இதுவரை தரப்பட்டுள்ள பொருளாதார நன்மைகள் தொடர்ந்து வந்த மத்திய அரசாங்கங்களால் எமது மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட பொறுப்பற்ற சிதைவுகளுக்கும் பெரும் அழிவுகளுக்கும் செய்யப்படும் பிராயச்சித்தமே. மேற்படி அழிவுகளை நீங்கள் ஏற்படுத்தியமைக்குக் காரணம் தொடர்ந்துவந்த அரசாங்கங்கள் கௌதம புத்தர் காலத்துக்கு முன்பிருந்து அடையாளப்படுத்தக் கூடிய இந்நாட்டின் ஒரு பகுதியின் பெரும்பான்மையினராய் வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமையே. வட, கிழக்குத் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளையும் உரித்துகளையும் ஏற்றுக் கொள்ளாமையே போருக்குக் காரணமாக இருந்தன.

எனவேதான் பொருளாதார அபிவிருத்தியால் இன ஐக்கியத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தலாம் என்று நீங்கள் நினைப்பதின் தாற்பரியம் என்னவென்றால் எம்மக்கள் தமது அரசியல் உரித்துகளையும் மனித உரிமைகளையும் நீங்கள் தரும் பொருளாதார அபிவிருத்தியின் பொருட்டு கைவிட்டுவிடுவார்கள் என்று நீங்கள் எண்ணுவதே.

மூன்றாவதாக மேற்படி செயலணியின் அமைப்புருவாக்கம் வேடிக்கை பொருந்தியதாக இருக்கின்றது. கிட்டத்தட்ட முழுமையாக மத்திய அரசாங்க அணியினரை மட்டுமே உள்ளடக்கியுள்ள இந்தவ் செயலணியால் வட, கிழக்கில் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தலாம் என்று நினைக்கின்றீர்கள். அதுவும் அரசாங்க அமைச்சர்கள், அவர்களின் செயலாளர்கள், படையினர், ஆளுநர்கள் சேர்ந்து இவ்வாறான சமாதானத்தை ஏற்படுத்தலாம் என்று நினைப்பது வேடிக்கைமிக்கது.

மத்திய அரசாங்கம் அதற்கான நிதியையும் அறிவுரைகளையும் அனுசரணைகளையும் வழங்கவேண்டும். அதிகாரப் பகிர்வென்பது இதுவே! இல்லையேல் தற்போது காண்பது போல் அபிவிருத்தியும் அதிகாரப்பகிர்வும் கண்காட்சிப் பொருட்கள் ஆகிவிடுவன.

எமது கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அண்மையில் கூறியவாறு, இந்த வருட முடிவுக்குள் எமது அரசியல் பிரச்சினைகள் யாவும் தீர்க்கப்படவேண்டும். அதன் பின்னரே, அபிவிருத்திச் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். அரசியல் பிரச்சினைகளை ஜனாதிபதியாகிய நீங்கள் விரைவில் தீர்த்து வைத்த பின்னர் நாம் சம அந்தஸ்துடையவர்களாக உட்கார்ந்து, இந்த நாட்டைக் கட்டி எழுப்ப இடமளிப்பீர்கள் என்று நம்புகின்றேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.