அரசியல் மோதலில் டொனால்ட் ட்ரம்ப்

ஐக்கிய அமெரிக்காவின் பிராந்தியமான புவேர்ட்டோ றிக்கோவில், மரியா சூறாவளி காரணமாகப் பேரழிவு ஏற்பட்டுள்ள போதிலும், அங்குள்ள அதிகாரிகளோடும் மக்களோடும், ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அரசியல் ரீதியான மோதல்களில் ஈடுபட்டுள்ளார். இது, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும், அவருக்கான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மரியா சூறாவளி, செப்டெம்பர் 24ஆம் திகதி, புவேர்ட்டோ றிக்கோவைத் தாக்கியது. மிகப்பலமான இந்தச் சூறவாளியால், அங்கு மாபெரும் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், ஜனாதிபதி ட்ரம்ப்பின் நிர்வாகம், அந்த மக்களைப் பற்றிப் பெரிதளவில் அலட்டிக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு, தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தது.

இந்த அனர்த்தம் இடம்பெற்று ஏறத்தாழ இரண்டு வாரங்கள் நிறைவடைகின்ற போதிலும், அங்குள்ள மக்களில் 95 சதவீதமானோர், இன்னமும் மின்சார வசதி இல்லாத நிலையில் காணப்படுகின்றனர். சுமார் 1.7 மில்லியன் மக்கள் (சனத்தொகையில் 50 சதவீதம்), குடிநீர் வசதி இல்லாமல் காணப்படுகின்றனர். ஏராளமானோருக்கு, ஏனைய அடிப்படை வசதிகள் இல்லாத நிலையும் காணப்படுகிறது.

16 பேரைக் கொன்ற இந்தச் சூறாவளி காரணமாக, அப்பகுதியின் வீதிகள் உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில், மீளக்கட்டியெழுப்புவது என்பது, கடினமான ஒன்றான மாறியுள்ளது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, அதிகமாகப் பாதிக்கப்பட்ட சான் ஜுவான் பகுதியின் மேயர் கார்மென் யலின் குரூஸ், ஜனாதிபதி ட்ரம்ப்பையும் அவரது நிர்வாகத்தையும் விமர்சித்திருந்தார். அதன் பின்னர், தமக்கான உதவிகளை வழங்குமாறு, தொலைக்காட்சியில் தோன்றி, மன்றாடியிருந்தார்.

ஏற்கெனவே, உதவிகளைப் பெருமளவில் வழங்காத நிலையில், மிகச்சிறந்த பணியை ஆற்றிக் கொண்டிருப்பதாகக் கூறிவரும் ஜனாதிபதி ட்ரம்ப், இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, மேயர் மீதான தனது விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

“சான் ஜுவானின் மேயராலும் ஏனையோராலும், மோசமான தலைமைத்துவம் வெளிப்பட்டுள்ளது. தங்களுடைய பணியாளர்களை, உதவுவதற்காகத் திரட்ட முடியவில்லை. இது, சமுதாயப் பணியாக இருக்க வேண்டிய நிலையில், எல்லாமே அவர்களுக்குச் செய்து கொடுக்கப்பட வேண்டுமென அவர்கள் எண்ணுகின்றனர்” என்று தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியினரால், ட்ரம்ப் மீது விமர்சனங்களை முன்வைக்குமாறு, மேயர் குரூஸ் சொல்லப்பட்டிருக்கிறார் எனவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தனது அரசாங்கம் மீது, அழுத்தங்கள் ஏற்படும் போதெல்லாம், தனது டுவிட்டர் மூலமாக இவ்வாறான குற்றச்சாட்டுகளையும் எதிர்ப்பையும் முன்வைக்கும் ஜனாதிபதி ட்ரம்ப், தற்போது இந்த விமர்சனங்களுக்கும், இவ்வாறான பதிலை வழங்கியுள்ளார்.

எனினும், சூறாவளி காரணமாக, தனது வீட்டை இழந்து, தற்போது தற்காலிகக் கொட்டகையில் வாழ்ந்துவரும் மேயர் குரூஸ் மீது, தனது வாராந்த நிகழ்வாக மாறியிருக்கும் கோல்ப் விளையாடும் இடத்திலிருந்து, ஜனாதிபதி ட்ரம்ப் முன்வைத்த இந்தக் கருத்துகள், பரவலான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் கருத்துகள் தொடர்பாகப் பதிலளித்த மேயர் குரூஸ், உயிர்கள் பற்றிய பிரச்சினை காணப்படும் போது, இவ்வாறான சிறுபிள்ளைத்தனமான அரசியலுக்குத் தயாராக இல்லை என்று குறிப்பிட்டார்.