அலெப்போவில் மீண்டும் மோதல்

சிரியாவின் அலெப்போவில், எதிரணியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து வெளியேறுவதற்கான இணக்கம் இடைநிறுத்தி வைக்கப்பட்டத்தைத் தொடர்ந்து மீண்டும் பயங்கர மோதல்கள் நேற்று (13) அங்கு ஆரம்பித்துள்ளன. இதனால், குளிருடன் பசியில் இருக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டின் பலம்பொருந்திய நட்பு நாடான ரஷ்யா, துருக்கியின் பேரம்பேசுதலில் நேற்று முன்தினமிரவு (13) அறிவிக்கப்பட்ட இணக்கத்தின்படி, அலெப்போவிலிருந்து போராளிகள் வெளியேறுவதாக இருந்தது. இந்நிலையில், அலெப்போவிலிருந்து வெளியேறும் நம்பிக்கையில் அனைத்துக் குடும்பங்களும் நேற்று அதிகாலை கூடியிருந்துள்ளனர்.

இந்நிலையில், அதிகாலை ஐந்து மணிக்கு ஆரம்பிப்பதாக எதிர்பார்க்கப்பட்ட முதலாவது வெளியேற்றம் தாமதமானது. அதன்பின்னர், சில மணித்தியாலங்களில் கடும் மோதல் வெடித்தது. இணக்கம் முறிவடைந்தமைக்கு, சிரிய அரசாங்கம், போராளிகள், அவற்றின் நட்புநாடுகள் மாறிமாறி குற்றஞ்சாட்டுகின்றன. குறித்த இணக்கத்தின் மூலம் சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவில் எதிரணியின் எதிர்ப்பு நிறைவடையும் என்ற நிலையில், குறித்த இணக்கமானது முக்கியமானதாகக் காணப்படுகிறது.

கிழக்கு அலெப்போவில், எதிரணியின் கட்டுப்பாட்டிலிருக்கும் குறுகிய பகுதி பலத்த தாங்கித் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், சில பொதுமக்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, எதிரணியின் பகுதிகளை விமானத் தாக்குதல்களும் தாக்கியதாகத் தெரிவித்துள்ள, மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம், ஒவ்வொரு முன்னரங்கிலும் கடும் மோதல் இடம்பெற்று வருவதாக கூறியுள்ளது.

இந்நிலையில், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளின் மீதான எதிரணியின் றொக்கெட் தாக்குதலும் ஆரம்பித்துள்ளதாக அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இதில், குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிரிய அரசாங்கத்தின் எதிர்ப்பைத் தொடர்ந்தே வெளியேற்றம் இடைநிறுத்தப்பட்டதாக போராளிகளும், அரசாங்கத்துக்கு நெருக்கமான தகவல் மூலமொன்றும் தெரிவித்துள்ளது.

வெளியேற்றப்படுபவர்களின் எண்ணிக்கையை 2,000இலிருந்து 10,000 ஆக அதிகரிக்குமாறு போராளிகள் கோரியதைத் தொடர்ந்தே சிரிய அரசாங்கம் வெளியேற்றத்தை இடைநிறுத்தியதாக அரசாங்கத்துக்கு நெருக்கமான தகவல் மூலமொன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, அரசாங்கமும் அதன் நட்பு நாடான ஈரானும் புதிய நிபந்தனைகளை சேர்க்க முயல்வதாக எதிரணிக் குழுவொன்றின் அரசியல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த இணக்கத்துடன், புவா, கப்ராயா ஆகிய பகுதிகளை அவர்கள் உள்ளடக்க விரும்புகிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார். குறித்த இரண்டு பகுதிகளும், எதிரணியின் முற்றுகைக்குள் உள்ள வடமேற்கு சிரியாவிலுள்ள ஷியாக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிராமங்கள் ஆகும்.