அழுத்தம் கொடுத்த நிறைவேற்று அதிகார யுகத்தை மாற்றியமைத்துள்ளோம் – ஜனாதிபதி

நிறைவேற்று அதிகாரம் சட்டவாக்கத்திற்கும் நீதித்துறைக்கும் அழுத்தம் கொடுத்த யுகத்தை மாற்றியமைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரசியலுக்கு நீதித்துறை பணியாததால் பிரதம நீதியரசரையே 48 மணித்தியாலத்தில் பதவியிலிருந்து தூக்கியெறிந்த யுகம் மாற்றப்பட்டு அனைத்துத் துறைகளிலும் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மக்கள் நம்பிக்கையைப் பாதுகாப்பதாக நீதித்துறை அமைவதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, மக்களுக்கான நீதி தாமதப்படுத்தப்படாமல் விரைவாக பெற்றுக்கொடுக்கப்படுவது அவசியமென்றும் நீதித்துறையினரைக் கேட்டுக் கொண்டார்.

நீதிச்சேவை சங்கத்தினரின் வருடாந்த மாநாடு நேற்று கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ், பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

உலகில் எந்த நாட்டிலும் இல்லாதவாறு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இலங்கையில் இருந்தது. இந்த அதிகாரத்தை நீக்குவதற்கோ, மட்டுப்படுத்துவதற்கோ முன்வந்த ஒருவன் நான் மட்டுமே.

நிறைவேற்று ஜனாதிபதிகள் தமது பதவிக்காலத்தில் நீதிமன்றத்துக்கு வழங்கிய பணிப்புரைகள் மற்றும் உத்தரவுகள் நீதித்துறையினரை போராட்டத்திற்கு நிர்ப்பந்தித்துள்ளது.

அரசியலுக்கு நீதித்துறை அடிபணியாததால் பிரதம நீதியரசர் 48 மணித்தியாலத்துக்குள் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்ட சம்பவம் எளிதில் மறக்க முடியாது. நீதித்துறையிலுள்ளோர் தாக்கப்பட்டமை நீதித்துறைக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய அரசாங்கம் கடந்த 11 மாதங்களில் நல்லாட்சியை ஏற்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. 18வது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டிருந்த தன்மை அனைவரும் அறிந்ததே. அதற்கு மாற்றீடாகவே நாம் 19வது திருத்தத்தைக் கொண்டுவந்தோம். அதிகாரத்தைக் குறைப்பதற்கான வரலாற்றுத் தீர்மானமாக அது அமைந்தது.

19வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. சர்வஜன வாக்கெடுப்பின்றி இதை செய்வதானால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கிணங்கவே செயற்பட வேண்டியுள்ளது.

19வது திருத்தத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘சுயாதீன ஆணைக்குழுக்கள் இந்த நாட்டின் நல்லாட்சி தொடர்பில் புதிய அனுபவமாகும். பாரபட்சங்கள் ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கும் சிறந்த அரச நிர்வாகத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் எடுக்கப்பட்டுள்ள வரலாற்று தீர்மானமாகவே இதனை பார்க்க முடிகிறது.

சுயாதீன ஆணைக்குழுக்களில் நிலவும் சில நெருக்கடிகளை தீர்ப்பது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. 17வது திருத்தத்துக்கு நானும் கைகளை உயர்த்தியவன். எனினும் சுயாதீன ஆணைக்குழுக்கள் முறையாக செயற்படாததற்கும் காரணமாயமைந்ததும் அதுவே.

இந்த குறைபாடுகளை நீக்கி சிறந்த நல்லாட்சியை 19வது திருத்தம் மூலம் ஏற்படுத்த முடியும் என்பதே எமது நம்பிக்கை. நிறைவேற்று ஜனாதிபதி முறையில் அதிகாரங்களை முழுமையாக இல்லா தொழிப்பதோ அல்லது அத்தகைய பதவியை நீக்குவதோ உச்ச அளவு அதிகாரத்தை மட்டுப்படுத்துவதோ எமது நோக்கமாகும்.

இது தொடர்பில் புதிய அரசியலமைப்பு தயாரிப்பின் போதும் நாம் கவனம் எடுப்போம். இதனை மிக நேர்மையாக செய்வேனென உறுதியளிக்கின்றேன்.

நாட்டின் எதிர்காலம் மக்களின் எதிர்காலம் தொடர்பில் நாம் செயற்படும் போது எதிர்காலம் தொடர்பான நம்பிக்கை முக்கியமானது. உலக நாடுகளின் அபிவிருத்தியோடு ஒப்பிடுகையில் அதற்குச் சமமாக எமது நாட்டை கட்டியெழுப்புவதே எமது நோக்கம்.

இதன் போது நீதித்துறையில் நிலவும் பிரச்சினைகள் நிவர்த்தி செய்யப்பட்டு நீதிபதிகள் உட்பட நீதித்துறையிலுள்ளோர் சுயாதீனமாக செயற்பட வழிவகுக்கப்படும்.

அதேவேளை, நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதற்கான பின்னணியை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையுமாகும். இதனை நாம் முறையாக நிறைவேற்றுவோம்.

கடந்த அரசாங்க காலத்தில் நீதிபதிகளின் வெளிநாட்டுப் பயிற்சிகள் மற்றும் படிப்புக்கான வசதிகள் அதற்கான வளங்கள் தொடர்பில் கவனமெடுக்கப்படவில்லை. இந்நிலையை மாற்றி நாம் உரிய நடவடிக்கை மேற்கொள்வோம்.

ஏழ்மை நிலை மக்கள் எதிர்பார்க்கும் நீதியை உரிய காலத்தில் பெற்றுக்கொடுப்பது முக்கியமாகும்.

இது தொடர்பில் ஆராய்ந்து இதற்கு முழுமையான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பது அவசியம்.

தமக்குக் கிடைக்க வேண்டிய நீதி தமது இரண்டாவது மூன்றாவது பரம்பரை வரை இழுத்தடிக்கும் நிலை காணப்படுகிறது. இந்த தாமதத்தை நிவர்த்தி செய்வது தொடர்பில் நாம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம்.

மனிதர்களின் நல்வாழ்வுக்கான அனைத்திலும் மனிதர்களாலேயே உருவாக்கப்படுகின்றன. இதற்கிணங்க நீதித்துறை மனித வாழ்வின் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது.

எமது நீதித்துறை அரசியல் காரணமாக கடந்த காலங்களில் ஊடகங்கள் உட்பட அனைத்துத் தரப்பினரின் உட்பட்டதாக இருந்துள்ளது.

நீதித்துறையில் சுயாதீனமும் பாரபட்ச மாற்ற தன்மையையும் அனைவரும் எதிர்க்கின்றனர்.

1987 இல் நாட்டில் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஆரம்பமாகி அதன் ஏழாவது ஜனாதிபதியாக நான் பதவியேற்றுள்ளேன். கடந்த நான்கு தசாப்தங்களாக நிறைவேற்று ஜனாதிபதி முறை மற்றும் அதன் அதிகாரம் நீதித்துறையில் உபயோகிக்கப்பட்ட விதம் அனைவரும் அறிந்ததே.

அதிகாரம் ஊழலை உருவாக்கும். அது மிக மோசமான முறைகேட்டுக்கு வழிவகுக்கும் என்பதும் நாம் அறிந்ததே.

துறை சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் நீதித்துறை எதிர்நோக்கும் சிக்கல்கள் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு கண்டு சிறந்த சூழலை உறுதிப்படுத்த அரசாங்கம் உச்ச அளவில் நடவடிக்கை எடுக்கும்.

அவ்வாறான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகளை நீதிபதிகளிடமிருந்து நாம் எதிர்பார்க்கின்றோம் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.