‘ஆயுததாரிகளைத் தேடுவதற்கு எங்களுக்கு ஒத்துழையுங்கள்’

மியான்மாரின் குழப்பத்துக்கு மத்தியில் காணப்படும் வடமேற்குப் பகுதியிலுள்ள முஸ்லிம்கள், இராணுவத்தினருக்கு ஒத்துழைக்க வேண்டுமென, மியான்மார் அரசாங்கம் கோரியுள்ளது. பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு அரண்கள் மீது, ஆயுததாரிகள் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து, ராக்கைனில் நிலைமை மோசமடைந்துள்ள நிலையிலேயே, மியான்மார் அரசாங்கத்தின் இக்கோரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

இந்த மோதல்களாலும் அதேபோல், இராணுவத்தின் பதிலடியாலும், இதுவரை சுமார் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதோடு, கடந்த வார காலப்பகுதியில் மாத்திரம், சுமார் 58,000 றோகிஞ்சா முஸ்லிம்களை, அயல்நாடான பங்களாதேஷுக்கு இடம்பெயரச் செய்துள்ளது.

பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் மியான்மாரில், றோகிஞ்சா இன முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ராக்கைனில், மியான்மார் அரசாங்கங்கள், காலங்காலமாகத் தொடர்ச்சியாக மேற்கொண்டுவந்த நடவடிக்கைகளே, அதிக கவனத்தை ஈர்த்துள்ளன. நொபெல் பரிசு வென்ற ஆங் சாங் சூகி தலைமையிலான தற்போதைய அரசாங்கமும், அதே விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மியான்மாரின் அரச ஊடகம், நேற்று வெளியிட்ட அறிக்கையில், “அரகன் றோகிஞ்சா இரட்சனிய சேனை (ARSA) கடும்போக்குப் பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் தேடும் போது, இராணுவத்தினருக்கு அச்சுறுத்தலை வழங்க வேண்டாம் எனவும், கிராமங்களுக்குள் பாதுகாப்புப் படையினர் நுழையும் போது, ஆயுதங்களைக் காண்பிக்க வேண்டாமெனவும், மௌன்க்டவ் கிராமத்திலுள்ள இஸ்லாமியக் கிராமத்தவர்கள், ஒலிபெருக்கிகள் மூலம் கேட்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தது.

ARSA ஆயுதக்குழு, பயங்கரவாத அமைப்பென, மியான்மார் அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவே, பாதுகாப்புப் படையினர் மீது, கடந்த வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு உரிமை கோரியிருந்தது.

முன்னதாக, ராக்கைனின் வடக்குப் பகுதியிலுள்ள மௌன்க்னி கிராமத்தில், ARSA ஆயுதக்குழுவைச் சேர்ந்த இரண்டு ஆயுததாரிகளைக் கிராமத்தவர்கள் பிடித்து, பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனர் எனவும், அவ்வூடகம் தெரிவித்தது.

இராணுவத்தின் கருத்துப்படி, பல கிராமங்களிலும் சேர்த்து, 200க்கும் மேற்பட்ட கட்டடங்கள் எரியூட்டப்பட்டுள்ளன என்பதோடு, அவற்றை, ARSA ஆயுதக்குழுவினரே மேற்கொண்டனர் என, மியான்மார் தெரிவிக்கிறது.

ஆனால், சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளும் அதேபோல் உள்ளூர்ச் செயற்பாட்டாளர்களும், ராக்கைனில் ஏற்பட்டுள்ள வன்முறைகளுக்கு, மியான்மார் பாதுகாப்புப் படையினரையே அதிகமாகக் கைநீட்டுகின்றனர்.

மியான்மார் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில், “வடக்கு ராக்கைனில் இருந்து, 11,700க்கும் மேற்பட்ட ‘அப்பகுதிச் சொந்தமான வதிவிடதாரிகள்’ வெளியேற்றப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டது. முஸ்லிம்கள் அல்லாதோரையே, அந்த அறிக்கை அவ்வாறு குறிப்பிட்டிருந்தது. இதன்மூலம், றோகிஞ்சா இன மக்களை, ராக்கைனைச் சொந்தமாகக் கொண்ட மக்கள் என ஏற்றுக் கொள்வதற்கு, மியான்மார் அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்து வருகின்றமை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.