இடைக்கால அறிக்கை தொடர்பில் இன்று முதல் விவாதம்

நாடாளுமன்றத்துக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள, புதிய அரசமைப்புக்கான, அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழு அறிக்கை தொடர்பில் விவாதிப்பதற்கு, நாடாளுமன்றத்தில் இன்று (30) அரசமைப்புப் பேரவை, கூடவுள்ளது. இன்று ஆரம்பமாகும் விவாதம், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இடம்பெறும். இன்று காலை 10.30 மணிக்கு விவாதம் ஆரம்பமாகவுள்ளதென, அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அரசமைப்புத் தொடர்பில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தமது ஆதரவு, எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்ற நிலையில், இவ்விவாதம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக ஒன்றிணைந்த எதிரணியினர் தமது எதிர்ப்பை வெளியிடவுள்ளனர் என்றும் அறிய முடிகிறது.

அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்மானங்களுக்கு, கலந்தாலோசித்தன் பின்னர் ஆதரவு வழங்குவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ள​ெதன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். இதேவேளை, ஒருமித்த பிளவுபடாத நாட்டுக்குள் அதிகூடிய அதிகாரப் பகிர்வு அவசியம் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்புத் தொடர்பில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று முன்தினம் (28) கொழும்பில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை கடந்த செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதியன்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.