இன்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

யாழ். போதனா வைத்தியசாலை தாதியொருவரை, யாழ்.பொலிஸார் விசாரணைக்கு என அழைத்து பின் கைதுசெய்து நீதிமன்றில் முற்படுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். போதனா வைத்தியசாலையின் அனைத்து ஊழியர்களாலும் நேற்று வெள்ளிக்கிழமை (18) ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டம், இரண்டாவது நாளாக இன்று சனிக்கிழமை (19) தொடர்ந்து இடம்பெறுகிறது.

அரச தாதியர் உத்தியோகத்தர்கள் சங்கத்தினரும் வைத்தியசாலையின் அனைத்து ஊழியர் சங்கத்தினரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப் போராட்டமானது இரு நாட்களாகத் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

போராட்டத்தின் காரணமாக வைத்தியசாலையின் அத்தியாவசிய சிகிச்சைப் பிரிவு தவிர்ந்த எனைய அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் முடங்கியதுடன், வைத்தியர் சங்கம் உட்பட 8 சங்கத்தினர் தமது ஆதரவையும் வழங்கியுள்ளனர்.

‘நிர்வாகத்தினால் பணிக்கப்பட்ட கடமையை செய்தது எங்கள் தவறா?, வசதி படைத்தவர்களுக்கு அரச ஊழியர்கள் என்ன அடிமையா?, வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய், குற்றவாளியை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தும் வரை போராட்டம் தொடரும், தாதியத்தை கொலை செய்யாதே அது உயிரை காக்கும் தொழிலாகும்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.