இன்று…. வெங்கொடுமைக்கு பலியான வெண்மணித் தியாகிகள்…

1968-ம் வருடம், டிசம்பர் 25 – தமிழக வரலாற்றில் கருப்பு நாள்.கீழத்தஞ்சையில், (இன்றைய நாகை மாவட்டம்) கீழ்வெண்மணி என்கிற கிராமத்தில், தாழ்த்தப்பட்ட (தலித்) சமுகத்தை
சேர்ந்த 44 அப்பாவி கூலி ஏழை விவசாயிகளை, ஒரே குடிசையில் பூட்டி வைத்து கதறக்கதறத் தீயிட்டுப் பொசுக்கினர்,
இரிஞ்சூர் பண்ணையார் கோபால கிருஷ்ண (நாயுடு) தலைமையிலான நிலப்பிரபுத்துவ கொடுங்கோலர்கள், 20 பெண்கள், 19 சிறுவர்கள், 5 ஆண்கள் எரித்து கரிக்கட்டைகளாக்கப்பட்டனர். சாதி-தீண்டாமையோடு, பண்ணையடிமைகள் அடங்கிக் கிடக்க வேண்டும் என்கிற, ஆதிக்கத் திமிரும் இந்த படுகொலையில் அடங்கியிருந்தது. “என்ன தோழரே! இப்பொழுதெல்லாம் சாதி – தீண்டாமையை யார் பார்க்கின்றனர்?” என்று ‘உலகறிந்த’ பலரும் நம்மை பார்த்து கேட்கின்றனர். ஆனால், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்திய மனித வளம் குறித்த ஆய்வானது , கிராமப்புறங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் தீண்டாமையைக் கடைபிடிப்பதை அம்பலப்படுத்துகிறது. ஒத்துக்கொள்வதாக தெரிவிக்கிறது. நகர்ப்புறத்திலோ, ஐந்தில் ஒருவர் தீண்டாமையை கடைபிடிப்பதாக மேற்படி ஆய்வு தெரிவிக்கிறது. சாதி- தீண்டாமையானது பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது. எத்தனை இழிவுகள்! எத்தனைக் கொடுமைகள் !

(நன்றி: வினவு.)