இலங்கையின் உதவியைக் கோருகிறது சீஷெல்ஸ்

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, சீஷெல்ஸ் நாட்டைச் சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அந்நாட்டு ஜனாதிபதி டெனி ஃபோவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நேற்று (08) மாலை இடம்பெற்றது. நேற்று மாலை, சீஷெல்ஸ் அரச மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதிக்கு, பாரிய வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், மரியாதை வேட்டுகள் தீர்க்கப்பட்டு, அணிவகுப்பு மரியாதையும் செலுத்தப்பட்டது.

இதனையடுத்து, இரு ஜனாதிபதிகளுக்கும் இடையில், சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பை பலப்படுத்திக்கொள்வது குறித்து, தீர்க்கமாக ஆராயப்பட்டதோடு, இதற்கான ஒப்பந்தங்கள் சிலவும் கைச்சாத்திடப்பட்டன.

இந்நிலையில், இலங்கைக்கும் சீஷெல்ஸுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறை தொடர்புகளை மேலும் பலப்படுத்தி முன்நோக்கிக் கொண்டுசெல்ல, இரு நாட்டு அரச தலைவர்களும் இணக்கம் தெரிவித்தனர்.

அத்துடன், சுற்றுலாக் கைத்தொழில் மற்றும் மீன்பிடித்துறை ஆகியவற்றினூடாக, முறையாக அபிவிருத்தி அடைந்துவரும் சீஷெல்ஸ், ஆபிரிக்க வலயத்திலுள்ள அபிவிருத்தியடைந்த நாடாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் சுற்றுலாத் தொடர்புகளை, புதிய பரிணாமத்துடன் விரிவுபடுத்தி, பலப்படுத்தி, முன்நோக்கிக் கொண்டுசெல்வது தொடர்பாக, இதன்போது அரச தலைவர்கள் விரிவாகக் கலந்துரையாடினர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரு நாடுகளிலும் உள்ள வர்த்தக சமூகங்களுக்கிடையிலான தொடர்புகளை விருத்திசெய்து, எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய துறையினருக்கு, ஆலோசனை வழங்குவதாகக் கூறினார்.

இவ்வருட இறுதியில், சீஷெல்ஸில் இடம்பெறவுள்ள வர்த்தகக் கண்காட்சியில், அதிகளவான இலங்கை வர்த்தகர்களை பங்குபற்ற வைக்க எதிர்பார்ப்பதாகவும், ஜனாதிபதி குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர முக்கியத்துவமுள்ள இருதரப்பு மற்றும் பிராந்திய விடயங்கள் தொடர்பிலலும், இதன்போது கலந்துரையாடப்பட்டன.

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில், ஜனாதிபதி சிறிசேனவினால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களைப் பெரிதும் பாராட்டிய சீஷெல்ஸ் ஜனாதிபதி, தமது நாட்டுக்கும் அச்சுறுத்தலாகக் காணப்படும் போதைப்பொருள் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

சீஷெல்ஸ் நாட்டின் சுகாதாரத் துறையின் முன்னேற்றத்துக்காக, இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்த சீஷெல்ஸ் ஜனாதிபதி, அந்நாட்டு மருத்துவர்களுக்கு, இலங்கையில் பயிற்சி வாய்ப்பொன்றைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தார்.

அத்தோடு சீஷெல்ஸ் பாதுகாப்புப் படையினருக்கு, இலங்கையில் இராணுவப் பயிற்சி வாய்ப்பொன்றையும் நீதிமன்ற மற்றும் சட்டவாக்கத் துறையினருக்குத் தேவையான பயிற்சியைப் பெற்றுக்கொள்ளவும் சந்தர்ப்பமளிக்குமாறும், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அதற்கான வாய்ப்புகள் தொடர்பில் துரிதமாக கண்டறிவதாகத் தெரிவித்தோடு, சீஷெல்ஸ் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி துறையில் வருடாந்தம் 10 புலமைப்பரிசில்களை வழங்கவும் இணக்கம் தெரிவித்தார்.