’இலங்கை அரசாங்கத்தை டக்ளஸே காப்பாற்றினார்’


“இந்தத் தேர்தலில் களமிறங்கி இருப்பவர்கள் தமிழ் மக்களுடைய பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவார்களா? சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவார்களா? அது பற்றி பேசுவார்களா? அமைச்சர்களாக வந்தால் தடுத்து நிறுத்துவார்களா? கடந்த காலத்தில் இவர்கள் அமைச்சர்களாக இருந்தபொழுது அரசாங்கம் என்னவெல்லாம் செய்தார்களளோ அதற்கு ஆமாம் சாமி போட்டார்களே தவிர அதற்கு எதிராக செயற்பட்டதில்லை.

“டக்ளஸ் தேவானந்தா ஜெனிவா சென்று இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை என்றுதான் பேசினார். பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட நிலையில், ஜெனிவாக்குச் சென்று இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றியவர் அவர். நாங்கள் நம்பி வாக்களித்தக் கூட்டமைப்பினரும் இன்று தமது கொள்கைகளில் இருந்து விலகி இன்று அவர்களும் அமைச்சர்களாவதற்கு தங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டு மக்களிடம் வாக்கு கேட்கின்றார்கள்” எனவும், சுரேஷ் தெரிவித்தார்.

தமிழ் மக்களுடைய அபிவிருத்திக்கான அமைச்சுப் பதவியா? அல்லது தமது சொந்த குடும்பங்களுக்கான அமைச்சுப் பதவியா என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டுமெனத் தெரிவித்த அவர், யாருடைய அபிவிருத்திக்காக அமைச்சுப் பதவியைப் பற்றிப் பேசுகின்றீர்களெனவும் அப்படியாக இருந்தால் கடந்த காலத்தில் கூறிய அனைத்தும் பொய்யான ஒன்றா எனவும் வினவினார்.

“நான் சம்பந்தன் ஐயாவிடம் ஒன்று கேட்க விரும்புகின்றேன். சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து அரசியலில் இருப்பவர், சட்டத்தரணி இவ்வாறான ஒருவர் கூறுகின்ற பதிலா இது. அது மாத்திரமல்லாமல் சில சந்தர்ப்பங்களை இழந்து விட்டோம் என கூறுகின்றார். அரசியலில் ஒரு சில சந்தர்ப்பங்கள் கிடைக்கும் அதனை பயன்படுத்த வேண்டும். தவற விடுவோமாக இருந்தால், இன்னொரு சந்தர்பத்துக்கு காவல் இருக்க நேரிடும்.

“ஆகவே, கூட்டமைப்பினர் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைப் பற்றி பேசாது, தமது சொந்த நலன்களிலேயே கடந்த காலங்களில் அதிக அக்கறை காட்டியிருக்கின்றார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது” எனவும், அவர் கூறினார்.

(Tamil Mirror)