ஈக்குவடோரில் சிறைக்கலகங்களில் 62 பேர் உயிரிழப்பு

வைரிக் குழுக்களுக்கிடையிலான பிரச்சினைகள் காரணமாகவே குவாயாகுய்ல், குயென்கா, லடசுங்கா ஆகிய நகரங்களிலுள்ள தடுப்பு நிலையங்களில் வன்முறைகள் இடம்பெற்றதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கி, கத்தித் தாக்குதல்களில் சிறைக்கைதிகள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தடுப்பு நிலையங்களுக்குள் குறித்த இரண்டு குழுக்களே குற்றவியல் தலைமைத்துவதுக்காக அடிபடுவதாக ஈக்குவடோர் சிறைச்சாலை முகவரகத்தின் பணிப்பாளர் எட்-முன்டோ மொன்கயோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மேலதிகமாக 800 பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் தடுப்பு நிலையங்களுக்குள் கட்டுப்பாட்டை அதிகாரிகளால் மீளக் கொண்டுவர முடிந்ததாக மொன்கயோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிறைக்காவலர்களை பணயக்கைதிகளாக சிறைக்கைதிகள் பிடித்து வைத்ததைத் தொடர்ந்து நேற்று முன்தினம் கலகங்கள் வெடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சில பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கலகங்களின்போது சிறை அதிகாரிகள் வெளியேற முடிந்துள்ளது.