ஈ.பி.டி.பி. கட்சிக்கு மானம் இருக்கின்றதா? சட்டத்தரணி கேள்வி!

முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. கட்சிக்கு என்ன மானம் இருக்கின்றது? இவ்வாறு சட்டத்தரணியும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார். முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த அரசால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் அதன் ஆணையாளர்கள், ஈ.பி.டி.பி. கட்சி ஒரு சட்டவிரோத ஆயுதக் குழு என்று இந்த நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது அந்தக் கட்சிக்கு என்ன மானம் இருக்கின்றது? இவ்வாறு நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார் சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவால் ‘உதயன்’ பத்திரிகைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மான இழப்பு கோரும் வழக்கிலேயே சட்டத்தரணி சுமந்திரன் நீதிமன்றத்திடம் இந்தக் கருத்தைச் சுட்டிக்காட்டினார். கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அந்த நாட்டுத் தலைநகர் வாசிங்டனுக்கு அனுப்பப்பட்ட ‘கேபிள்’ செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்த விவரங்களை ‘உதயன்’ பத்திரிகை வெளியிட்டிருந்தது. விக்கிலீக்ஸ் இணையத்தளத்தினால் வெளியிடப்பட்டிருந்த இந்த இரகசிய தகவல் ஆவணங்களில் ஈ.பி.டி.பி. மற்றும் கருணா குழுவின் சட்டத்திற்கு முரணான செயற்பாடுகள் என்று குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களை ‘உதயன்’ பத்திரிகை அம்பலப்படுத்தியதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகின்றது. நேற்று மீண்டும் டக்ளஸ் தேவானந்தா குறுக்கு விசாரணை செய்யப்பட்டார். இரண்டு மணி நேரத்திற்கு இந்த விசாரணை நீடித்தது. சட்டத்தரணி சுமந்திரன் தோண்டித் துருவி கேள்விகளைக் கேட்டார். அவரது கேள்வி களுக்கு நழுவல் போக்கில் டக்ளஸ் பல தடவைகள் பதிலளிக்க முயற்சிக்க வெட்டு ஒன்று துண்டு இரண்டாக, ஆம் அல்லது இல்லை என்று பதிலளியுங்கள் என சட்டத்தரணியால் அறிவுறுத்தப்பட்டார். முதலில் சட்டத்தரணி கேட்கின்ற கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டு மேலதிக விளக்கங்கள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று நீதிமன்றமும் டக்ளஸை நெறிப்படுத்தியது. குறுக்கு விசாரணையின் போது, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தனது குறுக்கு விசாரணைக்கான ஆதாரமாக சட்டத்தரணி சுமந்திரன் எடுத்துக்கொண்டார்.

அந்த அறிக்கை, ‘உதயன்’ பத்திரிகை வெளியீட்டுக்குப் பின்பாக வெளியிடப்பட்ட ஒன்று என்பதால் அதனை ஒரு ஆதாரமாக இந்த வழக்கில் பயன்படுத்த முடியாது என்று டக்ளஸின் சட்டத்தரணி ஆட்சேபனை கிளப்பினார். அதில் தன்னுடன் தொடர்புபட்டதாகக் கூறப்பட்டுள்ள விடயங்கள் உண்மைக்குப் புறம்பானவை என்று வழக்காளியான டக்ளஸ் ஏற்கனவே மறுத்துரைத்திருக்கிறார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் உண்மைத் தன்மை குறித்து தான் இந்த வழக்கில் எந்த விடயங்களை ஆய்வுக்கு உட்படுத்தவில்லை என்றும், டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த அரசினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவே அவரது கட்சியான ஈ.பி.டி.பியை சட்டவிரோத ஆயுதக்குழு என்ற வகைப்பாட்டின் கீழேயே அறிக்கையிட்டுள்ளது.

அவரது சாட்சியங்கள் குறித்து ஆணையாளர்கள் சில விமர்சனங்களை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி சுமந்திரன், அப்படி அந்த அறிக்கை ஈ.பி.டி.பியை சட்டவிரோத ஆயுதக் குழுவாக இலங்கை மக்களுக்கு வெளிப்படுத்தியிருக்கும் போது அந்தக் கட்சிக்கு என்ன மானம் இருக்கின்றது என்பதே தனது தரப்பு முன்வைக்கும் வாதம் என்று நீதிமன்றத்திடம் சுட்டிக்காட்டினார். ஈ.பி.டி.பியினர் இப்படியான சட்டவிரோத செய்களைச் செய்தவர்கள் என்ற விடயம் தொடர்பில் இதுபோன்ற பல ஆவணங்களைத் தான் இந்த நீதிமன்றத்தில் முற்படுத்த இருக்கிறார் என்று தெரிவித்த சட்டத்தரணி சுமந்திரன், அவற்றின் ஊடாக, பொதுமக்கள் மத்தியில் ஈ.பி.டி.பி. என்பது சட்டவிரோதக் குழு என ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மன்றுக்கு எடுத்துக் காட்டுவதே தனது நோக்கம் என்றும் தெளிவுபடுத்தினார்.

கொழும்பில் இருந்து வெளியாகும் ‘சிலோன் ருடே’ ஆங்கிலப் பத்திரிகைக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்­ச வழங்கியிருந்த பேட்டியில் குறிப்பிடப்பட்டிருந்த, வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்பாக ஈ.பி.டி.பியினரின் ஆயுதங்களை நான் களையாமல் விட்டிருந்தால் இப்போது டக்ளஸ் தேவானந்தா வடக்கின் முதலமைச்சராக இருந்திருப்பார், மஹிந்த ராஜபக்ச நாட்டின் தலைவராகத் தொடர்ந்திருப்பார் என்று கூறிய விடயத்தையும் கூட சுமந்திரன் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.குறுக்கு விசாரணை நீண்டு கொண்டே சென்றதால், அடுத்த தவணைக்கு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. எதிர்வரும் மே மாதம் 24ம் திகதி டக்ளஸ் தேவானந்தா மீண்டும் குறுக்கு விசாரணை செய்யப்படவுள்ளார்.