ஈ.பி.டி.பி – புளொட் துணை ஆயுதக்குழுக்களாக செயற்பட்டன: கோத்தா

முன்னைய அரசாங்க காலத்தில் ஈ.பி.டி.பி,புளொட் போன்ற அமைப்புகள் துணை ஆயுதக்குழுக்களாக செயற்பட்டதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கை இராணுவமோ, இராணுவப் புலனாய்வுப் பிரிவோ, ஆவா குழு போன்ற குழுக்களை உருவாக்க வேண்டிய காரணம் ஏதும் இல்லை.

முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் துணை ஆயுதக் குழுக்களாக செயற்பட்ட ஈபிடிபி, புளொட் போன்றவற்றிடம் இருந்து ஆயுதங்களை களைந்த எமக்கு புதிய குழுக்களை உருவாக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. இதுபோன்ற கருத்துக்கள், இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மட்டுமே அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்த அறிக்கைகளை வைத்துக் கொண்டு, தமிழ் அரசியல்வாதிகளும் இராணுவத்தின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்த முயற்சிக்கின்றனர். ஆவா குழுவுக்குப் பின்னால் நான் இருக்கவில்லை. பாதுகாப்பு படைகளுக்கோ புலனாய்வு பிரிவுகளுக்கோ நான் இப்போது பொறுப்பாக இல்லை. எனவே, இந்த விடயங்கள் தொடர்பாக விசாரிக்கும் அதிகாரம் எனக்குக் கிடையாது.

அமைச்சர் ராஜித சேனாரத்னவின் குற்றச்சாட்டுகளுக்கு நான் மறுப்புத் தெரிவிக்க வேண்டிய தேவை இல்லை. ஏனென்றால் இதற்கான பதிலை அளிக்க வேண்டியவர்கள் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலர் மற்றும் ஆயுதப் படைகளின் தளபதிகள் தான்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.