ஐந்தாவது நாளாகவும் தொடரும் பரவிப்பாஞ்சான் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பிரதேசத்திலுள்ள தமது காணிகளை முழுமையாக விடுவிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஐந்தாவது நாளாக இன்றும் (புதன்கிழமை) தொடர்கிறது.

குறித்த பிரதேசத்தின் நான்கு ஏக்கர் காணியை தற்போது விடுவிப்பதாகவும் ஏனைய 13 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் இன்று சமர்ப்பிக்கப்படும் என்றும், ஆகவே போராட்டத்தை கைவிடுமாறும் குறிப்பிட்டு நேற்று மாலை மீள்குடியேற்ற அமைச்சினால் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

எனினும், தமது காணிகளை முழுமையாக விடுவிக்கும் காலத்தை குறிப்பிடும்வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லையென மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமுக்கு முன்னால் இத் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் மக்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரக்குமார, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் நேரில் சென்று சந்தித்து தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.