கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 201

இலங்கையின் தென்மேற்கு பகுதியில் கடந்த 25-ந்தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த மழையால் வெள்ளப்பெருக்கும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. இதனால் சுமார் 5 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், நிலச்சரிவில் சிக்கியும், வீடுகள் இடிந்துமாக ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்து கிடந்த பலரின் உடல்கள் நேற்றும் மீட்கப்பட்டன. இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 104 பேரை காணவில்லை என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

மழை, வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணியிலும், நிவாரண உதவிகள் வழங்குவதிலும் இலங்கை முப்படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நேற்று இந்த பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று மோசமான வானிலை காரணமாக விழுந்து நொறுங்கியது. எனினும் அதில் இருந்த விமானி அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக (மோரா) உருவாகி இருப்பதால், அங்கு மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இயற்கை பேரிடரில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவிக்கரம் நீட்ட சீனா முன்வந்துள்ளது. 22 லட்சம் டாலர் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் விரைவில் இலங்கைக்கு வழங்கப்படும் என சீன அரசு அறிவித்து உள்ளது.
இதற்கிடையே நிவாரண பொருட்கள் மற்றும் மீட்புக்குழுவினரை ஏற்றிச்சென்ற இந்தியாவின் 2-வது போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.ஷர்துல், நேற்று முன்தினம் கொழும்பு போய் சேர்ந்தது
(SDPT)