கருணாவின் தொடர்பினால் ரவிராஜ் கொலை தகவல்களை மறைத்தேன்

அந்த காலகட்டத்தில் இருந்த அரசின் புலனாய்வுப் பிரிவின் கருணா அம்மான் தரப்பினருடன் தொடர்புகள் வைத்திருந்ததால் ராவிராஜ் கொலை தொடர்பான தகவல்களை மறைத்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பான விசாரணையின் போது அரச சாட்சியாளரான முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் கொன்ஸ்டபிள் பீரித்தி விராஜ் நேற்று கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதவான் திலினி கமகே முன்னிலையில் சாட்சியம் அளிக்கும் போது தெரிவித்தார். குறுக்கு விசாரணையின் போது பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். நீதிமன்றத்தில் பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி இங்கு முதலாவது சாட்சியாளரான விஜேவிக்ரம மனம்பேரி பீரித்திவிராஜ் என்பவரிடம் இவ்வாறு குறுக்கு விசாரணை செய்தார்.

சட்டத்தரணி: 2015.02.26 நீங்கள் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளிக்கும் போது கைது செய்யப்பட்டிருந்தீர்களா?

சாட்சி: இல்லை

சட்டத்தரணி: 2015.03.20 ஆம் திகதி வாக்குமூலம் அளிக்கும் போது நீங்கள் கைது செய்யப்பட்டிருந்தீர்களா?

சாட்சி: ஆம் 2015.03.19 ஆம் திகதி இரகசிய பொலிஸ் தலைமையகத்தின் மூலம் கைது செய்யப்பட்டேன். வாக்குமூலம் அளிக்க வருமாறு கூறி கைது செய்தனர்.

சட்டத்தரணி: 2005 ஆம் ஆண்டு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ரொட்ரிகோவின் சாரதியாக கடமையாற்றினீர்கள். 1996 ஆம் ஆண்டு பொலிஸில் சேர்ந்து பல்வேறு துறைகளில் சேவையாற்றினீர்கள். நீங்கள் 2015.05.21 ஆம் திகதி அளித்த வாக்குமூலம் உண்மையானதா?

சாட்சியாளர்: ஆம்