கல்முனையில் இன்று தமிழர்கள் எதிர்ப்பு பேரணி

கல்முனை அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (28) திங்கட்கிழமை கல்முனை தொகுதி தமிழ் மக்கள் மாபெரும் கண்டன எதிர்ப்பு பேரணியில் ஈடுபடவுள்ளனர். கல்முனை பிரதான வீதியிலுள்ள தரவைப் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக இன்று காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமாகும் கண்டனப் பேரணி கல்முனை நகர் ஊடாக கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம், கல்முனை மாநகர சபை ஆகிய இடங்களுடாகச் செல்லவுள்ளது.

கல்முனை வாழ் தமிழ் மக்களின் விருப்பத்திற்குமாறாக இப்பகுதி முஸ்லிம் அரசியல் வாதிகள் இரகசியமான முறையில் கல்முனை நகர அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இதனால் நூற்றுக்கணக்கான தமிழர்களின் வயல்கள் அபகரிக்கப்பட்டு முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட பிரதேசமாக கல்முனையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான விடயங்களில் இப்பகுதி வாழ் தமிழ் மக்களின் சிவில் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோரின் ஆலோசனைகளோ, பங்குபற்றுலோ இன்றி இவ் நகர அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை கல்முனை தொகுதி தமிழ் மக்களிடையே சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக முன்னெடுக்கப்படவுள்ள கல்முனை நகர அபிவிருத்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கல்முனை தொகுதி பொது மக்கள், சிவில் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.