காரைதீவு மகா சபை தேர்தல் நோக்கத்துக்காக மாத்திரம் உருவாக்கம் பெறவே இல்லை!

காரைதீவு பிரதேசத்தின் இருப்பு, இறைமை, பாதுகாப்பு, அபிவிருத்தி, அடையாளம், தனித்துவம் ஆகியவற்றை பேணி பாதுகாக்கின்ற செயல் திட்டத்தின் ஒரு அம்சமாகவே எதிர்வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் எந்த அரசியல் கட்சிகளுக்கும் இடம் கொடுக்க போவதில்லை என்று ஊர் மக்கள் கூடி ஏகோபித்த தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர் என்று காரைதீவு மகா சபையின் நிறைவேற்று குழு முக்கியஸ்தர் ஆறுமுகம் பூபாலரட்ணம் எமக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் தெரிவித்தார்.

வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் காரைதீவு பிரதேச சபைக்கு ஒரே ஒரு சுயேச்சை குழு மாத்திரம் காரைதீவில் இருந்து போட்டியிட உள்ளது. இது தொடர்பாகவும், சம கால அரசியல் நடப்புகள் தொடர்பாகவும் நாம் இவரை பேட்டி கண்டோம். இவருடனான நேர்காணல் வருமாறு:-

கேள்வி:- உங்களுடைய அரசியல், சமூக செயற்பாடுகள் குறித்து கூறுங்கள்?

பதில்:- நான் கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசு கட்சி சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பெற்று கொடுத்து கூட்டமைப்பின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கி இருக்கின்றேன்.

நிந்தவூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசமாக காரைதீவு இருந்தபோது காரைதீவுக்கு என்று தனியான பிரதேச சபை கிடைப்பதற்கு முன்னரான கடைசி உள்ளூராட்சி சபை தேர்தலில் நிந்தவூர் பிரதேச சபைக்கு எனது தலைமையிலான சுயேச்சை குழு காரைதீவில் இருந்து போட்டியிட்டதுடன் இரு ஆசனங்களை வென்றது.

மட்டும் அல்லாமல் அகில இலங்கை இந்து சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினராக விளங்குவதோடு காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகள் ஆலய தலைவராகவும், காரைதீவு பல்நோக்கு கூட்டுறவு சங்க தலைவராகவும், மத்தியஸ்தர் சபை, இணக்க சபை, சமாதான குழு, பிரஜைகள் குழு ஆகியவற்றின் உறுப்பினராகவும் கௌரவ பதவிகள் வகித்து உள்ளேன்.

எனக்கு இப்போது 73 வயது. எப்போதும் சமூகத்தோடு ஒத்து இணைந்த பொது வாழ்க்கையையே எனக்கு அறிவு தெரிந்த பராயம் முதல் மேற்கொண்டு வருகின்றேன்.

கேள்வி:- காரைதீவு மகா சபை என்கிற பெயர் வித்தியாசமானதாக உள்ளதே?

பதில்:- எனக்கு தெரிந்த வகையில் பிரதேச மட்டத்தில் இவ்வாறான ஒரு மகா சபை பரந்த நோக்கத்தில் விரிந்த செயற்பாடுகளுடன் இந்நாட்டில் குறிப்பாக தமிழர் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு உள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவே ஆகும். மொழி, நிலம், சமயம், அரசியல், கல்வி, கலை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம், தொழில் அபிவிருத்தி, வாழ்வாதாரம் போன்ற இன்னோரன்ன விடய பரப்புகளில் காரைதீவை மேம்படுத்துதல் மற்றும் காரைதீவு பிரதேச மக்களுக்கு வழிகாட்டல், அறிவூட்டல், விழிப்பூட்டல் ஆகியவற்றை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை இலட்சிய நோக்கங்களாக கொண்டு காரைதீவு மகா சபை உருவாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறான ஒரு மகா சபை காரைதீவின் மிக நீண்ட கால தேவையாக இருந்து வந்து உள்ள நிலையில் காரைதீவு பிரதேச மக்களின் நீடித்த அபிலாஷை தற்போதுதான் கை கூடி உள்ளது. இதை உருவாக்குவதில் முன்னோடிகளில் ஒருவராக முன்னின்று செயற்பட்டதில் பெருமையும் பெருமிதமும் அடைகின்றேன்.

காரைதீவை சேர்ந்த சமுதாய நலன் விரும்பிகள், துறை சார்ந்த நிபுணர்கள் ஆகியோரை உள்ளீர்த்து காரைதீவு மகா சபை உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் தலைவராக சி. நந்தீஸ்வரன் விளங்குகின்றார். காரைதீவு மகா சபையால் கையாளப்பட உள்ள ஒவ்வொரு துறைக்கும் என்று ஒவ்வொரு விசேட உபகுழுவை அமைத்து காரைதீவு மகா சபையின் செயற்பாடுகளை இன்னும் சிறப்பாகவும், துரிதமாகவும் முன்னெடுக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

கேள்வி:- எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு சாய்ந்தமருதில் இருந்து அரசியல் கட்சிகளை போட்டியிட அனுமதிப்பது இல்லை என்றும் ஒரே ஒரு சுயேச்சை குழுவை மாத்திரம் இறக்குவது என்றும் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் தீர்மானித்ததை பின்பற்றியே காரைதீவு மகா சபை உருவாக்கப்பட்டு காரைதீவு பிரதேச சபைக்கு காரைதீவில் இருந்து கட்சி அரசியலுக்கு அப்பால் ஒரே ஒரு சுயேச்சை குழுவை இறக்க தீர்மானம் எடுக்கப்பட்டு உள்ளது என்று கூற முடியாதா?

பதில்:- நிச்சயமாக இல்லை. நான் முன்னதாக காரைதீவு மகா சபை தேர்தல் நோக்கத்துக்காக திடீரென்று உருவாக்கம் பெறவில்லை என்று சுட்டி காட்டி இருந்தேன். காரைதீவை சேர்ந்த சமுதாய முன்னோடிகள் பலரும் பல பல சந்தர்ப்பங்களில் பல முறை கூடி கதைத்து ஊர் மக்களின் ஆசிர்வாதத்துடன் காரைதீவு மகா சபையை உருவாக்கி உள்ளோம். குறுகிய கால அரசியல் நோக்கங்கள் காரைதீவு மகா சபைக்கு கிடையாது. ஆனால் காரைதீவு மகா சபையால் கையாளப்பட வேண்டிய துறை சார்ந்த விடயங்களில் ஒன்றாக அரசியல் உள்ளது. காரைதீவை பொறுத்த வரை இது மிக முக்கியமாக கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு விடயமும் ஆகும்.

காரைதீவு பிரதேச சபை எல்லைக்குள் இரு சமூகங்கள் வாழ்கின்றன. எங்களுடைய சமூகம் பல கட்சிகளாக பிரிந்து நின்று தேர்தல் கேட்கின்றபோது வாக்குகள் சிதறுண்டு நாம் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட கூடிய வாய்ப்பு கண் முன் தெரிகின்றது. அவ்வாறு நிகழாமல் நாம் முன்னிலை வகிப்பதற்கான வியூக உத்தியாகவே கட்சி அரசியலுக்கு அப்பால் எமது அரசியல் சமூக செயற்பாட்டாளர்களை சுயேச்சையாக ஒரே அணியில் இறக்குவது என்று ஊர் கூடி முடிவெடுத்து உள்ளோம். எமது அரசியல் செயற்பாட்டாளர்களும் ஊரின் நலனை முன்னிறுத்தி அவர்களுடைய கட்சி நலன் சார்ந்த தேர்தல் செயற்பாடுகளை இத்தேர்தலில் கை விட்டு உள்ளார்கள். இத்தீர்மானத்தை நாம் பத்திரிகைகள் மூலம் பகிரங்கப்படுத்தி இருப்பதோடு கட்சிகளின் தலைமையகங்களுக்கும் அறியப்படுத்தி உள்ளோம். ஏதேனும் ஒரு கட்சி வருகின்ற தேர்தலில் காரைதீவு பிரதேச சபைக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யுமாயின் அக்கட்சியை நாம் துரோகிகள் பட்டியலில் என்றென்றைக்கும் சேர்த்து விடுவோம். அதே போல கட்சி வேட்பாளர்களையும் ஊரில் இருந்து விலக்கி விடுவோம். வேறு சுயேச்சை குழுக்களும் போட்டியிட முடியாது.

என் போன்றவர்களுக்கு காரைதீவு பிரதேச சபை தேர்தலில் போட்டியிட பல கட்சிகளிடம் இருந்தும் தொடர் அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றபோதிலும் ஊரின் நலனுக்காக மாத்திரமே சுயேச்சை குழுவில் போட்டியிட தீர்மானித்து உள்ளோம் என்பதையும் இந்த இடத்தில் கூறி வைக்கின்றேன். மேலும் சுயேச்சை குழுவுக்கான வேட்பாளர்கள் தெரிவு வெளிப்படை தன்மையுடனும், நீதியாகவும் நடத்தப்பட உள்ளது. வேட்பாளர்களாக போட்டியிட விரும்புபவர்கள் வட்டார ரீதியாக காரைதீவு மகா சபைக்கு விண்ணப்பிக்க முடியும். காரைதீவு மகா சபை ஒவ்வொரு வட்டாரத்துக்கும் நேரில் சென்று அங்கு உள்ள மக்களில் பெரும்பான்மையானோரின் ஆதரவையும், அபிமானத்தையும் பெற்ற செயற்பாட்டாளரை வேட்பாளராக நியமிக்கும்.

கேள்வி:- மாகாண சபை தேர்தல் தொகுதியை எல்லை நிர்ணயம் செய்கின்ற ஆணைக்குழு காரைதீவை பொத்துவில் தொகுதியில் இருந்து சம்மாந்துறையுடன் இணைக்க உத்தேச தீர்மானம் எடுத்து உள்ளதாக செய்திகள் வெளியில் வந்து உள்ளனவே?

பதில்:- காரைதீவு பிரதேச மக்களுக்கு இவை பேரதிர்ச்சி ஊட்டுகின்ற, விரும்ப தகாத, ஆனால் உண்மையான செய்திகளே ஆகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மாகாண சபை தேர்தல் தொகுதிகளுக்கான எல்லைகளை நிர்ணயிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஆணைக்குழு கடந்த 11 ஆம் திகதி சனிக்கிழமை காலை அம்பாறை மாவட்டத்துக்கான எல்லை நிர்ணயம் தொடர்பான அமர்வை நடத்தி உள்ளது. இதில் தமிழரசு கட்சி பங்கேற்று உள்ளது. மேலும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனும் கலந்து கொண்டு உள்ளார். கல்முனையை நான்கு சபைகளாக பிரிப்பது குறித்தே இவ்வமர்வில் பேச உள்ளனர் என்று தமிழரசு கட்சி பிரமுகர்களால் காரைதீவில் உள்ள தமிழரசு கட்சி செயற்பாட்டாளர்களுக்கு சொல்லப்பட்டு இருந்ததாக தற்போது தகவல்கள் வெளியில் வந்து உள்ளன..

ஆனால் பொத்துவில் தொகுதியுடன் இணைக்கப்பட்டு இருக்கின்ற காரைதீவு பிரதேசத்தை பிரித்து சம்மாந்துறை தொகுதியுடன் இணைக்க வேண்டும் என்று ஆணைக்குழுவுக்கு தமிழரசு கட்சி இவ்வமர்வில் பரிந்துரை செய்து உள்ளது. ஆணைக்குழுவும் இப்பரிந்துரையை ஏற்று காரைதீவை சம்மாந்துறை தொகுதியுடன் இணைக்கின்ற உத்தேச தீர்மானத்தை எடுத்து உள்ளது.

ஆனால் மேற்படி அமர்வில் காரைதீவை சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர்கள் எவரும் பங்கேற்று இருக்கவில்லை. மேலும் காரைதீவு மக்களின் அபிப்பிராயம், ஆலோசனை, கருத்து ஆகியவற்றை பெறாமலேயே தமிழரசு கட்சியின் பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அதே போல ஆணைக்குழுவும் காரைதீவு மக்களின் விருப்பத்தை தெரிந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பொத்துவில் தொகுதியுடன் காரைதீவு தொடர்ந்து இருப்பதன் மூலமாக அல்லது கல்முனை தொகுதியுடன் இணைக்கப்படுவதன் மூலமாகவே தமிழர் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்து இருக்க முடியும் என்று அரசியல் அவதானிகள் எடுத்து சொல்கின்றார்கள்.

அரசியல் கட்சிகளின் நலன்களுக்கு அப்பால் ஊரின் நலன்களே எமக்கு முக்கியமானது என்கிற அடிப்படையில் இவ்விடயத்திலும் பாரிய அமுக்க குழுவாக காரைதீவு மகா சபை செயற்படும் என்பதில் மாற்றம் இல்லை.

கேள்வி:- வடக்கு – கிழக்கு இணைப்பு குறித்த விடயத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்:- வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகமே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் அரசியல் அடையாளமாகவும், அபிலாஷையாகவும் இருந்து வருகின்றது. வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை அடைவதற்காகவே ஆயுத ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தமிழ் மக்கள் கடந்த மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாக போராடி வந்திருக்கின்றனர். எத்தனையோ உயிர்கள் இந்த இலட்சிய தாகத்தை அடைவதற்காக ஆகுதிகள் ஆக்கப்பட்டன. நீதிமன்ற தீர்ப்பு ஒன்றின் மூலமாகவே வடக்கு, கிழக்கு தற்போது பிரிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இத்தீர்ப்பை வழங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழுவின் தலைவராகவும், பிரதம நீதியரசராகவும் விளங்கிய சரத் என். சில்வா பிழையான தீர்ப்பை வழங்கி விட்டார் என்று ஓய்வு பெற்ற பிற்பாடு பகிரங்கமாகவே தெரிவித்து கழிவிரக்கப்பட்டு உள்ளார். எனவே அரசாங்கம் இப்பிழையை திருத்தி சரி செய்ய வேண்டியது அவசியம் ஆகும். வடக்கு, கிழக்கு இணைப்பை அரசாங்கம் ஏற்படுத்தி தருவதற்கு ஏனைய சமூகங்கள் இடையூறாக அமைதல் கூடாது. குறிப்பாக முஸ்லிம்கள் வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிரான முன்னெடுப்புகளையும், முயற்சிகளையும் கை விடுதல் வேண்டும். வடக்கு, கிழக்கு இணைப்பு ஊடாகவே தமிழ் – முஸ்லிம் உறவை நிரந்தரமாக கட்டி எழுப்ப முடியும் என்கிற யதார்த்தத்தை புரிந்து நடத்தல் வேண்டும். தமிழ் பேசும் மக்கள் சமயத்தால் வேறுபட்டு உள்ளனரே ஒழிய மொழியால் இணைக்கப்பட்டு உள்ளனர் என்பதால் வடக்கு, கிழக்கு இணைப்பு ஊடாக இவர்களுக்கு எந்த அநியாயமும் நேர போவதே இல்லை. ஆகவே முஸ்லிம் அரசியல் கட்சிகள் வடக்கு, கிழக்கு இணைப்பு மூலமாக முஸ்லிம்களுக்கு தமிழர்களால் அநியாயம் இழைக்கப்பட்டு விடும் என்கிற பரப்புரைகளை கை விட வேண்டும் என்றும் கேட்டு கொள்கின்றேன்.