கிங்ஸ்லி படுகொலை தொடர்பில் அரியநேத்திரனிடம் விசாரிக்க வேண்டும்…! கருணா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி ராஜநாயகம் படுகொலை தொடர்பில் அவருக்கு பிரதியீடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய பா.அரியநேத்திரனிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட காலகட்டத்தில் கிங்ஸ்லி ராஜநாயகம் உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுறை சந்திரகாந்தனுக்கும் தனக்கும் தற்போது எவ்வித தொடர்பும் இல்லை எனவும், புலிகள் அமைப்பில் இணைந்த செயற்பட்ட காலத்தில் தொடர்பினை பேணியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் வரை ஒருவரை குற்றவாளியென எவரும் குறிப்பிட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தான் பிரதியமைச்சராக இருந்த காலத்தில் வன்னியில் இருந்த உள்ளக இடப்பெயர்விற்கு உள்ளான மக்களின் முகாமினை அகற்றி மக்களை மீளக்குடியேறச் செய்தமை உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி பணிகளை தான் மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் தன்னை பயன்படுத்திக்கொண்டதாக பரவலாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகவும் எனினும் தானே அரசாங்கத்தை பயன்படுத்திக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.