கிழக்கில் வெள்ள அபாயம்…

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல் இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணிவரையான 24 மணித்தியாலங்களில் 58.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதயபுரம், மாமாங்கம், திஸவீரசிங்கம் சதுக்கம், ஊறணி உள்ளிட்ட தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில்
பொத்துவில்,  திருக்கோவில்,  லகுகல, பாணமை, அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, மருதமுனை ஆகிய தாழ்நிலப் பிரதேசங்களிலுள்ள மக்களின் குடியிருப்பு வீடுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில்

செவ்வாய்க்கிழமை முதல் இன்று வரை தொடர்ச்சியாக மழை பெய்வதினால் கந்தளாய், கிண்ணியா, தோப்பூர், திருகோணமலை நகரம், புல்மோட்டை, மூதூர் முள்ளிப்பொத்தானை போன்ற பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கி காணப்படுகின்றன.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய்க்குளம், பரவிப்பாஞ்சான் குளம், கல்மெட்டியாவ குளம், வான்எல குளம், அக்போபுர குளங்களின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதால் வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன.