கூட்டு ஒப்பந்த வழக்கை தள்ளுபடி செய்த மேன்முறையீட்டு நீதிமன்ற கட்டளைக்கு எதிராக உயர் நீதிமன்றத்திற்கு விசேட மேன்முறையீடு

தொழில் ஆணையாளரினால் அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு சட்ட அந்தஸ்த்து வழங்கப்பட்ட 2016ஆம் ஆண்டு பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் சட்டத்திற்கு முரணானது என்பதால் அதனை இரத்து செய்யும்படி மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இளையதம்பி தம்பையாவினால் தொடுக்கப்பட்டிருந்த ரிட் மனுவை யூன் 12ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் முதல் நிலை ஆட்சேபனையின் அடிப்படையில் வழக்கு செலவுடன் தள்ளுபடி செய்திருந்தது.

இந்த கட்டளைக்கு எதிராக 24-07-2018 அன்று உயர் நீதிமன்றத்திற்கு விசேட மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக எடுக்கப்படக்கூடிய விசேட நீதிமன்ற நடவடிக்கைகளில் இறுதியாக இருக்கும் இந்த விசேட மேன்முறையீட்டு செய்யப்பட்டுள்ளது.

தொழில் ஆணையாளரினால் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டப் பிறகு கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகள் தொழில் சட்டங்களின் பகுதியாவதால், அவை நடைமுறையில் இருக்கும் தொழிற்சட்டங்களுக்கு முரணாகவோ தொழிலாளர்கள் இதுவரை அனுபவித்து வரும் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவோ இருக்குமாயின் அவற்றுக் சட்ட அந்தஸ்த்து கொடுக்கும் வகையில் அதனை தொழில் ஆணையாளர் பிரசுரிக்க முடியாது. சட்டத்திற்கு விரோதமான 2016 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள கூட்டு ஒப்பந்தத்தை தொழில் ஆணையாளர் பிரசுரித்தமையினால் அதனை நீதிமன்றம் கேள்விகுட்படுத்த முடியும் என்று விசேட மேன்முறையீட்டு மனுவில் சட்டத்தரணி தம்பையா குறிப்பிட்டுள்ளார்;.

அத்துடன் தொழில் ஆணையாளர் ஒரு பகிரங்க அரசாங்க உத்தியோகத்தர் என்பதாலும் அவரால் வெளியிடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் பற்றிய அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க ஆவணம் என்பதாலும் அதன் செல்லுபடியாகும் தன்மை குறித்து பொது நலன் அக்கறைக்குரிய விடயம் என்ற அடிப்படையில் ரிட் மனுவை தொடுக்க அவருக்கு வழக்கிடும் உரிமை இருப்பதாகவும் அவரது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே அவருக்கு வழக்கிடும் உரிமை இல்லை என்று பிரதிவாதிகள் முன்வைத்த முதல்நிலை ஆட்சேபனையின் அடிப்படையில் அவரது மனுவை தள்ளுபடி செய்த மேன்முறையீட்டு நீதிமன்ற கட்டளையை நீக்கி, அவரது மனுவை விசாரணைக்கு ஏற்று, அவர் கோரியுள்ள நிவாரணங்களை வழங்கும்படியும் உயர் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.