கேரள பலாத்கார – படுகொலை: இளம்பெண்ணுக்கு நீதி கோரி தீவிரமாகிறது போராட்டம்

இளம் பெண் பலாத்கார படுகொலை சம்பவத்தைக் கண்டித்து கோழிக்கோட்டில் நடந்த போராட்டம்

 

கேரளத்தில் இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் நீதி கோரி கோழிக்கோட்டில் போராட்டம் நடத்தப்பட்டது. இதுபோல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இச்சம்பவத்துக்கு நீதி கோரி போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. எர்ணாகுளம் மாவட்டம் ராயமங்கலம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் உள்ளது இராவிச்சிரா. இந்த கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் எர்ணாகுளத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் படித்து வந்தார்.

கடந்த வியாழன் அன்று இரவு மாணவி வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். டெல்லி நிர்பயா பலாத்கார சம்பவத்தைப் போல் இச்சம்பவமும் மிகக் கொடூரமாக உள்ளது எனக் கூறி மாநிலம் முழுவதும் ஆங்காங்கே கண்டன போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கோழிக்கோட்டில் கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்பாவூர் சம்பவம்போல் நாளை மாநிலத்தில் வேறு எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். இவ்விவகாரத்தில் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். அதேபோல் ஊடகங்களும் இச்சம்பவத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை எனக் குற்றஞ்சாட்டினர்.

முதல்வர் ஆறுதல்:

பலியான பெண்ணின் தாயாரை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார் முதல்வர் உம்மன் சாண்டி. மேலும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் முதல்வர் உறுதியளித்துள்ளார். தவிர, பலியான சட்ட மாணவியின் சகோதரிக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதல்வர் உத்தரவாதம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக இரண்டு பேரை போலீஸார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மாநிலங்களவையில் எம்.பி.க்கள் வருத்தம்:

மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின்போது கேரள பாலியல் பலாத்கார விவகாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சி.பி.நாராயணன் எழுப்பினார். மிகக் கொடூரமான இந்த சம்பவம் டெல்லி நிர்பயா சம்பவத்துக்கு இணையானது என்றார். கடந்தவாரம் காசர்கோட்டில் ஒரு பலாத்கார சம்பவமும், திருவனந்தபுரத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரு பலாத்கார சம்பவமும் நடந்ததாகக் கூறினார். இது கேரள மாநிலத்துக்கே ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஸார் இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

மலையாளிக்கு அவமானம்

மாநிலங்களை துணைத் தலைவர் குரியன், “இது மிக மோசமான குற்றம். இச்சம்பவத்தால் ஒவ்வொரு மலையாளிக்கும் பெருத்த அவமானம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

பாஜக எம்.பி. தருண் விஜய் பேசும்போது, “கேரள மாநில அரசு இத்தகைய சம்பவங்களை கட்டுப்படுத்த தவறிவிட்டது. எம்.பி.க்கள் குழு ஒன்று கேரளாவுக்கு சென்று உண்மை நிலை அறிய வேண்டும். கடவுளின் தேசம் பலாத்காரர்களின் தேசமாக மாறிவிடக் கூடாது” என்றார்.

இதற்கு பதிலளித்த சமூக நீதித்துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட், “நாளை நான் கேரளா செல்கிறேன். பலியான பெண்ணின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளேன். இந்த வழக்கில் நீதியை நிலைநாட்ட உதவுவேன்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. டி.ராஜா, “நாடு முழுவதும் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமையை தடுக்க போதிய சட்டமில்லை” என்றார்.

(The Hindu)