கைதிகளை ஒரு வாரத்தினுள் விடுவிக்க வேண்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகள் ஒரு வார காலத்துக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே தமது வலுவான கோரிக்கை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப் படுவார்கள் என கடந்த ஜனவரி மாதத்திலிருந்து எதிர்பார்க்கின்றோம், இவர்களின் விடுதலை மேலும் இழுத்தடிக்கப் படக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமது விடுதலையை வலியுறுத்தி இன்றுமுதல் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பிக்கவிருப்பதாக தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தானும், எதிர்க்கட்சித் தலை வர் இரா.சம்பந்தனும் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்ததாகக் குறிப்பிட்ட சுமந்திரன், அவர்களின் விடுதலை மேலும் காலதா மதப்படுத்தப்படக்கூடாது என்றும் கூறி னார்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விபரங்கள் யாவும் நீதியமைச்சரிடம் கையளிக்கப் பட்டுள்ளது. ஜனவரி முதல் இவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப் பில் இருக்கின்றோம். எனினும், அவர்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.

தமது விடுதலையை வலியுறுத்தி அரசியல் கைதிகள் உண்ணாவிரதமிருக்க திட்டமிட்டிருக்கும் நிலையில், ஒரு வார காலத்துக்குள் சகல அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலுவான கோரிக்கை என்றும் சுதந்திரன் எம்.பி தினகரனுக்குத் தெரிவித்தார்.

வழக்குத் தாக்கல்செய்யப்பட்டவர்கள், வழக்கு தாக்கல் செய்யப்படாதவர்கள், காரணமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் என மூன்று பிரிவுகளையும் சேர்ந்த சகல அரசியல் கைதிகளும் ஒரு வார காலத்துக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.