கொலைக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது – சிவநேசதுரை சந்திரகாந்தன்

ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினாருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில்(16)ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியல் நீடிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தை விட்டு வெளியே வரும் போது அங்கு நின்ற ஊடகவியலாளர்களிடம் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் 2005ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தில் திருப்பலி பூசையில் ஈடுபட்டுக்கொணடிருந்த நாடாளுமன்ற உறப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் தேவாலயத்தினுள் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும்.

இக் கொலைச் சம்பவத்திற்கும் எனக்கும் எனது தமிழ் மக்க்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதனை கிழக்கு மாகாண மக்கள் குறிப்பாக கிறிஸ்த்தவ மக்கள் நன்கு அறிவார்கள்.

கிழக்கு மண்ணையும் மக்களையும் நேசிக்கும் நான் நிரபராதியாக வெளியில் வருவேன்

தற்போது ஏற்பட்டிருக்கின்ற ஆட்சி மாற்றத்தினை சாதகமாக்கிக் கொண்டு என்மீது சேறுபூச முற்படுவது திட்டமிட்ட நாகரிகமற்ற அரசியல் பழிவாங்கல் என்பதனை கிழக்கு மக்கள் நன்கு உணர்வார்கள்.

தமிழர் முஸ்லிம் சிங்களவர் என்றோ இந்து இஸ்லாம் கிறிஸ்தவம் பௌத்தம் என்றோ ஒருபோதும் வேற்றுமை பார்ப்பவன் நான் அல்ல. உலக மக்களின் விடியலுக்காய் உயிர்ப்பித்த யேசுபாலகன் பிறந்த இம் மாத்தில் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய என்னை கைது செய்து சிறையில் தள்ளி அரசியல் பழி தீர்க்க முற்படுவதனை எந்த மட்டக்களப்பு கிறிஸ்த்தவர்களும்ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் இங்கு தெரிவித்தார்.