‘கொழும்பிலிருந்து ஓநாய் ஒன்று ஊளையிடுகின்றது’

வடமாகாண சபையைப் பற்றி கொழும்பிலிருந்து ஓநாயொன்று நேற்று வியாழக்கிழமை (17) ஊளையிட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பசுபதிப்பிள்ளை தெரிவித்தார். வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தின் சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இன்று வெள்ளிக்கிழமை (18) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ‘ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லை என்பது போல, ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்யாமல் அதிக நிதி கோரும் நடவடிக்கையில், வடமாகாண சபை செயற்படுகின்றது’ என நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (17) தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் விதத்தில் பசுபதிப்பிள்ளை மேற்கண்டவாறு கூறினார். ‘வடக்கு கிழக்கில் இராணுவம் வீடுகளை அழிக்கவில்லையென்றால் பேய்களா வீடுகளை அழித்தன?’ என உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார். கிளாலி ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்தை, அங்கேயே மீள ஆரம்பிக்க வடமாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதனை சாவகச்சேரிக்கு மாற்ற வடமாகாண சபை உறுப்பினர் ஒருவர் முயற்சிக்கின்றார் என சுகாதார அமைச்சர் ப.சத்தியசீலன் கூறினார்.