’சந்தேகநபரை விடுவிக்குமாறு, ரிஷாட் என்னிடம் 3 முறை கோரினார்’

இது தொடர்பில் அவர் கோரியது உதவியே தவிர, இதனை ஓர் அழுத்தமாக எவரும் பார்க்கவேண்டாமெனவும், இராணுவத் தளபதி கேட்டுக்கொண்டார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் அதற்காக அவர் அளித்த பதில்கள் வருமாறு,

கேள்வி: சந்தேகநபரொருவரை விடுவிக்குமாறு, அமைச்சர் ரிஷாட், உங்களுக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறதே, இதன் உண்மைத் தன்மை என்ன?

பதில்: அமைச்சர், என்னோடு அலைபேசியில் உரையாடினார். குறிப்பிட்டதோர் நபரின் பெயரைக் கூறினார். அந்த நபருடனான தொடர்பு பற்றியும் கூறினார். என்னால் செய்யக்கூடியது பற்றியும் என்னிடம் கேட்டார்.

கேள்வி: அந்தச் சந்தேகநபரை விடுவிக்குமாறு, அழுத்தம் கொடுத்தாரா?

பதில்: முதலாவது அழைப்பின் போது, தேடிப்பார்க்கிறேன் என்றே கூறினேன். இரண்டாவது அழைப்பை அவர் மேற்கொள்ளும் போதும், அது குறித்துத் தேடிப்பார்க்க, எனக்கு நேரம் கிடைக்கவில்லை. மூன்றாவது அழைப்பை மேற்கொண்ட போது, இன்னும் ஒன்றரை வருடங்களின் பின்னர் பேசுமாறும் அப்போது நான் அதற்கு விடை தேடிக் கூறுகிறேன் என்றும் சொன்னேன்.

கேள்வி: அமைச்சர் குறிப்பிட்ட சந்தேகநபர் யார்?

பதில்: மொஹமட் போன்ற பெயர்கள் பல இருக்கின்றன. எனக்கு சரியாக நினைவில் இல்லை. பின்னர் பெயரைத் தேடிக் கூறுகிறேன். ஆனால் ஒரு விடயம் மாத்திரம் நினைவில் இருக்கிறது. ​அந்தச் சந்தேகநபர், தெஹிவளையில் கைது செய்யப்பட்டவராவார். எனக்குள்ள அதிகாரங்களின்படி, இவ்வாறான சந்தேகநபரொருவரை, ஒன்றரை வருடங்கள் வரை தடுப்பில் வைத்திருக்கலாம்.